under review

பூகிஸ்

From Tamil Wiki
Pengantin bugis - panoramio.jpg

மலேசியாவில் பெரும்பான்மை பூகிஸ் பழங்குடி இனத்தவர் கிழக்கு மலேசியாவின் சபா மாநிலத்தில் வாழ்கின்றனர். பூகிஸ் பழங்குடி தென்கிழக்காசியாவின் வைக்கிங் என அறியப்படுவர்.

பின்னணி

ஆஸ்திரோனேசியத்திற்கு முந்தைய தெற்கு சூலாவெசியின் ஆரம்பகால மனித இனம் வாஜாக் மனிதனின் வம்சாவளிகளாக இருக்கலாம். வாஜாக் மனித இனம் புரோட்டோ-ஆஸ்ட்ராலாய்டு காலத்தைச் சேர்ந்ததென மானுடவியலாளர்கள் நம்புகின்றனர். கற்காலத்தின் வாலானே ஆற்றிலும் (Walanae River) மாரோஸ் நகரிலும் மனிதர்கள் உயிர்வாழ உபயோகித்த கல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்தக் கற்பொருட்களின் ஆயுள் கார்பன் டேட்டிங் சோதனையின் மூலம் பொ.மு. 40,000லிருந்து 19,000 ஆண்டுகளென குறிப்பிடப்படுகிறது. இவர்கள், தொவலேயன் (Toalean) எனும் வேட்டை உணவு சேகரிப்பு கலாச்சாரத்தைப் பின்பற்றுபவர்களாக இருந்தனர்.

தானா ஓகி (Tanah Ogi)

தானா ஓகி என்பது மலாய்/இந்தோனேசிய மொழியில் பூகிஸ் பழங்குடியின் நிலம் எனப் பொருள்படும். பூகிஸ் மக்கள் இந்தோனேசியாவின் தென்மேற்காக அமைந்திருக்கும் செலெப்ஸ், (Celebs) என்றறியப்பட்ட இன்றைய சூலாவெசி தீவைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். பூகிஸ் மக்கள் மலாய் இனத்தின் உட்பிரிவினராவர். 1667-ல், இந்தோநேசியாவை டச்சு மற்றும் பிரிட்டன் கைப்பற்றியது. அந்நியப் படையெடுப்பு, உள்நாட்டுப் போர்கள் காரணமாக, பூகிஸ் மக்கள் சூலாவெசியை விட்டு வெளியேறி மத்திய மலாய் தீவுக்கூட்டம், மலேசியா மற்றும் சிங்கப்பூர் போன்ற இடங்களில் குடியேறினர்.

இருபதாம் நூற்றாண்டு வரை பூகிஸ் பழங்குடி

பாகான் தொராஜான் மக்கள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை பண்டைய பூகிஸ் கலாச்சாரத்தைப் பாதுகாத்து வந்தனர். பூகிஸ் மக்கள் தங்களின் வீடுகளை ஆற்றின் கரைகள், கடல் அல்லது ஏரிக்கரைகளில் கட்டிக் கொண்டனர். பூகிஸ் மக்கள் அரிசி, தினை மற்றும் பிற பயிர்களை விவசாயம் செய்தனர். கடலில் மீன்களையும் கடல்சார் வளங்களையும் சேகரித்து உண்டனர். வன விலங்குகளை வேட்டையாடினர். பெண்கள் பாவாடையும், ஆண்கள் கோவணமும் தலைப்பாகையும் அணிந்திருந்தனர். பூகிஸ் மக்கள் தங்க, வெண்கல ஆபரணங்களை அணிந்தனர். மட்பாண்டங்களை உபயோகித்தனர். அதோடு, மூங்கிலாலான பொருட்களையும், கத்தியையும் செய்துள்ளனர். பூகிஸ் மக்களின் ஆயுதங்கள் கற்களாலும் இரும்பாலுமானவை. இவர்களின் தலைக்கவசங்களும் உடற்கவசமும் பிரம்பாலானவை.

