under review

போர்ட் ஸெய்ன்ட் ஜார்ஜ் கெஜெட்

From Tamil Wiki
ஃபோர்ட் ஸெய்ன்ட் ஜார்ஜ் கெஜெட் - அரசு இதழ்

போர்ட் ஸெய்ன்ட் ஜார்ஜ் கெஜெட் (ஃபோர்ட் ஸெய்ன்ட் ஜார்ஜ் கெஜெட்) (Fort Saint George Gazette) (1832) பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அரசின் திட்டங்கள், திட்ட அறிக்கைகள், மதிப்பீடுகள், மசோதாக்கள், விதிமுறைகள் போன்ற செய்திகளைத் தாங்கி வந்த அரசு இதழ். தமிழின் முதல் இருமுறை வார இதழாக போர்ட் ஸெய்ன்ட் ஜார்ஜ் கெஜெட் அறியப்படுகிறது.

பதிப்பு, வெளியீடு

பிரிட்டிஷ் அரசாங்கத்தில், மக்கள் நலனுக்கான திட்டங்கள், செயலாக்கங்கள், வரிகள், மசோதாக்கள் பற்றி துறை சார்ந்த அதிகாரிகளும் மக்களும் முழுமையாக அறிந்துகொள்வதற்காக ஜனவரி 4, 1832-ல் தொடங்கப்பட்ட வார இதழ் போர்ட் ஸெய்ன்ட் ஜார்ஜ் கெஜெட் (The Fort St. George Gazette). இது வாரம் இருமுறை இதழாக வெளிவந்தது. பின் வார இதழாக வெளியானது. வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மாலை வெளியான இவ்விதழின் விலை இரண்டு அணா, ஆறு பைசா. தமிழ் மட்டுமல்லாமல், ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளிலும் இவ்விதழ் வெளியானது. சென்னை அரசு அச்சகத்தில் இவ்விதழ் அச்சடிக்கப்பட்டது.

உள்ளடக்கம்

மக்கள் நலத் திட்டங்கள், அவற்றுக்கான விதிமுறைகள், மசோதாக்கள், சொத்து வரி விதிப்பது, யாத்திரைகளுக்கான வரி, பார வண்டிகளுக்கான வரி என்று பல்வேறு வரி விதிப்புகள் பற்றிய விதிமுறைகள் எனப் பல செய்திகள், விளக்கங்கள், அறிவிப்புகள் இந்த இதழில் வெளியாகின.

சொத்து வரி

சொத்து வரி விதிப்பது பற்றிய குறிப்பு கீழ்காணுவது:

6. சொத்து வரி விதிக்கும் காரியங்களுக்காக யாதொரு நிலம் அல்லது கட்டிடத்தின் மதிப்பானது - அந்த வரி அக்கிரசனாதிபதியால் செலுத்தப்படக்கூடியதாயிருக்கும் விஷயங்களிலன்றி மற்றப்படி, அக்கிராசனாதிபதியால் தீர்மானிக்கப்படும்.

7. அக்கிராசனாதியானவர் - தம்மால் தீர்மானிக்கப்பட்ட சகல நிலங்கள், கட்டிடங்கள் ஆகிய இவைகளின் வருஷவரி வாடகை மதிப்பையும் அல்லது மூலதன மதிப்பையும் அவைகளின் மேல் செலுத்தத்தக்க வரியையும் இது விஷயத்துக்காக மியுனிஸிபல் ஆபிஸில் வைத்துவைக்கப்படும் வரி விதிப்பு புஸ்தகங்களில் பதிவு செய்யவேண்டும். விதிக்கத்தக்க ஒவ்வொரு பாபத்தின் விஷயமாகவும் நிச்சயித்தறியக்கூடியமட்டில் அடியிற் கண்ட விவரங்களை ஷ புஸ்தகங்களில் எழுதிவைக்கவேண்டும் :-

(a) சொந்தக்காரரின் பெயர் ;

(b) அனுபோகதாரரின் பெயர் ;

(c) க்ஷஷ பாபத்துக்குப் பெயர் ஏதேனும் இருந்தால் அது;

(d) அது யாதொரு வார்டிலும் தெருவிலும் இருந்தால் அந்த வார்டின் பெயரும் தெருவின் பெயரும், அதற்குக் கொடுத்திருக்கிற யாதொரு ஸர்வே நம்பரும் அல்லது இதர நம்பரும்;

(e) சந்தர்ப்பத்துக்கேற்றபடி வருஷாந்த வாடகை மதிப்பு அல்லது மூலதன மதிப்பு;

(f) செலுத்தத்தக்க வரித் தொகை.

8. (1) வரி விதிப்பு புஸ்தகங்களை, ஐந்து வருஷத்துக்கு ஒரு முறை அக்கிராசனாதிபதி முழுவதும் புனராலோசனை செய்து திருத்தவேண்டும்.

(2) அக்கிராசனாதிபதியானவர் - பொதுவாய்ப் புனராலோசனை பண்ணி செய்யும் யாதொரு திருத்தத்துக்கும் மற்றொரு திருத்தத்துக்கும் இடையில், வரி விதிப்பு புஸ்தகங்களில் யாதொரு சொத்தைச் சேர்த்தோ, அவைகளிலிருந்து யாதொரு சொத்தை நீக்கியோ, அல்லது யாதொரு சொத்தின் மதிப்பையாவது வரித்தொகையையாவது மாற்றியோ அவைகளைத் திருத்தலாம். அந்தத் திருத்தமானது எந்த அரை வருஷத்தில் செய்யப்படுகிறதோ அந்த அரை வருஷ முதல் செலாவணியாகும்.

ஆனால், க்ஷ திருத்தமானது யாதொரு அரை வருஷத்துக்காக டிமாண்ட் நோடிஸ் பிறப்பிக்கப்பட்ட பிறகு அந்த அரை வருஷத்தில் செய்யப்பட்டால், அது - அடுத்துவரும் அரை வருஷத்திலிருந்து மாத்திரமே செலாவணியாகும்.

ஆவணம்

போர்ட் ஸெய்ன்ட் ஜார்ஜ் கெஜெட் இதழின் சில பிரதிகள் தமிழ் இணைய மின்னூலகத்தில் சேகரிக்கப்பட்டுள்ளன.

உசாத்துணை


✅Finalised Page