under review

பி. சாம்பமூர்த்தி

From Tamil Wiki
பேராசிரியர் பி. சாம்பமூர்த்தி

பி. சாம்பமூர்த்தி (பிச்சு ஐயர் சாம்பமூர்த்தி) (பிப்ரவரி 14, 1901 - அக்டோபர் 23, 1973) இசைப் பேராசிரியர், ஆய்வாளர், எழுத்தாளர், இசையமைப்பாளர். இந்திய அரசின் பத்மபூஷண் விருது பெற்றார்.

பிறப்பு, கல்வி

பி. சாம்பமூர்த்தி, பிப்ரவரி 14, 1901 அன்று, நெல்லூர் மாவட்டத்தில் உள்ள பித்ரகுண்டாவில், பிச்சு ஐயர் - பார்வதி அம்மாள் இணையருக்கு கடைசி மகனாகப் பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்கள். இரண்டு சகோதரிகள். நான்கு வயதில் தந்தையை இழந்தார். சென்னை தம்புச்செட்டித் தெருவில் இருந்த ஆர்ய பாடசாலையில் ஆரம்பக் கல்வி கற்றார். செயிண்ட் கேபிரியேல் உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைக் கல்வி கற்றார்.

சென்னை கிறித்தவக் கல்லூரியில் இடைநிலைக் கல்வி (இண்டர்மீடியட்) கற்றார். சென்னை மாநிலக் கல்லூரியில் தாவரவியல் மற்றும் புவியியலில் இளங்கலை பட்டம் பெற்றார். சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டம் பயின்றார்.

தனி வாழ்க்கை

பி. சாம்பமூர்த்தி மணமானவர். மனைவி என்.எஸ். ஆனந்தவல்லி.

பி. சாம்பமூர்த்தி (படம் நன்றி: Timescontent.com)

இசை வாழ்க்கை

பி. சாம்பமூர்த்தி, கிருஷ்ணையா, எம். துரைசாமி ஐயர், எஸ்.ஏ. ராமசாமி ஐயர் மற்றும் கிருஷ்ணசாமி பாகவதர் போன்றோரிடம் குரலிசை மற்றும் வயலின் இசை கற்றார். 1928-ல், ராணி மேரி கல்லூரியில் இசைத் துறை ஆசிரியராகப் பொறுப்பேற்றார். ரெவரண்ட் பாப்லி சாம்பமூர்த்தியின் இசை மேதைமையால் ஈர்க்கப்பட்டார். தான் உருவாக்கிய கோடைக்கால இசைப் பள்ளிக்குத் தலைமைப் பொறுப்பேற்குமாறு சாம்பமூர்த்தியை கேட்டுக் கொண்டார். பள்ளியில் இசைப் பேராசிரியராகச் சேர்ந்த சாம்பமூர்த்தி, பின் முதல்வராக உயர்ந்தார். மாணவர்கள் பலருக்கு புதிதாகப் பல பாடத்திட்டங்களைத் தயாரித்து இசைப் பயிற்சி அளித்தார்.

1931-ல், டாயிஷ் அகாடமியின் மானியத்தின் கீழ் ஜெர்மனிக்குச் சென்று இசையியல் பயின்றார். இசை நுணுக்கங்களைக் கற்றார். 1937-ல், சென்னைப் பல்கலைக்கழகத்தில் இசைத் துறையில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார். இசைத் துறையின் பேராசிரியராகவும், துறைத் தலைவராகவும் உயர்ந்தார். 1961 வரை அங்கு பணியாற்றினார். அதன் பின் சென்னை சங்கீத வாத்யாலயாவில் இயக்குநராகப் பணியாற்றினார். 1963-ல், சங்கீத நாடக அகாடமி ஆய்வுநல்கையைப் (ஃபெல்லோஷிப்) பெற்றார். 1964-ல், திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் இசையியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 1966-ம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்திற்குத் திரும்பும் வரை இரண்டு ஆண்டுகள் அங்கு பணியாற்றினார். பல்கலைக்கழக மானியக் குழுவின் கீழ் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல பல்கலைக்கழகங்களுடன் தொடர்புகொண்டு செயல்பட்டார். பல இசை நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார்.