நம்பிக்கைகள்

பூகிஸ் மக்கள் பௌத்தம், இந்து மதம் மற்றும் ஆன்மவாதம் ஆகியவற்றைப் பின்பற்றினர். பதினேழாம் நூற்றாண்டில், முஸ்லீம் போதகர்கள் பெருவாரியான பூகிஸ் மக்களை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றினர். போர்த்துகீசியப் பேரரசு பூகிஸ் மக்களை ரோமன் கத்தோலிக்க மதத்திற்கு மாற்ற முயற்சித்து தோல்வியடைந்தது. பூகிஸ் மக்கள் முஸ்லீம்கள் என்றாலும், இன்னும் தங்கள் அசல் இந்து மற்றும் ஆன்மவாத அடிப்படையிலான கலாச்சாரத்தையும் இஸ்லாமிய நாட்டார் வழிமுறைகளையும் பின்பற்றி வருகின்றனர். மலேசியா மற்றும் சிங்கப்பூரில் உள்ள பூகிஸ் மக்கள் பெரும்பாலும் மலாய் கலாச்சாரத்தைப் பின்பற்றுகிறார்கள்.

ஐம்பால் பிரிவுகள்

நன்றி: cilisos.my

பூகிஸ் பழங்குடிகள் பாலினத்தை ஐந்தாகப் பிரிக்கின்றனர். சலலாய் மற்றும் சலபாய் பிரிவினரைச் சில பகுதிகளில் அங்கீகரிக்கவில்லை.

மக்குன்ராய்.

மக்குன்ராய் என்றால் பெண்.

ஒரௌனி.

ஓரௌனி என்பவர் ஆண்.

சலலாய்.

சலலாய் என்பர் உடலால் பெண்களாகப் பிறந்தவர். ஆனால், ஆண்களைப் போல் உடுத்துபவர். பொருள் ஈட்டும் வேலைகளையும், கடின வேலைகளையும் செய்வர்; புகைபிடிப்பர்.

சலபாய்.

சலபாய் பிரிவினர் பிறப்பால் ஆணின் உடலைக்கொண்டவர்கள். சலபாய் பிரிவினர் பெண்களைப் போல உடுத்துவர். கடின உழைப்பைக் கோராத வேலைகளைச் செய்வர். பெரும்பாலான சலபாயினர் சிகையலங்காரக் கடைகளிலும் அழகு நிலையங்களிலும் வேலை பார்ப்பர். சலபாய் பிரிவினர் தங்களைப் பெண்களாகக் (மக்குன்ராய்) கருதவில்லை.இவர்கள் மென்மையான உணர்ச்சிகளையும் உடல் மொழிகளையும் கொண்டவர்கள்.

பிசு

பிசு எனும் வார்த்தை சமஸ்கிருத வார்த்தையான பிக்‌ஷுவிலிருந்து மருவியுள்ளது. பிசு பிரிவினரை பூகிஸ் மக்கள் புனிதமாகவே கருதுகின்றனர். பிசு பிரிவினர் தங்களை ஆண்களாகவும் பெண்களாகவும் பிரித்துப் பார்ப்பதில்லை. பிசு, பெண்களைப் போல் மலரலங்காரம் செய்து கொள்வதும் ஆண்களைப் போல கெரிஸ் கொண்டு செல்வதும் இயல்பானது. பிறப்பிலிருந்து ஒருவரை பிசு என்று கொள்ள முடியாது. பிசுவாக வேண்டுமென அக அழைப்புகள் பூகிஸ் மக்களுக்கு வரலாம். அப்படி வருபவர்கள், சிறு பிராயத்திலியே மூத்த பிசுவுடன் இரகசிய பாடத்தையும் மொழியையும் கற்க புறப்படுவர். பிசுகளுக்குரிய மொழியை பச து ரி லாகிக் (Basa To Ri Langiq) அதாவது சொர்க்கத்தின் மொழி என்றழைப்பர். 1950-கள் மற்றும் 1960-களில் அப்துல் கஹர் முசாகர் தலைமையிலான இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கம் பிசுகளைக் கொலை செய்தனர். இதனால், பலர் பிசுகளாக முன்வரவில்லை. 1998-ல் இந்தோநேசியாவின் ஜனாதிபதி சுஹார்தோவின் வீழ்ச்சிக்குப்பின், பிசுகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இன்றைய பூகிஸ் மக்களில் பலரும் முஸ்லிமாக இருப்பினும், பிசுகள் சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றனர். பூகிஸ் சமுதாயத்தில் ஹஜ் பயணத்துக்குச் செல்லும் முன் பிசுவிடம் அனுமதியும் ஆசியும் பெற்று ஹஜ் பயணத்தை மேற்கொள்கின்றனர்.

