under review

பெருமண்டூர் சந்திரநாதர் கோயில்

From Tamil Wiki
பெருமண்டூர் சந்திரநாதர் கோயில் (நன்றி பத்மாராஜ்)

பெருமண்டூர் சந்திரநாதர் கோயில் (பொ.யு. 11-ம் நூற்றாண்டு) வடதமிழ்நாட்டு (தொண்டைமண்டல) விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்த சமணக் கோயில்.

இடம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், பெருமண்டூரில் அமைந்துள்ள கோயில். பெருமண்டூரில் ஆதிநாதர் கோயிலுக்கும் தெற்கில் சந்திரநாதர் ஆலயம் உள்ளது. இவ்வூர் மக்கள் பெரியகோயில் என அழைக்கின்றனர். பொ.யு. 11-ம் நூற்றாண்டிலிருந்து புகழ் மிக்க சமணத்தலம்.

வரலாறு

கல்வெட்டுச்சான்றுகள் இல்லையெனினும், இக்கோயிலின் கலைப்பாணியும், இதிலுள்ள சந்திரநாதர் சிற்பமும் இக்கோயில் பொ.யு. 11-ம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதைக் கூறுகிறது. கோவிலின் அமைப்பு 16-ம் நூற்றாண்டில் புனரமைப்பு நிகழ்ந்ததைக் கூறுகிறது.

பெருமண்டூர் கோயில் சிற்பங்கள்

அமைப்பு

சந்திரநாதர் கோயில் கருவறை, அந்தராளம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், முகமண்டபம், பலிபீடம், உருச்சுற்றுமதில், கோபுரம் ஆகிய பகுதிகளைக் கொண்டது. இவற்றுள் கருவறை, அந்தராளம், அர்த்தமண்டபம் ஆகியவை செங்கல்லால் கட்டப்பட்டது. பிறபகுதிகள் கருங்கல்லினால் கட்டப்பட்டது. இக்கோயிலின் அடித்தளம் உபானம், கண்டரம், மகாபட்டிகை, ஜகதி திரிபட்டக்குமுதம், கலப்பகுதி, மேல்பட்டிகை ஆகிய வரிசைகளைப் பெற்றது.

கருவறை, அர்த்தமண்டபம் ஆகியவற்றின் வெளிச்சுவர்கள் ஒரேநேராக இன்றி குறிப்பிட்ட இடைவெளிகளில் முன்னோக்கிப் பிதுங்கியும், அதனையடுத்து உள்நோக்கிக் குழிந்தும் கர்ணம், பத்திரம், சலிவாந்தரம் என்ற அமைப்புகளுடன் முன்னும், பின்னுமாக விளங்குகிறது. வெளிச்சுவர்களை அரைத்தூண்களும் அவற்றிற்கிடைப்பட்ட பகுதிகளைக் தேவகோட்டங்களும் அலங்கரிக்கின்றன. கருவறையின் கூரைக்கு மேலுள்ள விமானப்பகுதி மூன்று தளங்களையுடையதாய், அவற்றில் கூடம் சாலை எனப்படும் சிற்றுருவக் கோயில்களையும் அவற்றிற்கிடைப்பட்ட பகுதிகளில் தீர்த்தங்கரர், யக்ஷன், யக்ஷி முதலியோரது சுதை வடிவங்களையும் கொண்டது. இவற்றிற்கு மேலாக உருண்டை வடிவ சிகரமும், ஒற்றைக்கலசமும் காணப்படுகின்றன. கருவறை, அர்த்தமண்டபம் ஆகியவற்றின் அடித்தளத்திலிருந்து சிகரம் வரையிலும் செங்கல், சுண்ணாம்புச் சாந்து ஆகியவற்றால் இக்கோயில் கட்டப்பட்டது.

