under review

பி. கேசவபிள்ளை

From Tamil Wiki
குத்தி கேசவபிள்ளை

பி. கேசவபிள்ளை (குத்தி பி. கேசவபிள்ளை, பட்டு கேசவபிள்ளை) (Gooty Kesavapillai) (அக்டோபர் 8, 1860 - மார்ச் 28, 1933) அரசியல்வாதி, இதழியலாளர், சுதந்திரப்போராட்ட வீரர், சமூகப்பணியாளர். காங்கிரஸ், சென்னை சட்டமன்ற உறுப்பினராக பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்படக் காரணமாக இருந்தார். அயலகத் தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்காகப் போராடினார்.

பிறப்பு, கல்வி

பி. கேசவபிள்ளையின் முழுப்பெயர் பட்டு கேசவபிள்ளை. வட ஆர்க்காடு குடியாத்தம் வட்டத்திலுள்ள பட்டு என்னும் சிற்றூரில் அக்டோபர் 8, 1860-ல் பிறந்தார். 1883 முதல் குத்தி என்ற ஊரில் (Gooty, அன்றைய மதராஸ் மாகாணத்தின் அனந்தபூர் மாவட்டம், தற்போது ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டம்) தேசியப்பணி செய்து புகழ்பெற்றதால் குத்தி பி. கேசவபிள்ளை என்று அழைக்கப்பட்டார். 1878-ல் சித்தூர் மாவட்ட உயர் நிலைப்பள்ளியில் மெட்ரிக்குலேஷன் தேர்வில் வெற்றி பெற்றார். 1880-ல் சேலத்தில் அக்காலத்தில் 'செகண்ட் கிரேட் ப்ளீடர்ஸ் டெஸ்ட்' தேர்வை எழுதினார்.

தனிவாழ்க்கை

கேசவபிள்ளை 1881-ல் குத்தியில் உதவி கலெக்டர் அலுவலகத்தில் குமாஸ்தாவாகப் பணி புரிந்தார். இவரின் மகன் பி. தாமோதரம்பிள்ளை.

அமைப்புப் பணிகள்

கேசவபிள்ளை 1883 முதல் குத்தியில் ப்ளீடராகப் பணியாற்றத் தொடங்கினார். பொதுநலத் தொண்டிற்காக 'குத்தி பீப்பிள்ஸ் அசோஷியேஷன்' என்ற அமைப்பை ஏற்படுத்தினார்.

அரசியல் வாழ்க்கை

பி. கேசவபிள்ளை இருபத்தி மூன்று வயது முதல் பொதுத்தொண்டில் ஈடுபட்டார். ஐம்பது ஆண்டுகாலம் தொடர்ந்து அரசியல், சமூகத்தொண்டில் ஈடுபட்டார். ஆலன் ஆக்டோவியன் ஹ்யூம் சென்னை மகாஜன சபை, பூனா சர்வஜனிக் சபை, பம்பாய் அசோசியேஷன், கல்கத்தா இந்தியன் அசோசியேஷன் முதலான மாநில அரசியல் அமைப்புகளின் உதவியைக் கொண்டு டிசம்பர் 28, 1885-ல் பம்பாயில் ஆரம்பித்த இந்த தேசிய காங்கிரஸின் முதல் மாநாட்டில் 72 பிரதிநிதிகளில் ஒருவராகக் கலந்துகொண்டார். காங்கிரஸ் கட்சியின் போராட்டங்களில் ஈடுபட்டு நான்குமுறை சிறை சென்றார். தொடர்ந்து காங்கிரஸ் மாநாடுகளில் பங்கேற்றார். 1918-ல் டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டின் மூன்று பொதுச் செயலாளர்களில் (மற்ற இருவர் சி.பி. ராமசாமி ஐயர், ஜி.எம். புர்கி) ஒருவர். 1918 வரை காங்கிரஸில் இருந்தார்.

1917-ல் பிராமணர் அல்லாதவர் நலன்களை முன்வைத்து ஜஸ்டிஸ் கட்சிக்கு மாற்றாக காங்கிரஸ் கட்சியிலிருந்து உருவான சென்னை மாகாண சங்கத்தில் பணியாற்றினார். காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளுக்கு முரண்படாத வகையில் தென்னாட்டு பிராமணர் அல்லாத வகுப்பினரின் நலன்களை நாடும் நோக்கம் கொண்டிருந்த இந்த அமைப்பில் பணியாற்றினார். இந்த சங்கத்தின் துணைத்தலைவர்களில் ஒருவராக ஆனார். பின்னால் சென்னை மாகாண சங்கம் மெல்ல அழிந்தது. அதன் கோரிக்கைகளை காங்கிரசின் பிராமண தலைவர்கள் கடுமையாக எதிர்த்ததும் இதற்குக் காரணம். அதன் தலைவர் கேசவ பிள்ளை காங்கிரசிலிருந்து விலகி நீதிக்கட்சியில் சேர்ந்தார்.