தொழில்

பூகிஸ் பழங்குடியினர் விவசாயிகளாக இருந்தனர். பூகிஸ் பழங்குடி பதினாறாம் நூற்றாண்டில் வணிகம் செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. பதினெட்டாம் நூற்றாண்டில் டச்சு அரசு பசிபிக் சமுத்திரத்தின் தென்மேற்கில் அமைந்திருக்கும் மகசார் துறைமுகத்தைக் கைப்பற்றியது. அதனால், பூகிஸ் மக்களின் வணிகத் தொடர்புகள் தடைப்பட்டன. பூகிஸ் மக்கள்கடல் வழி பயணங்களில் ஈடுபட்டு, மீனவர்களாகவும் திகழ்ந்தனர்.

வணிகம்

தென் சூலாவெசி [நன்றி: Dhifa Tours

பூகிஸ் மக்கள் சிறுபான்மையினராக இருப்பினும், வெளியாட்களுடன் வர்த்தகத் தொடர்பில் இருந்தனர். அகழ்வாரய்ச்சியாளர்கள் பான்டேங் மற்றும் ஆராவிற்கு அருகில் பொ.மு. 300 முதல் 100 வரையிலான பழங்கால கலைப்பொருட்களைக் (artifact) கண்டுபிடித்தனர். இக்கலைப்பொருட்கள்தெற்கு சூலாவெசி, ஆரம்பகால இன்சுலிண்டியன் (Insulindian) வர்த்தகத்தில் பங்கு கொண்டுள்ளது என்பதற்கான சான்றுகளைக் குறிக்கிறது. அதோடு, இஸ்லாமிற்கு முந்தைய கல்லறைகள், சீன இறக்குமதிகள், பிற தென்கிழக்காசிய பீங்கான்களும் கண்டெடுக்கப்பட்டன. இருப்பினும், தெற்கு சூலாவெசி கலாச்சாரங்களில் இந்து மற்றும் புத்த அடையாளங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. பூகிஸ் எழுத்து, பெயர்கள், சொற்கள், மாந்தர்கள் மற்றும் பாண்டேங்கில் காணப்படும் சில புத்த வெண்கலப் படங்கள் ஆகியவை மேற்கத்திய தீவுக்கூட்டத்துடன் வர்த்தக ரீதியாக தொடர்பில் இருந்த சான்றுகள்.

கப்பல் கட்டுமானங்கள்

பூகிஸ் கப்பல் வகைகள். [நன்றி; MATTHES 1874/ Etnographische Atlas_der Boeginezen

தென் சூலாவெசியில் கப்பல் கட்டுமானங்கள் செய்யப்பட்டுள்ளன. அவை அர, தானா லெமோ, பிராவில் எனும் இடங்களில் நிகழ்ந்தன. மகசாரின் இனங்களில் ஒரு உபபிரிவு கொன்ஜொ. கொன்ஜொ மக்கள் அதீத தீவிரத்துடன் படகு, கப்பல் கட்டுமானத்தில் இருப்பதனால், படகோட்டிகளாக ஆவதில்லை. கொன்ஜொ மக்களின் கலை நுட்பங்கள் கடலுக்குச் சென்றால் அழிந்து விடக் கூடும் என்னும் மூத்தோர் நம்பிக்கைக்குக் கட்டுப்பட்டிருக்கின்றனர். பூகிஸ்-மகசார் இன மக்கள் மட்டுமே படகோட்டிகள். பூகிஸ்-மகசாரின் வாழ்வியல் கூறுகளில் கடற்பயணம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பூகிஸ்-மகசார் கடற்பயணங்களுக்கும், வர்த்தகங்களுக்கும் பென்ஜாஜாப் (போர்க்கப்பல்), பாஜாலா (சிறு படகு), பலரி, லம்போ (வர்த்தக/ படகு), படெவகாங், பினிசி எனும் படகு,கப்பல் கட்டுமானங்களை செய்வர்.

