under review

புத்ரா ஜெயா மேம்பாட்டுத் திட்டம்

From Tamil Wiki
புத்ரா ஜெயா 1.jpg

மலேசிய நாட்டின் வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் புத்ரா ஜெயா மேம்பாட்டுத் திட்டம். மலேசியாவின் நவீன நகரமாகவும் நிர்வாகத் தலைநகரமாகவும் புத்ரா ஜெயா செயல்படுகிறது. புத்ரா ஜெயா மேம்பாட்டுத் திட்டம் இந்தியத் தோட்டத் தொழிலாளர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியது.

பின்னணி

பிப்ரவரி 28, 1991 அன்று மலேசியாவின் நான்காவது பிரதமரான டத்தோ ஶ்ரீ துன் டாக்டர் மகாதீர் அவர்களால் ‘2020 தொலை நோக்குத் திட்டம்’ மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டதுதான் புத்ரா ஜெயா மேம்பாட்டுத் திட்டம். கோலாலம்பூருக்கு மாற்றாக மலேசியாவின் நவீன நகரமாகவும் நிர்வாகத் தலைநகரமாகவும் செயல்பட புத்ரா ஜெயா மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது.

புத்ரா ஜெயாவின் மேம்பாட்டுத் திட்டம்

புத்ரா ஜெயா மேம்பாட்டுத் திட்டத்திற்காக இந்தியத் தொழிலாளர்கள் வாழ்ந்து வந்த 'பெராங் பெசார்' தோட்டம், மெடிங்கிலி தோட்டம், செட்ஜிலி தோட்டம், காளவே தோட்டம் என்ற நான்கு தோட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. ஜனவரி 26, 1993 அன்று பெராங் பெசார் தோட்டத்தைப் புத்ரா ஜெயா பெருநகரமாக உருவாக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. பின்னர் ஆகஸ்ட் 29, 1995 அன்று புதிய நகருக்கான அடிக்கல் நாட்டு விழா தொடக்கி வைக்கப்பட்டது. பல நவீன வசதிகளுடன் புத்ரா ஜெயா அமைக்கப்பட திட்டமிடப்பட்டப்பட்டது.

நிலப்பரப்பு

புத்ரா ஜெயா நகரில் கட்டப்பட்ட கூட்டரசின் அரசாங்க அலுவலகக் கட்டடங்களுக்காக 380,000 லட்சம் சதுர அடி நிலம் ஒதுக்கப்பட்டது. பிரம்மாண்டமான வணிக வளாகங்களுக்காக இன்னொரு 340,000 லட்சம் சதுர அடி ஒதுக்கப்பட்டது. திட்டம் முடிவுறும் போது புதிய நகரின் மக்கள் தொகை 330,000 ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டது. திட்டத்தின் முதல்படியாக 67,000 வீடுகள் புத்ரா ஜெயாவில் கட்டப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

புத்ரா ஜெயா வளர்ச்சித் திட்டம் மேற்கொள்ளப்படும் முன்னர் பெராங் பெசார் குடியிருப்புப் பகுதி.

பயன்படுத்தப்பட்ட தோட்டங்களின் பரப்பளவு

  • பெராங் பெசார் தோட்டம் - 1733 ஹெக்டேர்
  • காளவே தோட்டம் - 1272 ஹெக்டேர்
  • செட்ஜிலி தோட்டம் - 904 ஹெக்டேர்
  • மெடிங்கிலி தோட்டம் - 582 ஹெக்டேர்

பாதிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களின் எண்ணிக்கை

  • பெராங் பெசார் தோட்டம் - 1500 பேர்
  • காளவே தோட்டம் - 400 பேர்
  • செட்ஜிலி தோட்டம் - 400 பேர்
  • மெடிங்கிலி தோட்டம் - 87 பேர்

பாதிக்கப்பட்ட தோட்டங்களின் உரிமையாளர்கள்

  • பெராங் பெசார் தோட்டம் - கோல்டன் ஹோப்
  • காளவே தோட்டம் - கோல்டன் ஹோப்
  • செட்ஜிலி தோட்டம் - தைகோ பிளான்டேசன்
  • மெடிங்கிலி தோட்டம் - பிளான்டேசன் ஏஜென்சி

தோட்டத் தொழிலாளர்களின் நிலை

புத்ரா ஜெயா ஹோல்டிங்ஸ் சென்டிரியான் பெர்ஹட் நிறுவனம் புத்ரா ஜெயா நகரத் திட்டத்திற்குப் பொறுப்பெடுத்துக் கொண்டது. புத்ரா ஜெயா ஹோல்டிங்ஸ் சென்டிரியன் பெர்ஹட் நிறுவனத்துடன் இணைந்து பெராங் பெசார், காளவே, செட்ஜிலி, மெடிங்கிலி தோட்ட உரிமையாளர்கள் தங்கள் தோட்டங்களில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்களுக்கு வேலை நீக்க உத்தரவை அளித்தனர்.

