ப. தமிழ்மாறன்
ப.தமிழ்மாறன் ( பிறப்பு: ஜூலை 18, 1961) மலேசியாவின் தமிழாய்வாளர். கல்லூரி ஆசிரியர். கூலிம் நவீன இலக்கியக் களம் அமைப்பின் செயல்பாட்டாளர்களில் ஒருவர்.
பிறப்பு, கல்வி
தமிழ்மாறன், கெடா மாநிலத்தின் பாடாங் செராய் பகுதியிலிருக்கும் விக்டோரியா தோட்டத்தில் ஜூலை 18, 1961 அன்று பல்ராம் - கமலா இணையரின் மூத்த மகனாகப் பிறந்தார்.
தமிழ்மாறன் விக்டோரியா தமிழ்ப்பள்ளியில் 1968 தொடங்கி 1973 வரை தொடக்கக்கல்வியைப் பயின்றார். பாடாங் செராய் இடைநிலைப்பள்ளியில் படிவம் மூன்று வரையிலும் கூலிம் இடைநிலைப்பள்ளியில் ஐந்தாம் படிவம் வரையிலும் பயின்றார். தன்னுடைய ஆறாம் படிவக் கல்வியைச் சுங்கைப்பட்டாணியில் கிர் ஜொகாரி இடைநிலைப்பள்ளியில் 1979-ம் ஆண்டு நிறைவு செய்தார். ஸ்ரீ கோத்தா ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் வரலாற்றுப்பாடத்தை முதன்மைப்பாடமாக 1981-ம் ஆண்டு பயின்றார்.
தனிவாழ்க்கை
தமிழ்மாறன் பேராக் மாநிலத்தின் லெங்கோங் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரியத் தொடங்கினார். 1990 முதல் 2001 வரையில் கூலிம் கான்வெண்ட் இடைநிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். 2001-ம் ஆண்டு தொடங்கி 2019-ம் ஆண்டு வரையில் சுங்கைப்பட்டாணி ஆசிரியர் கல்விக்கழகத்தின் தமிழ்த்துறை விரிவுரைஞராகப் பணியாற்றினார். 2020-ம் ஆண்டு தொடங்கி 2021-ம் ஆண்டு வரையில் பினாங்கு ஆசிரியர் கல்விக்கழகத்தில் விரிவுரைஞராகப் பணியாற்றி 2021-ம் ஆண்டு பணி நிறைவு பெற்றார்.
தமிழ்மாறன் – சரஸ்வதி இணையருக்கு சக்திபாரதி, பூர்ணபாரதி, சூர்யபாரதி ஆகிய மூன்று குழந்தைகள் இருக்கின்றனர்.
இலக்கியப்பணிகள்
தமிழ்மாறன் மலேசியத் தமிழ் அறிவுச்சூழலில் ஏராளமான கருத்தரங்குகளில் கட்டுரைகளைப் படைத்திருக்கிறார். உலகத் தமிழிலக்கிய மாநாடு, பன்னாட்டுத் தமிழ் இணைய மாநாடு கருத்தரங்குகளில் மிக விரிவான ஆய்வுக்கட்டுரைகளைப் படைத்திருக்கிறார். தொடர்ச்சியாக இதழ்களில் நூல்மதிப்புரைகள் எழுதுவது, உரைகள் ஆற்றுவது என செயல்பட்டார்.
தலைமையாசிரியராகவும் பாரதி நெஞ்சராகவும் பல பணிகள் ஆற்றிய குழ.ஜெயசீலன் எனும் தமிழ்த்தொண்டரின் வாழ்வையும் செயற்பாடுகளையும் நூலாகத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார்.
அமைப்புப்பணிகள்
பாரதிமேல் ஈடுபாடு கொண்ட தமிழ்மாறன் பாரதியை அறிவார்ந்த நோக்கில் வெகுமக்களிடம் கொண்டு சேர்க்கும் தொடர் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். தமிழுக்குத் தொண்டாற்றிய சான்றோர்களைத் தேர்ந்தெடுத்துப் ‘பாரதி நெஞ்சர்’ விருது வழங்கி சிறப்பித்திருக்கிறார்.
இதழியல்
தமிழ்மாறன் பணியாற்றிய சுல்தான் அப்துல் ஹலிம் ஆசிரியர் பயிற்சிக்கழகத்தில் 2002-ம் ஆண்டு தொடங்கி 2017-ம் ஆண்டு வரை ‘இளவேனில்’ எனும் இலக்கிய இதழை பயிற்சி ஆசிரியர்களைக் கொண்டு வெளியீடும் பொறுப்பாண்மைக் குழுவின் ஆலோசகராகப் பங்களித்திருக்கிறார்.
கல்விப்பணி
தமிழ்மாறன் ஆசிரியராக மாணவர்களிடம் தமிழிலக்கிய அறிமுகத்தை உருவாக்கியவர். தமிழ்மொழிப் பாட நூல் தயாரிப்புக் குழுவிலும் தலைவராகவும் உறுப்பினராகவும் பங்களித்திருக்கிறார். ஆசிரியர் பயிற்சிக்கழகத்தின் தமிழிலக்கியப் பாடத்திட்டப் பரிந்துரைக் குழுவிலும் தமிழ்மாறனின் பங்களிப்பு உண்டு. தமிழை முதன்மைப் பாடமாகத் தெரிவு செய்து இளங்கலைப் பட்டயக் கல்வி மேற்கொள்ளும் ஆசிரியர் பயிற்சிக்கழக மாணவர்கள் பயில வேண்டிய நாவல், கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் ஆகியவற்றைத் தேர்வு செய்தளிக்கும் குழுவில் தமிழ்மாறன் பணியாற்றியிருக்கிறார். நவீனத் தமிழிலக்கியத்தின் பல முக்கியமான சிறுகதைகளை உள்ளடக்கி பாடத்திட்டத்தை வடிவமைத்திருக்கிறார். மலேசிய முழுமையிலும் பல ஆசிரியர்களுக்கு ஆசிரியத் திற மேம்பாட்டுப் பணிமனைகளை நடத்தியிருக்கிறார்.
இலக்கிய இடம்
மலேசியச் சூழலில் பாரதியின் புகழ்பரப்புபவராகவும், நவீன இலக்கியத்தை அறிமுகம் செய்பவராகவும் பணியாற்றிவருபவர் தமிழ்மாறன்.
உசாத்துணை
தமிழ்மாறன் ஆளுமைகளை உருவாக்கும் ஆசான்- அர்வின் குமார் -
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
25-Nov-2022, 05:22:32 IST