படெவகாங்

படெவகாங் என்பது பூகிஸ் மகசாரின் முதல் கடற்பயண கப்பல்களில் ஒன்றாகும். படெவகாஙில் நகோடா, ஜுருஆகாங், ஜுருமுடி, ஜுருபாத்து, ஜுருதுலிசி இருப்பர். படெவகாங் நகோடாவால் செலுத்தப்படும். நகோடா கப்பலின் கேப்டன். ஜுருஆகாங் கப்பலின் இரண்டாம் தலைவர். ஜுருமுடி கப்பலின் போக்கை இயக்குபவர். இரு ஜுருபாத்துகள் கடல் ஆழத்தைக் கணக்கிடுபவர்கள். ஜுருதுலிசி, கப்பலின் உரிமையாளரின் சார்பாக கப்பலினுள் முகவராகச் செயல்படுபவர்.

பினிசி

பினிசி கப்பல்கள் 50-70 அடி நீளத்திலும் 34-43 அடி ஆழமாகவும் இருக்கும். சிறு பினிசிகள் பத்தடி நீளத்தில் இருக்கும்.கொன்ஜொ மக்கள் பினிசி கட்டுவதில் வல்லமை பெற்றவர்கள்.

விழாக்கள்

17-ம் நூற்றாண்டிற்குப் பிறகு, பூகிஸ் மகசார் மக்கள் இஸ்லாமிய பண்டிகைகளைக் கொண்டாடத் தொடங்கினர். அதில் ஈத் (ரமதான்), ரமதான் நோன்பு, பக்ரீத் தினம் ஆகியவை அடங்கும். தென் சூலாவெசியில் இஸ்லாம் மதம் பரவலாவதற்கு முன் அறுவடை திருவிழாக்களான மப்பங்களொ டாது அசெ, மப்பாடென்டாங், மன்ரெ சிபுலுங், மசெராக் அசெ, மசெராக் ரகாபெங் ஆகியவைக் கொண்டாடப்பட்டிருக்கின்றன. மீன்பிடி சமூகங்களில், மசேரா தபாரெங் மற்றும் மசேராக் தாசிக்ஆகிய விழாக்களைக் கொண்டாடுவர்.

மொழி

பூகிஸ் பழங்குடியின் மொழியை பாசா ஊகி (Basa Ugi) என்றழைப்பர். ஊகி மொழி ஆஸ்திரோ-ஆசிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. ஊகி மொழி தெற்கு சூலாவெசியில் அதிகளவில் பேசப்படுகிறது. அதில், போனே, சோப்பேங், வாஜோ, சிட்ராப், பின்ராங், பாரு, சின்ஜை, பாரேபாரே மாவட்டங்கள் அடங்கும்.

லொந்தாரா

பூகிஸ் மக்களின் எழுத்துரு லொந்தாரா/ உருப்பு சுலாப்பா/ எப்பா என்றழைக்கப்படும். லொந்தாரா காவி எழுத்துருவிலிருந்து மருவியது. காவி எழுத்துரு எட்டிலிருந்து பதினாறாம் நூற்றாண்டு வரை தென்கிழக்கு ஆசியாவில், முக்கியமாக ஜாவாவில் பயன்படுத்தப்பட்டு வந்த எழுத்துருவாகும்.

நாட்டார் கதைகளும் இலக்கிய மரபும்

வாய்மொழி நாட்டார் கதைகள் 1400களில் லொந்தாரவில் எழுதப்பட்டது. பூகிஸ் மொழி இலக்கியங்கள், தங்கள் இன அடையாளங்களான ஞானம், சமூக வாழ்க்கை மற்றும் கலாச்சார சூழலில் ஆகியவற்றை ஒட்டி அமைகின்றது.