அர்த்தமண்டபத்திலுள்ள தூண்கள் பொதுவான வழக்கத்திற்குமாறாக மெல்லியதாக இருப்பதோடு போதிகையின் அடிப்பகுதி முழுவதும் பெரிய அளவிலான தரங்க அமைப்பினைக் கொண்டது. பிற கோயில்களில் இல்லாத தனித்தன்மையான தூண்கள். கருவறை அர்த்தமண்டபம், மூலவர்கல் சிற்பமும் பொ.யு. 11-ம் நூற்றாண்டுக் கலைப்பாணியில் உள்ளது.

பெருமண்டூர் கோயில் உலோகப் படிமங்கள் சிற்பங்கள்

பொ.யு. 11-ம் நூற்றாண்டில் கருவறை அந்தராளம், அர்த்தமண்டபம் ஆகியவற்றைக் கொண்டிருந்த இக்கோயில் பொ.யு. 13 அல்லது 14-ம் நூற்றாண்டில் மகாமண்டபம், ஆகிய பகுதிகளையுடையதாய் விரிவாக்கம் பெற்றது. பொ.யு. 16-ம் நூற்றாண்டில் புனரமைப்பு செய்துள்ளனர். அப்போது கருவறையில் முன்பிருந்த முலவர் திருவுருவம் அகற்றப்பட்டு, அதற்குப் பதிலாகப் பெரிய அளவிலான சுதைவடிவம் நிறுவப்பட்டிருக்கிறது. இறுதியாக 1975-ல் செய்யப்பட்ட புனரமைப்பில் பண்டைய கலைப்பாணி பெருவாரியாக மறைந்துவிட்டது. இந்தகோயிலில் மானஸ்தம்பம் நிறுவப்படவில்லை.

சிற்பங்கள், சுதை வடிவங்கள் படிமங்கள்

மகாமண்டபத்தின் வடக்குச்சுவரை ஒட்டி வைக்கப்பட்டுள்ள மூன்றடி உயரமுள்ள கருங்கல்லினாலான சந்திரநாதர் திருவுருவமே இக்கோயிலின் பழமையான சிற்பம். பீடத்தின் முன்பகுதியில் மூன்று சிங்கங்களின் சிற்றுருவங்கள் உள்ளன. இத்தேவரது தலைக்கு மேல் முக்குடை அழகுறச் செதுக்கப் பட்டிருக்கின்றன. அடியிலுள்ள குடையின் விளிம்பில் சிறிய மாலைகள் தொங்குவது போன்று காட்டப்பட்டுள்ளது. இவர் வீற்றிருக்கும் சிம்மாசனத்தில் இரண்டு சிங்கங்கள் முன்கால்களைத் தூக்கியவாறும், அவற்றின் தலைப்பகுதியை ஒட்டினாற்போல் மகரங்கள் முன்னோக்கி நின்ற வாறும் உள்ளன.

மகாமண்டபத்தினுள் தருமதேவியின் சிற்பம் ஒன்றும், பார்சுவ நாதர், பாகுபலி ஆகியோர் சிற்பங்களும் இடம் பெற்றுள்ளது. இவையனைத்தும் பொ.யு. 16-ம் நூற்றாண்டைச் சார்ந்தவை. பீடமொன்றில் தருமதேவியின் சிலை உள்ளது.

பார்சுவ நாதர், பாகுபலி ஆகியோரது சிற்பங்கள் மண்டபத்தின் மேற்குச்சுவரில் மாடங்கள் போன்ற அமைப்பினுள உள்ளன. கருவறையில் பத்து அடி உயரமுள்ள சந்திரநாதரின் சுதை வடிவம் உள்ளது. இங்கு சந்திரநாதர் கருவறையில் பார்சுவ நாதரின் யஷனாகிய தரணேந்திரனையும், யக்ஷியாகிய பத்மாவதியும் உள்ளன. கருவறையில் இடம் பெற்றிருக்கும் இவ்வனைத்துச் சுதைவடிவங்களும் பொ.யு. 16-ம் நூற்றாண்டுக் கலைப்பாணியைக் கொண்டது.

