under review

புழல் ஆதிநாதர்கோயில்

From Tamil Wiki
புழல் ஆதிநாதர் கோயில் (நன்றி ப்ரியங்கா)

புழல் ஆதிநாதர்கோயில் (பொ.யு. 12-ம் நூற்றாண்டு) வடதமிழ்நாட்டு (தொண்டைமண்டல) திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்த சமணக் கோயில்.

இடம்

சென்னைக்கு வடக்கில் பதினேழு கிலோமீட்டர் தொலைவில் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்த புழல் என்னும் ஊரில் முதலாவது தீர்த்தங்கரராகிய ஆதிநாதருக்கெனக் கட்டப்பட்ட கோயில்.

கோயிலின் காலம்

மெக்கன்சி சுவடித்தொகுப்பில், தொண்டை மண்டலத்தை ஆட்சிபுரிந்த குறும்பர் இனத்தலைவன் சமணத் துறவியொருவரின் அறிவுரைப்படி சமணத்தைத் தழுவினான் எனவும், குறும்பர் இன மக்கள் அத்துறவியின் பெயரால் புழலில் சமணக் கோயில் ஒன்று கட்டினர் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் குலோத்துங்க சோழனுக்குப் பிறந்த ஆதொண்ட சோழமன்னன் குறும்பர்களை வென்று, சென்னைக்கு அருகிலுள்ள திருமுல்லைவாயிலில் சிவன் கோயில் ஒன்று எடுப்பித்தான் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தொண்டை நாட்டில் குறும்பர்களைப் பற்றிய முழுமையான வரலாறு இன்னமும் நமக்குத் தெரியவரவில்லை. இதுபோன்று குலோத்துங்க சோழனது மைந்தன் எனக் கூறப்பட்டுள்ள ஆதொண்டசோழனைப் பற்றியும் நம்பத்தகுந்த வரலாற்றுச்செய்திகள் எவையும் இல்லை. மெக்கன்சி சுவடிகள் கூறும் செய்திகள் அனைத்தும் முழுமையான வரலாற்று உண்மைகள் இல்லையென்றபோதிலும், சோழர்காலத்தில் இங்கு சமணக் கோயில் இருந்திருக்கவேண்டும் என்பதனை உறுதிசெய்யும் வகையில் இங்குள்ள கோயிலில் ஆதிநாதர் சிற்பம் ஒன்று காணப்படுகிறது.

புழல் ஆதிநாதர் கோயில் வளாகம்

முன்பிருந்த சமணக் கோயில் சிதைந்தமையால் அண்மைக்காலத்தில் முற்றிலும் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. சுவேதாம்பரபிரிவு சமணர் இதனைப் புதுப்பித்து, புதிய கட்டடங்கள் கட்டி விரிவாக்கமும் செய்தனர். கருவறை, மண்டபம், திருச்சுற்றுமதில் யாவும் அண்மைக்காலத்தில் கட்டப்பட்டதால் இக்கோயிலின் விமானம் வட இந்திய கலைப்பாணியான நாகர பாணியைக் கொண்டுள்ளது. கட்டடக்கலையின் அடிப்படையில் இங்கு எப்போது கோயில் தோற்றுவிக்கப்பட்டது என்பதனைக் கூற இயலவில்லை.

ஆதிநாதர் சிற்பத்தில் உதடுகள், கையின் ஒருபகுதி ஆகியவை சிதைந்துள்ளன. இதன் கலைப்பாணியைக் கொண்டு பொ.யு. 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என அறியலாம். தொண்டை நாட்டையும் சேர்த்து ஆட்சிபுரிந்த சோழப்பேரரசரது காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டிருக்க வேண்டும். மெக்கன்சி சுவடி கூறும் குலோத்துங்க சோழனுக்குப் பின்னர் இக்கோயில் கட்டப்பட்டிருக்க வேண்டும்.

புழல் ஆதிநாதர் கோயில் நவீன அமைப்பு

கல்வெட்டுக்கள்

புழலிலிருந்த பண்டைய கோயிலில் கல்வெட்டுக்கள் இருந்தனவா என்று கூறுவதற்குத் தற்போது சான்றுகள் இல்லை. இவ்வூரிலுள்ள சிவன் கோயிலில் பொறிக்கப்பட்டிருக்கும் சாசனங்கள் பொ.யு. 12 -ம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட காலத்தவை. இவற்றில் ஆதிநாதர் கோயிலைப்பற்றியோ அல்லது அக்கோயிலுக்கிருந்த பள்ளிச்சந்த நிலங்களைப்பற்றியோ எந்தவிதமான குறிப்புகளும் இல்லை. பொ.யு. 12-ம் நூற்றாண்டிற்குப் பிறகு சைவசமயம் இங்கு செல்வாக்குடன் திகழ்ந்திருக்கவேண்டும்.

அமைப்பு

புழல் கோயிலின் பிரகாரத்தினுள் கருவறைக்கு மேற்குப் பகுதியில் இந்த ஆதிநாதர் சிற்பம் உள்ளது. தனிச்சிற்பமாக உள்ள இத்திருவுருவம் யோக நிலையில் அமர்ந்த வண்ணம் உள்ளது. ரிஷப நாதரின் தலைக்குப்பின்புறம் அரைவட்ட வட்டவடிவ பிரபையும், அலங்காரவேலைப்பாடுடைய கொடி போன்ற அமைப்புகளும், அதற்கு மேலாக முக்குடையும் காணப்படுகின்றன. தீர்த்தங்கரரின் இருபுறமும் சாமரம் வீசுவோர் சிறிய அளவில் படைக்கப்பட்டிருக்கின்றனர். தற்போதுள்ள கோயிலின் கருவறையினுள் ரிஷபநாதர் சிற்பம் ஒன்று சற்று பெரிய அளவில் மூலவராக உள்ளது.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 21-Oct-2023, 09:28:42 IST