பூகிஸின் நாட்டார் இலக்கியம் வாய்மொழி ஆக்கங்களாகும். அதில் பூகிஸ் மக்களின் வாழ்க்கை உரைநடை, கவிதை மற்றும் பாடல் வடிவில் ஆழமாக வேரூன்றியுள்ளது. அவை எலோங் (நீள் கவிதை), தோலோ (புதிர்), அட்டெபுங்கேங், குழந்தைப் பாடல்கள், ஜம்பி, (மந்திர சொல்) பாசா-பாசா (இஸ்லாமியத்திற்கு முந்தைய சடங்கு வெளிப்பாடுகள்) சாபோ, செசுகேங், லவோலோ (கட்டளைகள்), பாபாசெங், அரு வடிவங்களில் உள்ளது. கதைகள் சுரிதா (கதை), கதோபா (மதவுரை), மற்றும் உரைகளாகப் பேசப்பட்டுவருகின்றன.

சுரேக் காலிகோ
சுரேக் காலிகோ (Sureq Galigo)

தெற்கு சூலாவெசியைச் சேர்ந்த பூகிஸ் பழங்குடியின் மரபிலக்கியம் சுரேக் காலிகோ. பூகிஸ் பழங்குடி மூதாதையர்களின் வாய்வழி பேசப்பட்டு வந்த நாட்டார் கதைகள் இவை. இந்தக் கதைகளை பதினெட்டு முதல் இருபதாம் நூற்றாண்டுகு உட்பட்ட காலக்கட்டத்தில் எழுதியுள்ளனர். சுரேக் காலிகோவில் உள்ள கவிதைகள் ஐந்தடிகள் கொண்டவை. சுரேக் காலிகோவில் மனிதகுலத்தின் தோற்றமும் விவசாயிகளுக்கேற்ற பஞ்சாங்கமும் எழுதப்பட்டுள்ளது. பதினெட்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஆரம்பகால சுரேக் காலிகோ, பருவநிலை மாற்றங்களாலும் பூச்சிகளாலும் சேதமுற்றது.

கலை கட்டுமானம்

பூகிஸ் கட்டிடக்கலையில் ஆஸ்ட்ரோனேஷியன், மலாய், ஜாவா, மக்காசரேஸ் மற்றும் தரோஜா கட்டிடக்கலையின் செல்வாக்கு இருக்கும். மலாய் தீவுக்கூட்டம் (Malay Archipelago) முழுவதும் காணப்படும் பல பழங்குடிக் குடியிருப்புகளைப் போலவே, பூகிஸ் கட்டிடக்கலையும் ‘கம்போங்’ என்று அழைக்கப்படுகிறது. கம்போங் என்றால் மலாய் மற்றும் இந்தோனேசிய மொழியில் கிராமம் என்று பொருள்படும். மலாய் பாணி கம்பங்களைப் போலவே, பூகிஸ் கம்பங்குகளும் அலைகள் மற்றும் வெள்ளத்திலிருந்து பாதுகாக்கும் வகையில் கட்டப்பட்டவை.

பாரம்பரிய கட்டிடக்கலை

பூகிஸ் கட்டிடக்கலை இறையியலுடன் சேர்ந்தது. பூகிஸ் மக்களின் மூலநூல் சுலாப்பா எப்பா ஆகும். சுலாப்பா எப்பாவின் நான்கு கூறுகளான நீர், நிலம், காற்று, நெருப்பு காற்றின் திசைகளுடன் சேர்த்து பூகிஸ் பாரம்பரியக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. பூகிஸ் வீடுகளின் வாசல் பொதுவாக, கிழக்கு அல்லது வடக்கு நோக்கி கட்டப்பட்டிருக்கும். பூகிஸ் வீடுகள் மூன்று அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இம்மூன்று பிரிவுகளும் இஸ்லாமியமாதலுக்கு முன்னுள்ள பூகிஸின் பிரபஞ்ச புரிதல்களுடனும் வான சாத்திரங்களின் அடிப்படையிலும் கட்டப்பட்டவை.

