under review

புதுப்பேடு பார்சுவநாதர் கோயில்

From Tamil Wiki

புதுப்பேடு பார்சுவநாதர் கோயில் (பொ.யு. 11-ம் நூற்றாண்டு) வடதமிழ்நாட்டு (தொண்டைமண்டல) செங்கல்பட்டு மாவட்டத்தில் புதுப்பேட்டில் அமைந்த சமணக் கோயில்.

இடம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவைச் சார்ந்த புதுப்பேடு சிற்றூரில் பார்சுவநாதர் கோயில் அமைந்துள்ளது. குன்றத்தூரிலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையை ஒட்டி அமைந்துள்ளது.

வரலாறு

மிகக் குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட இச்சிற்றூர் பொ.யு. 11-ம் நூற்றாண்டில் சமண சமய முக்கியத்துவம் வாய்ந்ததாகத் திகழ்ந்திருக்கிறது.

அமைப்பு

இவ்வூரில் மக்கள் வசித்து வரும் பகுதிக்கு மேற்கில் பார்சுவநாதர் சிற்பத்தினைக் கொண்ட சிறிய கோயில் உள்ளது. இது செங்கல்லால் கட்டப்பட்ட சுவர், ஓடுகள் வேய்ந்த கூரையையும் கொண்டது. ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு முன்பிருந்த கோயிலின் இடிபாடுகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தது. இந்த இடிபாடுகளை அகற்றி விட்டு, அதில் தற்போதுள்ள புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

பார்சுவநாதர் சிற்பம்

கோயிலின் கருவறையில் நான்கு அடி உயர பார்சுவப் பெருமானின் சிற்பம் உள்ளது. இது கற்பலகையில் புடைப்புச்சிற்பமாக வடிக்கப்படாமல் முழுமை பெற்ற தனிச்சிற்பமாக உள்ளது. பார்சுவதேவரின் தலைக்கு மேலாக ஐந்து தலை நாகமும், அதற்குமேல் முக்குடையும் காணப்படுகின்றன. இத்தேவரது தோள்களுக்கிணையாக வலதுபுறம் தாமரைமலரும், இடதுபுறம் சங்கும் பொறிக்கப்பட்டிருக்கின்றன. இவை சங்கநிதி, பத்மநிதி ஆகியவற்றைக் குறிப்பவை. பார்சுவநாதரின் கால்களுக்கருகில் சாமரம் வீசுவோர் இருவரது சிற்பங்கள் உள்ளன. இவை பொ.யு. 11- ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கலைப்பாணியைக் கொண்டது.

வழிபாடு

புதுப்பேட்டில் தற்காலத்தில் சமணசமயத்தைச் சார்ந்தவர்கள் இல்லை. இந்த மக்கள் பார்சுவநாதரை ஆதிகேசவப் பெருமாள் எனக்கருதி வழிபட்டு வருகின்றனர். சனிக்கிழமைகளில் பூசையும் ஆண்டுக்கொரு முறை புரட்டாசி மாதத்தில் ஒரு நாள் திருவிழாவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

உசாத்துணை

  • தொண்டை நாட்டுச் சமணக் கோயில்கள் (டாக்டர்.ஏ. ஏகாம்பர நாதன்); 1991


✅Finalised Page