under review

மகேந்திரவாடி குடைவரைக் கோவில்

From Tamil Wiki
Mahendravadi.jpg

மகேந்திரவாடி குடைவரைக் கோவிலபபல்லவ மன்னன்மகேந்திரவர்மன் காலத்தில் (பொ.யு 590 -630) கட்டப்பட்ட குடைவரைக் கோவில். இக்கோவில் மகேந்திர விஷ்ணு கிருஹம் என்றழைக்கப்படுகிறது. இக்குடைவரை பல்லவர் காலத்தில் எழுப்பப்பட்ட ஒரு சில விஷ்ணு ஆலயங்களில் ஒன்று.

இடம்

கருவறை
கே.ஆர். ஸ்ரீனிவாசனின் “The Cave Temples of Pallavas” புத்தகத்திலிருந்து

இக்குடைவரை வேலூர் மாவட்டம் அரக்கோணம் வட்டத்திலுள்ள மகேந்திரவாடி கிராமத்தில் உள்ளது. சோளிங்கர் ரயில் நிலையத்திலிருந்து நான்கு மைல் தொலைவில் இக்குடைவரை உள்ளது.

குடைவரை

கல்வெட்டு அமைந்த தூண்

மகேந்திரவாடி குடைவரை சுற்றிலும் வெட்டவெளி கொண்ட தனித்த பாறையில் அமைக்கப்பட்டுள்ளது.

முகப்பு

மகேந்திரவாடி குடைவரையின் முகப்பு இரண்டு தூண்களும், இரண்டு அரைத்தூண்களும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. குடைவரையின் மேற்பகுதி சதுரங்களாக வெட்டப்பட்டு கைவிடப்பட்டது தெரிகிறது.[1] தூண்கள் சதுரம், கட்டு[2], சதுரம், போதிகை என்ற அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளன. போதிகை சிறிய அலைகள் கொண்ட அமைப்பில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. தரங்க போதிகை கொண்டு அமைக்கப் பெற்ற முதல் பல்லவர் காலக் குடைவரைக் கோவில் இது. ஆனால் இதில் தரங்க போதிகை முழுமையாக உருவாக்கப்படவில்லை. தூணின் சதுரப் பகுதியில் பத்மம் வட்ட அலங்காரமாக செய்யப்பட்டுள்ளது.

மண்டபம்

பல்லவர் கால குடைவரைகள் போல் முக மண்டபம், அர்த்த மண்டபம் பிரிவு மகேந்திரவாடி குடைவரையிலும் உள்ளன. அதனை பிரிக்கும் தூண்களும் உள்ளன.

கருவறை

கல்வெட்டில் மகேந்திர விஷ்ணு கிருஹம் என்ற குறிப்பு உள்ளதால் இது விஷ்ணுவிற்காக அமைக்கப்பட்ட கோவில் என அறிய முடிகிறது. கருவறையின் உள்ளே பல்லவர் கால திருமேனி இப்போது இல்லை. பிற்காலத்தைய நரசிம்மர் சிற்பம் மட்டுமே இப்போது உள்ளது. கருவறையில் பாத பந்த ஆதிஷ்டானம் எழுப்பப்பட்டது காணமுடிகிறது. ஆதிஷ்டானம் உபானம், ஜகதி, குமுதத்திற்கு மேல் சுவர் எழுப்பப்பட்டுள்ளது.

துவார பாலகர்கள்

கருவறையின் முன்னே சுவர்களில் வாயிற்காப்பாளர்கள் எனப்படும் துவார பாலகர்களின் புடைப்புச் சிற்பம் உள்ளது. துவார பாலகர்கள் தலையில் கரண்ட மகுடம் கொண்டு, பலவித பத்ர குண்டலகளுடன் காட்டப்பட்டுள்ளனர். இடது கையை இடையில் கடி ஹஸ்தமும், வலது கை பல்வ ஹஸ்தமும் கொண்டு காட்டப்பட்டுள்ளனர்.

தடாகம்

இக்குடைவரையின் முன்பாக மகேந்திரவர்மன் காலத்தில் அமைக்கப்பெற்ற தடாகம் மகேந்திர தடாகம் என்றழைக்கப்படுகிறது.

சிற்பம்

இக்குடைவரை கோவிலின் அருகே அமைக்கப்பெற்ற விநாயகர் சிற்பமும் இப்போது வழிபாட்டில் உள்ளது. இது காலத்தால் பிந்தையது.

கல்வெட்டு

  • முகப்பில் தெற்கு பகுதியிலுள்ள அரைத்தூணில் பத்மம் போன்ற அலங்காரத்திற்கு கீழே நான்கு வரி பல்லவ கிரந்த கல்வெட்டு காணப்படுகிறது.

”மஹிதாதமம் ஸ்தாமுப மகேந்த்ர தடாகமித
ஸ்திரமுருநாரிதம் குணபரேண விதார்ய ஹிலாம்
ஜனநாயனாபிரம குணநாமி மஹேந்த்ர புரெ
மஹதி மஹேந்த்ர விஷ்ணுக்ருஹா நாம முராரிக்ருஹ

  • மகேந்திர தடாகத்தின் அருகிலுள்ள பாறையில் குனபேந்திரன் எழுப்பிய மகேந்திரபுரி நகரிலுள்ள முராரி கோவில் (விஷ்ணு கோவில்) மகேந்திர விஷ்ணு க்ருஹம் என்றழைக்கப்படுகிறது. அதன் அழகை நன் மக்கள் உயர்ந்து போற்றியுள்ளனர் என்ற குறிப்பு உள்ளது.

உசாத்துணை

வெளி இணைப்புகள்

அடிக்குறிப்புகள்

  1. கோவில் கட்டும் போது சதுரங்களாக வெட்டி அதிலிருந்து வேலையை தொடங்குவது வழக்கம். குடைவரைக் கோவிலை மேலிருந்து கீழ் என்ற நிலையிலே கட்டுவர்.
  2. எட்டு பட்டை கொண்ட அமைப்பு


✅Finalised Page