இலக்கிய வாழ்க்கை

பி. சாம்பமூர்த்தி இசை குறித்து ஆய்வு செய்து தமிழிலும் ஆங்கிலத்திலும் பல்வேறு நூல்களை எழுதினார். மூத்த இசையமைப்பாளர்கள், இசைக் கருவிகள், வாசிக்கும் முறைகள், பாடங்கள் என இசை சார்ந்து கற்பிக்கும் பல நூல்களை எழுதினார். இசை ஆய்வாளராகவும் செயல்பட்டார். சாம்பமூர்த்தியின் தென்னிந்திய இசை குறித்த ஆறு தொகுதிகள் கொண்ட ஆய்வு நூலும், 'சிறந்த இசையமைப்பாளர்கள்' குறித்த ஆய்வு நூலும் குறிப்பிடத்தகுந்த ஒன்றாக அறியப்படுகிறது.

சென்னை அரசு அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள இசைக்கருவிகளின் பட்டியலைத் தயாரித்தளித்தது சாம்பமூர்த்திதான்.

விருதுகள்

  • இந்திய அரசின் பத்மபூஷண் விருது
  • சென்னை மியூசிக் அகாதெமி அளித்த சங்கீத கலாநிதி விருது

மறைவு

பி. சாம்பமூர்த்தி, அக்டோபர் 23, 1973 அன்று, தனது 72-ம் வயதில் காலமானார்.

நினைவு

பி. சாம்பமுர்த்தியின் வாழ்க்கை வரலாற்றை, 'பேராசிரியர் சாம்பமூர்த்தி, தி விஷனரி மியூசிகாலஜிஸ்ட்' (Prof. Sambamoorthy, the Visionary Musicologist) என்ற தலைப்பில் சென்னை மியூசிக் அகாதெமி வெளியிட்டது.

மதிப்பீடு

பி. சாம்பமூர்த்தி, கர்நாடக இசையுலகின் வளர்ச்சிக்குப் பல விதங்களிலும் பங்களித்த மூத்த இசைக் கலைஞர். இசை குறித்துப் பல விரிவான ஆய்வுகளை மேற்கொண்டவர். மாணவர்கள் பயன்பெறும் பொருட்டு இசை குறித்த பல நூல்களை எழுதினார். இசை கற்பித்தார். இசை குறித்து ஆங்கிலத்தில் அதிகம் நூல்கள் எழுதிய எழுத்தாளராக அறியப்படுகிறார். இசைப் பேராசிரியராகவும், ஆய்வாளராகவும், இசை குறித்த ஆய்வு நூல்கள் பல எழுதிய எழுத்தாளராகவும் மதிப்பிடப்படுகிறார்.

நூல்கள்

தமிழ்
  • கீர்த்தனாசாகரம் - ஐந்து தொகுதிகள்
  • கர்னாடக சங்கீத புஸ்தகம்: முதல் பாகம்
  • தமிழ்ப்பாட்டுக்கள்: முதல் பாகம்
  • நாமாவளி சதகம்
ஆங்கிலம்
  • Great Composers
  • South Indian Music - Volume 1-3
  • The Flute
  • History of Indian Music
  • Aids to the Teaching of Music
  • Tyagaraja
  • Elements of Western Music for Students of Indian Music
  • The Teaching of Music
  • Tyagaraja's Prahlada bhakti vijayam
  • Great Musicians
  • Madras as a seat of musical learning
  • A Dictionary of South Indian Music and Musicians
  • South Indian music series
  • Catalogue of Musical Instruments Exhibited in the Government Museum
  • Prof. Sambamoorthy's 72 Melakarta Pocket Guide
  • Grammar of Indian Music: South India
  • Laya Vadyas: Time-keeping Instruments
  • Syama Sastri and other Famous Figures of South Indian Music
  • Elements of Karnatic Music: Containing the Primer
  • Manuscript Containing Melodies in Staff Notation
  • A Practical Course in Karnatic Music: For Beginners
  • Indian Melodies in Staff Notation
  • Tamil Songs: With Notation
  • Pictures of Famous Composers, Musicians and Patrons
  • Kritis of Pallavi Seshayyar
  • Guide Book on the Teaching of Music in Forms I to III
  • 72 Melakarta Pocket Guide
  • Sruti vadyas: drones
  • Musical compositions of Cheyyur Chengalyaraya Sastiyar
  • Laya Vayas: Time-keeping Instruments
நினைவு நூல்
  • Prof. Sambamoorthy, the Visionary Musicologist

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 21-May-2026, 06:46:44 IST