under review

பொன்னுசாமிப் படையாச்சி

From Tamil Wiki
பொன்னுசாமி படையாச்சி
பொன்னுசாமி படையாச்சி, சிவாஜி கணேசனுடன்

பொன்னுசாமிப் படையாச்சி (1913- 1984 ) (பொன்னுசாமிப் படையாட்சி) நாடகக் கலைஞர், தொழில்முறை நாடகக் குழுக்களில் நடிகராகவும் நாடகப்பயிற்சியாளராகவும் பணிபுரிந்தார். நாடக ஆசிரியராகவும் இருந்தார். சிவாஜி கணேசன் தனக்கு பொன்னுசாமிப் படையாச்சி நடிப்பு சொல்லிக் கொடுத்ததாக வாழ்க்கைக்குறிப்பில் கூறியுள்ளார்.

பிறப்பு கல்வி

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த தரசூர் என்ற கிராமத்தில், 1913-ம் ஆண்டு ஒரு விவசாயக்குடும்பத்தில் ராமசாமிப் படையாச்சி-மாணிக்கம் அம்மாள் இணையருக்கு பிறந்தார் .

தனிவாழ்க்கை

ராமசாமி படையாச்சியின் மனைவியின் பெயர் ரங்கநாயகி.

நாடக வாழ்க்கை

சிறு வயதிலேயே, ஓடக்கநல்லூர் பழனிவேல் வாத்தியாரின் தெருக்கூத்து, துரையப்பா சேதுவராயரின் ( வன்னியர்) நாடகம் போன்றவற்றால் பெரிதும் ஈர்க்கப்பட்ட சின்ன பொன்னுசாமி, தமது பனிரண்டு வயதிலேயே நாடகத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டார். 1927-ம் ஆண்டு சிதம்பரத்தை அடுத்த வாக்கூரில் நடந்த அரிச்சந்திரா நாடகத்தில், லோகிதாசன் வேடத்தில் சின்ன பொன்னுசாமி நடித்துக் கொண்டிருந்தார். அப்போது, மதுரை ஜெகநாத ஐயர் கம்பெனியின் சார்பில், சேத்தியாதோப்பில் நாடகம் நடந்துகொண்டு இருந்தது. அதில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்த எதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை வாக்கூரில் நடந்த நாடகத்தை காண வருகை தந்தார். லோகிதாசன் வேடத்தில் நடித்த சின்ன பொன்னுசாமியின் நடிப்பைக் கண்டு கடுகு போல தோற்றத்தில் சிறிய அளவில் இருந்தாலும், நடிப்பில் வீரியத்தின் வீச்சு குறையவே இல்லை என்றும் பாராட்டினார். அன்று முதல், சின்ன பொன்னுசாமி, கடுகு பொன்னுசாமி என்றும் அழைக்கப்பட்டார்.

சின்ன பொன்னுசாமியை தன்னுடன் சென்னைக்கு அழைத்து சென்ற யதார்த்தம் பொன்னுசாமி, தாம் நடிக்கும் நாடகங்களில், சின்னவருக்கு ஸ்திரீ பார்ட் (பெண் வேடங்கள்) வாங்கிக் கொடுத்தார். எதார்த்தம் பொன்னுச்சாமிப் பிள்ளையிடமிருந்து வேறுபடுத்துவதற்காக இவரை சின்னப் பொன்னுச்சாமி என அழைத்தனர். பதிபக்தி, பம்பாய் மெயில், கதரின் வெற்றி போன்ற நாடகங்களில் வசனம் எழுதினார். அரசு தடை செய்த கதரின் வெற்றி என்ற நாடகத்தில் வசனம் எழுதிய சின்னப் பொன்னுசாமிக்கு சிறைத்தண்டனை கிடைத்தது. அந்நாடகத்தை சற்று மாற்றி கதரின் பக்தி என்ற பெயரில் மீண்டும் நடத்தினார்

1933-ம் ஆண்டு எதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளை தனியாக மதுரை ஸ்ரீமங்களபாலகான சபா என்ற பெயரில் நாடக கம்பெனியை தொடங்கினார். சின்னப் பொன்னுசாமி அந்த கம்பெனியின் நாடக ஆசிரியராகவும், நடிப்புப் பயிற்சியாளராகவும் இருந்தார். 1934-ம் ஆண்டு, அந்த கம்பெனியின் நாடகம் திருச்சி தேவர் ஹாலில் நடைபெற்றபோது. அப்போது ஏழு வயதே நிரம்பிய சிவாஜி கணேசன் மற்றும் காக்கா ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு நடிப்புப் பயிற்சி அளித்தார்.

சி.என்.அண்ணாத்துரை எழுதிய ஓர் இரவு, வேலைக்காரி போன்ற நாடகங்களுக்கும் வசங்களை எழுதிய சின்ன பொன்னுசாமி, நடிப்பிசை புலவர் என அழைக்கப்பட்ட கே.ஆர்.ராமசாமியை நடிக்கவைத்தார். எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடித்த மனோகரா, இழந்த காதல், லட்சுமி காந்தன் போன்ற நாடகங்களையும் வசனம் எழுதி இயக்கினார்.

அரசியல்

சின்னப் பொன்னுசாமி சட்டமன்ற தேர்தலில், சிதம்பரம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார்.

மறைவு

சின்னப் பொன்னுசாமி 1984-ம் ஆண்டு காலமானார்.

விருதுகள்

இருவர் உள்ளம் என்ற நாடகம் தஞ்சாவூர் ராபின்சன் ஹாலில் நடந்தபோது தலைமை தாங்கிய ஈ.வெ.ராமசாமிப் பெரியார் அவருக்கு 101 ரூபாயை பரிசாக வழங்கினார்.

திருவனந்தபுரம் ராஜ குடும்பத்தின் சார்பிலும், தசாவதாரம் கண்ணையா சார்பிலும், நவீன நாடகங்களில் தந்தை என்று போற்றப்பட்ட பம்மல் சம்பந்தம் சார்பிலும், மூன்று முறை தங்கப்பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கலைமாமணி விருது மற்றும் பொற்கிழி வழங்கி தமிழக அரசு பாராட்டி உள்ளது.

உசாத்துணை


✅Finalised Page