  • ரகெயங்- (மேல் உலகம், சொர்க்கம்). பூகிஸ் வீட்டின் மேல்மாடி அல்லது பரண் அரிசி, பயிர்களைச் சேகரிக்கும் இடம்.
  • அலெ போலா- (நடு உலகம். மனிதர்களின் உலகம்).இவ்விடத்தில் மனிதர்களின் நடமாட்டம் அதிகமிருக்கும்.
  • அவ போலா- (கீழுலகம்)ன்இருண்ட உலகம். கால்நடைகளை வளர்க்குமிடம்.
  • ரூபா தௌ-ரூபா தௌ என்பது உடல்கூறுகளின் அடிப்படையில் அமைந்த கட்டுமானம். மனித உடலமைப்பின் தனித்துவ கூறுகளுடன் வீடுகள் கட்டப்படும். அஜெ போலா என்பது பாதம். அஜெ போலா என்பது வீட்டைத் தாங்கும் தூண்கள். அலெ போலா என்பது உடல். வீட்டில் மனிதர்கள் தினசரி நடவடிக்கைகளைச் செய்யுமிடம். உலு போலா என்றால் தலை. உலு போலா வீட்டின் கூரையைக் குறிக்கும். பொசி போலா என்றால் தொப்புள், மையம்.

நடனம்

வரலாற்று ரீதியாக பூகிஸ் பிரபுக்களிடையே, அரச அந்தஸ்து மற்றும் ஆசாரங்களின்படி நடனங்கள் நிகழ்ந்தன. கெடோ (நடத்தை) மற்றும் ஆம்பே (பேச்சு) ஆகியவற்றில் ஒரு தனிநபரின் தனிப்பட்ட குணங்களை மேம்படுத்துவதற்கும் வடிவமைப்பதற்கும் நடனம் முக்கியமாக கருதப்பட்டது. பூகிஸ் பிரபுக்களின் நடனங்கள் பஜாகா பெனெபாலா அனாக்டாரா, பாஜாகா லெலெங்பாதா துலோலோ மற்றும் பஜாகா லிலி. பஜாகா, பாஜோகெக் எனும் இரு நடனங்களும் பூகிஸ் பொழுதுபோக்குக்குரியது. பாஜோகேக் நடனம் ரோங்கேங் (ஜாவாவின் நடனம்) மற்றும் ஜைபோங்கின் (சுண்டாவின் நடனம்) கூறுகள் உடையது. ஜெப்பேங் நடனத்தில் இஸ்லாமிய கூறுகள் இருக்கும். தாரி படுப்பா என்பது பூகிஸின் பாரம்பரிய வரவேற்பு நடனம். சடங்குகளில் பூகிஸ் கலாச்சாரத்தில் மந்திர-மத விழாக்கள் நடைபெறும். இவ்விழாக்களிலும் சடங்குகளிலும், பிசு சடங்குக்குரிய நடனங்களை ஆடுவார். இவை சன்னத நிலையில் ஆடப்படும் நடனம். சடங்கு நடனங்கள் தாரி மகிரி, தாரி அலுசு, மடேவதா என்பவையாகும்.

இசைக்கருவிகள்

கெகொக்-கெசோக்
  • சொலிங் (புல்லாங்குழல்)
  • கசாபி (நரம்புக் கருவி)
  • தலிண்டோ (நரம்புக் கருவி)
  • ஜலாப்பா/கன்சிங்-கன்சிங் (Cymbal)
  • அலொசொ/லாலுசோ (Shekere)
  • கெகொக்-கெசோக் (நரம்புக் கருவி)
  • ரெபாப் (நரம்புக் கருவி)
  • கென்ராங் (இரு தலை மத்தளம்)
  • புயிக்-புயிக் (தாரை)