தாமான் பெர்மாத்தா குடியிருப்புப் பகுதி.

அதற்கெதிராக தங்களுக்கு நியாயமான இழப்பீடும் குடியிருப்பு வசதிகளும் செய்து தரப்பட வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை எழுப்பினர். கோல்டன் ஹோப் நிறுவனமும், புத்ரா ஜெயா வளர்ச்சித்திட்ட நிறுவனமும் அரசியல்வாதிகளின் வற்புறுத்தலினால், தொழிலாளர்களுடன் உடன்பாடு ஒன்றுக்கு வந்தனர். மலிவு விலையிலான வீடுகள், ஒரு கோயில், ஒரு தமிழ்ப்பள்ளி, கடைகள் ஆகியவை அருகிலுள்ள டெங்கில் நகரில் ஏற்படுத்தித் தரப்படும் என்று தொழிலாளர்களுக்கு உறுதியளிக்கப்பட்டது. கொடுக்கப்பட்ட வாக்குறுதிக்கேற்ப பாதிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கு 400 வீடுகள் 4.3 ஏக்கர் பரப்பளவில் கட்டித்தரப்பட்டன. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் குறைந்த எண்ணிகையிலான வீடுகளே தோட்டத் தொழிலாளர்களுக்குக் கட்டித்தரப்பட்டன.

குடியிருப்புப் பகுதியின் நிலை

பாதிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் 1999-ல் டெங்கில் தாமான் பெர்மாத்தா குடியிருப்பு எனும் பெயரில் அமைந்துள்ள நான்கு அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் குடியேற்றப்பட்டனர். இந்தக் குடியிருப்புகள் ஐந்து கட்டடங்களாக அமைந்திருந்தன. இந்த ஐந்து கட்டடங்களின் அடித்தளங்கள் மண் சரிவு ஏற்பட்டு மூன்று அடி ஆழம் கீழே இறங்கப்பட்டிருந்தது. இதற்குக் காரணம் அந்தக் கட்டடப்பகுதிகள் மிகவும் அவசர, அவசரமாகக் கட்டடப்பட்டவையாகும். மழைக் காலங்களில் அடிக்கடி வெள்ளம் சூழ்ந்துவிடும் நிலையில் அக்குடியிருப்பு அமைந்திருந்தது. இவ்வீடுகளின் சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டிருந்தன.

சர்ச்சைகள்

  • டெங்கில் தாமான் பெர்மாத்தா குடியிருப்பு சுகாதாரமற்றது என்று தொடக்கக் காலங்களில் சர்ச்சைகளில் எழுந்தன. அருகிலுள்ள மலக்கழிவு நீர்த் தொட்டிகளில் நிறைந்து வழிந்ததால் பலர் தலைவலி, காய்ச்சல், குமட்டல் என நோய்களுக்கு ஆளாகினர்.
  • டெங்கில் குடியிருப்புப் பகுதிகளில் சம்சுவின் (மலிவு விலைச் சாராயம்) அச்சுறுத்தல் பெருகியது.
  • வளர்ச்சித் திட்டங்களினால் பாதிக்கப்படும் தோட்டத் தொழிலாளர்களைப் பாதுகாக்கும் வகையில் வழிகாட்டு நெறிமுறை ஒன்றைக் கொண்டு வரவிருப்பதாகவும், அதனை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்துடன் இணைந்து செயல்படவுள்ளதாகவும் 1999-ம் ஆண்டு மனிதவளத்துறை அமைச்சர் லிம் ஆ லெக் கூறினார். வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த செயல்பாடுகள் முறையாக நடத்தப்படவில்லை.

இலக்கியப் பதிவுகள்

உசாத்துணை

  • மலேசிய இந்தியர்களின் இக்கட்டான நிலை (2006) - மா. ஜானகிராமன்


✅Finalised Page