under review

பூசல் மாற்று

From Tamil Wiki

பூசல் மாற்று வெட்சித்திணையின் துறைகளில் ஒன்று. வெட்சியார் ஆநிரையைக் கவர்ந்ததால் கரந்தையாருடன் ஏற்பட்ட பூசலை வெற்றி கொள்வதன் மூலம் மாற்றுதலைக் கூறுவது.

விளக்கம்

பூசல் மாற்று வெட்சியார் ஆநிரைகளைக் கவர்ந்து தம்முடைய நாடுநோக்கிச் செல்லுங்காலத்து இடைவழியில் நிகழும் நிகழ்வு. ஆநிரையை மீட்க வரும் கரந்தையாரிடம் ஏற்படும் பூசலில் வெட்சியார் வெற்றி கொள்வதைக் கூறுவது.

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் ஆநிரையைக் கவந்தவர்க்கும், பறி கொடுத்தவர்களுக்கும் ஆன பூசலை வெட்சியார் போரில் வெற்றி கொண்டு முடிவுக்குக் கொண்டு வருவது என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

கணம் பிறங்கக் கைக் கொண்டார்
பிணம் பிறங்கப் பெயர்த்திட்டன்று (1.13)

வெண்பா

சூழ்ந்த நிரை பெயரச் சுற்றித் தலைக் கொண்டார்
வீழ்ந்தனர் வீழ்ந்தார் விடக்குணியத் - தாழ்ந்த
குலவுக் கொடும் சிலைக் கைக்கூற்று அனையார் எய்த
புலவுக் கணைவழிப் போய்ப் புள் (10)

பொருள்: வெட்சி மறவராலே வளைத்துக்கொள்ளப்பட்ட நிரையை மீட்கச் சூழ்ந்த கரந்தை மறவர்களை வெட்சி மறவர் வீழ்த்தினர். வளைந்த கொடிய வில்லை உடைய, எமனை ஒத்த அவ்வெட்சி மறவர் எய்த, புலால் நாற்றத்தினையுடைய அம்பு போன வழியினைத் தாமும் பின் பற்றிச் சென்ற பறவைகளும் பிணங்களில் படிந்தன.

ஊர்க்கொலை, ஆகோள், பூசல் மாற்று

ஆகோள், ஊர்க்கொலை, பூசல் மாற்று மூன்று நிகழ்வுகளும் ஒன்றையொன்று அடுத்து தொடர்ந்து நிகழ்பவை. ஊர்க்கொலை ஆனிரை தங்கியிருந்த இடத்தில், அதைக் காவல் புரிந்திருந்தாரொடு செய்த போர். ஆகோள் ஆநிரைகளைக் கொள்ளும் நிகழ்வு. பூசல் மாற்று" இடைவழியில், கவர்ந்த ஆனிரையை மீட்க வந்த கரந்தை வீரரோடு ஆற்றிய போர். இவ்வேற்றுமை தோன்ற ஆகோள்' நிகழ்ச்சிக்கு முன் நிகழ்ச்சியாக ஊர்கொலை யினையும், பின் நிகழ்ச்சியாகப் 'பூசல் மாற்று நிகழ்வையும் வைத்து, "ஊர் கொலை ஆகோள் பூசல்மாற்றே" என முறை வகுத்து இலக்கணம் கூறப்பட்டுள்ளது.

உசாத்துணை

நொச்சித் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 29-Mar-2025, 11:58:51 IST