உணவு

பூகிஸ் மக்கள் மலாய் தீவுக்கூட்டத்தில் வாழ்கின்றனர். எனவே அவர்களின் பெரும்பாலான உணவுகள் இந்தோனேசிய மற்றும் மலேசிய உணவு வகைகளை ஒத்தவை. பூகிஸ் மக்கள் திறமையான மீனவர்கள். இதனால், பூகிஸ் உணவு வகைகளில் மீன் மற்றும் கடல் உணவுகள் அதிகமிருக்கும். பெரும்பாலான பூகிஸ் மக்கள் முஸ்லிம்களானதால் பன்றி, மது கலப்படமில்லாமல் இருக்கும். மலேசியா மற்றும் சிங்கப்பூரில் வசிக்கும் பூகிஸ் உணவு மலாய் பாணி உணவு. மகசாரில் பல பிரபலமான பாரம்பரிய உணவுகள் உள்ளன. கொதொ மகசார், (Coto Makassar) என்பது மாட்டிறைச்சியின் மூளை, நாக்கு, குடல், மசாலா, தானியங்களுடன் பல மணி நேரம் வேகவைப்பட்ட சூப். புராசா, (Burasa) என்பது கவுனி அரிசியை தேங்காய்ப் பாலுடனும் கெரிசிகுடனும் (Kerisik) (வறுத்த தேங்காய்ப்பூ) கிண்டிய கவுனி அரிசிக் களி.

பிசாங் எபெ [நன்றி: Detikfood]

பிசாங் எபெ மற்றும் பிசாங் இஜொ பூகிஸ் மக்களின் இனிப்புகள் . பிசாங் எபெ வாழைப்பழத்தைச், சுட்டு பனை வெல்லத்துடனும் டுரியானுடனும் உண்ணும் இனிப்பு. பிசாங் இஜொ என்பது பண்டான் இலைச்சாறு சேர்க்கப்பட்ட பச்சைநிற மாவிலிட்ட வாழைப்பழத்தை தேங்காய்ப் பாலுடனும், சர்க்கரைப் பாகுடனும் குளிர வைத்து உண்ணும் பண்டம். ரமதான் மாத நோன்பு திறப்பிற்காகச் சிறப்பாகச் செய்யப்படுகிறது.

உடை

இஸ்லாமியமாதலுக்கு முன்
  • பாஜு போடூ (Baju Bodo)

பாஜு போடூ சிறு ஆடை எனப் பொருள்படும். சிறு கை கொண்ட ஆடை.பாஜு போடூவுடன் சாரோங், (கைலி) அல்லது பட்டு சாரோஙுடன் உடுத்துவர். பாஜு போடு ஒன்பதாம் நூற்றாண்டு தொடங்கி புழக்கத்தில் உண்டு. பாஜு போடு அன்னாசி நாரினாலும் பருத்தியினாலும் செய்யப்பட்டது.

பாஜு போடூ [நன்றி: theborneopost]
இஸ்லாமியமாதலுக்குப் பின்
  • பாஜு லாபு (Baju La’bu)

பாஜு லாபு என்றால் மகசார் மொழியில் நீள் உடை. பாஜு லாபுவிற்கு போடு பான்ஜாங் எனும் பெயருள்ளது. பாஜு லாபுவின் கைகள் நீளமாக இருக்கும்.. இஸ்லாம் மதத்தின் ஔராட் (உடல் அங்கங்களை மறைத்தல்) கொள்கைக்கிணங்க இம்மாற்றம் வந்தது. பாஜு லாபு பெரும்பாலும் பட்டுத்துணியில் தைக்கப்படும்.

பூகிஸ் ஆண்

பூகிஸ் ஆண் ஜாஸ் துது அல்லது ஜாஸ் துதுப் (Jas Tutup) எனும் மேலங்கியை அணிவார். ஜாஸ் துதுவுடன் சொங்கோக் அணிய வேண்டும். சொங்கோவை சொங்கோ ரெக்கா, பாபிரிங், சொங்கோ தொ போனே என்றும் அழைப்பர். அதனுடன் லிபா சாபே எனும் சாரோங் அணிவார். திருமணத்தில் மாப்பிளை ததாரோபேங் (Keris) பபெக்கெங் (இடைவார்), ரோபே (சொங்கேட்), சிகாரா (தலைப்பாகை), சலெம்பாங் (இடையில் கட்டப்படும் துணி), கெளாங் (வளையல்), சாபு தாங்கான் (கைக்குட்டை) அணிந்திருப்பார்.

தற்காப்பு

பூகிஸின் தற்காப்பு கலைகள்; மனுனென்சாக்/மென்சாக் பாருகா, மலான்சா, மசெம்பேக். பூகிஸ் மக்களின் போர் நடனங்கள் பென்ஜாக வெலாடோ, பஜாகா கிலிரேங், பாஜாகா முதாரோ. பூகிஸ் பழங்குடி தற்காப்பு நடனங்கள் போருக்குத் தயார்ப்படுத்துவதற்காக ஆடப்படும்.