பெருமண்டூர் சந்திரநாதர்

கருவறை, அர்த்தமண்டபம் ஆகியவற்றின் வெளிச்சுவர்களிலுள்ள தேவகோட்டங்களிலும் சுதை வடிவங்கள் காணப்படுகின்றன. இவை ரிஷபநாதர், சந்திரநாதர், மகாவீரர், அஜித நாதர் முதலிய தீர்த்தங்கரர்களைக் குறிப்பவையாகும். இத்திருவுருவங்களும் பொ.யு. 16-ம் நூற்றாண்டைய கலைப்பாணியினைத்தான் பெற்றிலங்குகின்றன.

சந்திரநாதர் கோயிலில் இடம் பெற்றிருக்கும் உலோகத் திருமேனிகளுள் பார்சுவ நாதர், சந்திரநாதர், ரிஷபதேவர், நவ தேவதைகள், மேரு, அஷ்டமங்கலச் சின்னங்கள் முதலியன குறிப்பிடத் தக்கவையாகும். இவையனைத்தும் நூற்றைம்பது ஆண்டுக்குட்பட்டவையேயன்றி பழமை வாய்ந்தவையல்ல.

ஓவியங்கள்

இந்த கருவறையின் உட்சுவரில் தரணேந்திரயஷன் சுதை வடிவத்திற்குக் கீழாக பொ.யு. 16-ம் நூற்றாண்டைச் சார்ந்த ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளது. இவை வீரசேனாச்சாரியார் சித்தாமூரில் சமண மடம் நிறுவச் சென்றபோது பெருமண்டூர் பகுதி மக்களும் அவரைப் பின்தொடர்ந்து சென்றதனை விளக்குபவை. இந்த நிகழ்ச்சி நடந்த பொ.யு. 16 -ம் நூற்றாண்டில் இக்கோயில் புதுப்பிக்கப்பட்டபோது கருவறையில் புதிய சுதை வடிவங்கள் நிறுவப்பட்டதோடு, ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன.

பெருமண்டூர் சந்திரநாதர் கோயில் திருச்சுற்று

கல்வெட்டுக்கள்

இக்கோயிலில் கல்வெட்டுக்கள் பொறிக்கப்படவில்லை. பிற்காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட மகாமண்டபம், முகமண்டபம் ஆகியவை கருங்கல்லினாலானவையாக இருந்த போதிலும் அவற்றில் சாசனங்கள் எவையும் எழுதப்படவில்லை. தனியாகவுள்ள கற்களிலும் கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

இங்குள்ள மண்டபத்தூணில் உள்ள சாசனம், 'பெருமாண்டை நாட்டுப் பெருமாண்டை இரவிகுல சுந்தரப் பெரும்பள்ளி’யைக் கூறுகிறது. இன்னொரு சாசனம் பெரும்பள்ளியைக் குறிக்கிறது. முகமண்டபத்தில் நிறுவப்பட்டிருக்கும் தூணிலுள்ள மூன்றாம் குலோத்துங்கன் (பொ.யு. 1192) சாசனம் ஆதிநாதர் கோயிலைச் சார்ந்தது. இது அக்கோயிலில் முன்வளை கொண்ட மங்கை நாயகியாகிய தருமதேவியின் கருவறை கட்டப்பெற்ற செய்தியைக் கொண்டது.

சந்திரநாதர் கோயிலிலுள்ள சில உலோகத் திருமேனிகளின் பீடத்தில் நிறுவியவர்களின் பெயர்களைக் கூறும் அண்மைக் காலத்தில் பொறிக்கப்பட்ட சாசனங்கள் உள்ளன. இவற்றுள் காலத்தில் முந்தியது நவதேவதை படிமத்தின் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ள சாசனம். 1906-ல் பெருமலை சார்ந்த பெரிய விருஷபநாத நயினாரின் மைந்தராகிய ஜீவேந்திர நயினார் இந்த நவதேவதைத் திருவுருவத்தை கோயிலுக்குத் தானமாகக் கொடுத்தார் என்ற செய்தி உள்ளது.

உசாத்துணை


✅Finalised Page