தற்காப்பு நடனங்கள்(போருக்கு முன்)
  • காவாலி-காவாலி என்பது பூகிஸ் இனத்துத் தற்காப்புக் கலையாகும். காவாலியைப் பாடிக் என்றும் அழைப்பர். ஆரம்பத்தில் காவாலியை வேட்டைக்காகவும் தற்காப்புக்காகவும் உபயோகித்தனர்.பூகிஸ் சமூகத்தில் சிரி எனும் அடிப்படை தத்துவம் உள்ளது. சமூகத்தில் கண்ணியத்தைப் பராமரிக்கும் பொறுப்பைச் சிரி பிரதிபலிக்கிறது. இக்கருத்தினால், பாடிக் தனிநபர், குடும்ப கௌரவத்தை பாதுகாக்கும் கருவியாகப் பயன்பட்டுவருகிறது.
  • கெரிஸ்-கெரிஸைத் (குறுங்கத்திகள்) தப்பி என்றும் அழைப்பர். தப்பி ஜாவா கெரிஸிலிருந்து மாறுபட்டதாகும். ஒரு வம்சத்தினருக்கு ஒரு கெரிஸ் புசாகா இருக்கும்.
பூகிஸ் ஆயுதங்கள்
  • அலமாங்/ சுண்டாங் (நீண்ட வாள்)
  • பெசிங் (ஈட்டி)
  • கனா (கையில் பிடித்திருக்கும் கவசம்)
  • பந்து (தற்காப்பு கட்டை)
  • வாஜு ரந்தெ (சங்கலியால் செய்த உடற்கவசம்)
  • தடொ (பொறி கயிறு)
  • விஷ ஊதுகுழாய்
  • மஸ்கட்
  • கல்வரின் (கைத்துப்பாக்கி)
  • பீரங்கி
  • பாஜு லமினா

சடங்குகள்

மாகிரி (ma’giri’)

இந்தச் சடங்கு சிறப்பான விளைச்சலுக்கும், சுகாதாரத்திற்கும், சுகப்பிரசவங்களுக்கும் வேண்டி நடத்தப்படுவது. மாகிரி சடங்கைப் பிசு வகுப்பினர் நிகழ்த்துவர். மரவீட்டின் ஒரு அறையின் நடுவே அரிசி கொட்டி வைக்கப்படும். பிசுகள் ஊதுபத்திகளைக் கொளுத்தி, ஜபிக்கத் தொடங்குவர். சில நிமிடங்களில் சன்னத (Trance) நிலையில் ஆடத்தொடங்குவர். பிசுகள்கெரிஸ் முனைகளைத் தங்களின் உள்ளங்கைகளில், கண்ணிமைகளில், குத்திக்கொள்வர். பிசுகளின் உடம்பில் கடவுள்கள் இறங்கியுள்ளதால், அவர்கள் வலி அறிவதில்லை என நம்பப்படுகிறது.

திருமணம்

பூகிஸ் திருமணங்கள், பெண்வீட்டாருக்கு வெற்றிலை பாக்கு அனுப்புவதில் தொடங்குகின்றன. வெற்றிலையைப் பெற்றுக் கொண்டால், பெண்வீட்டாருக்குத் திருமணத்தில் சம்மதம் எனப் பொருள்படும். திருமண நாள் வரை மணப்பெண் தன் வீட்டிலேயே தங்குவார். திருமணத்திற்கு முதல் நாள், மாப்பிள்ளையின் கண்களைக் கட்டி விடுவர். கண்கள் கட்டப்பட்ட மாப்பிள்ளை, ஒரு அறையில் மற்ற பெண்களோடு குழுமியிருக்கும் மணப்பெண்ணைக் கண்டுபிடிக்க வேண்டும். சடங்கு முடிந்ததும், மாப்பிள்ளை மணப்பெண்னை மணவறைக்கு அழைத்துச் செல்வார்.

உசாத்துணை


✅Finalised Page