பொறுப்புகள்

கேசவபிள்ளை கூத்தி நகராட்சிமன்ற உறுப்பினர், தலைவர் பொறுப்புகளை வகித்தார். சென்னை மாகாணச் சட்டமன்றத்தில் (Madras Legislative Council) நகராட்சிகளின் பிரதிநிதியாகப் பணியாற்றினார். 1908 முதல் 1930 வரை சட்டமன்றத்துறையில் பணியாற்றினார். 1921-26 ஆண்டுகளில் இருமுறை சென்னை சட்டமன்றத்தின் துணைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னை மாகாண சட்டமன்றத்தில் சிறைச்சாலைக் கொள்கை மசோதாவைக் (Jail policy resolution)கொண்டு வந்து அன்றைய சென்னை மாகாண ஆட்சியாளர் பொப்பிலி மகாராஜாவால் சிறைச்சாலை ஆணையம் (Jail Commission) அமைக்கப்படக் காரணமாக இருந்தார். சென்னை வனச்சீர்திருத்த ஆணையத்தின் (Madras Forest Commission) உருவாக்கத்திற்கும் காரணமாக இருந்தார். 1912-ல் வனத்துறை பஞ்சாயத்துகள், உழவர் பிரச்சனைகள் பற்றிய பரிந்துரையைச் செய்தார். வி.எஸ். சீனிவாச சாஸ்திரியார் கொண்டு வந்த 'ருதுமதி விவாக மசோதாவை' (வயது வந்த பெண் திருமணத்தை சட்ட சம்மதமாக்குதல்) ஆதரித்தார். தொடக்கப்பள்ளிகளில் பயிற்று மொழி தமிழாக இருக்க வேண்டும் என வாதிட்டார். இந்து சமய அறநிலையத்துறை மசோதாவை நிறைவேற்ற ஆதரவளித்தார்.

சென்னை தொழிலாளர் சங்கம்

கேசவப்பிள்ளை சென்னை தொழிலாளர் சங்கத்தை நிறுவிய ஐவரில் ஒருவர். ஏப்ரல் 27, 1918-ல் தோன்றிய சென்னை தொழிலாளர் சங்கத்தின் தலைவராக திரு வாடியாவும், துணைத்தலைவர்களாக திரு.வி.க வும், கேசவப்பிள்ளையும், செயலாளர்களாக இராமாஞ்சலு நாயுடு, செல்வபதி செட்டியாரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1920-ல் கூடிய முதல் மாகாணத் தொழிலாளர் மாநாட்டிற்கு தலைமை தாங்கினார். 1931-ல் சென்னை தொழிலாளர் சங்கத்தின் கட்டிடத்தைத் திறந்து வைத்தார்.

அயல்நாட்டு இந்தியர் பிரச்சனை
  • 1894-ல் சென்னையில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் தென்னாப்பிரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் பிரச்சனை பற்றிய தீர்மானம் நிறைவேற்றக் காரணமானவர்களில் ஒருவர்.
  • 1909-ல் இலங்கை வாழ் இந்தியர்கள் அரசியல் உரிமை பெறவும், இந்திய தோட்டத்தொழிலாளர்கள் பிரச்சனையை ஆராயவும் பி. கேசவபிள்ளை கொழும்பு சென்றார்.
  • 1921-ல் தென்னமெரிக்க பிரிடிஷ் கயானா இந்தியத்தொழிலாளர்கள், பிரச்சனைகள் பற்றிய ஆய்வறிக்கையை உருவாக்கித்தர இந்திய அரசால் அனுப்பப்பட்ட தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கினார். 1924-ல் இந்திய அரசால் தூதுக்குழுவின் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.

இதழியல்

குத்தி கேசவபிள்ளை 1880 -ல் ஹிந்து நாளிதழின் குத்தி பகுதியின் சுதந்திரச் செய்தியாளராகப் பணியாற்றினார். 1883-ல் ஹிந்துவின் அதிகாரபூர்வ செய்தியாளராக ஆனார். சேலம் சி. விஜயராகவாச்சாரியாரை ஆதரித்து சென்னை ‘இந்து’ பத்திரிக்கையில் எழுதினார். 1882-ல் சேலத்தில் நிகழ்ந்த வகுப்புவாதக் கலவரத்தில் சி. விஜயராகவாச்சாரியாரை சிக்க வைக்க சேலம் கலெக்டர் சூழ்ச்சி செய்தார். அதை முறியடிக்க பி. கேசவபிள்ளையின் கட்டுரைகள் பயன்பட்டன.

குத்தியில் ரயில்வே கேட் கீப்பராகப் பணியாற்றிய உறம்பண்ணா பெண்களைக் கற்பழிக்க எண்ணிய இரு ஆங்கிலேயர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த செய்தியை எழுதினார். இது நிறப்பாகுபாட்டிற்கு எதிரான குரலை எழுப்பியது. சேலம் கலவரம், ரிப்பன் பிரபு ஆதரவு, செங்கற்பட்டு தாசில்தார் ஊழல், வரிக்கொடுமைகள், ஏகபோகங்கள் எதிர்ப்பு, வனத்துறை சீர்திருத்தங்கள், சமூக சீர்திருத்தங்கள் சார்ந்து எழுதினார்.

இலக்கிய வாழ்க்கை

பி. கேசவபிள்ளை நாலயிர திவ்ய பிரபந்தம் மற்றும் திருக்குறள் மீது ஈடுபாடு கொண்டவர். ’இந்து’ பத்திரிக்கையில் தெலுங்கு இலக்கியங்கள் பற்றி எழுதினார். 1914-ல் திருச்சிராப்பள்ளியில் கூடிய ஐந்தாவது சைவ சித்தாந்த மாநாட்டிற்கு தலைமை தாங்கினார். 1915-ல் நந்தியாலில் நடைபெற்ற தெலுங்கு இலக்கிய மாநாட்டில் தெலுங்கு இலக்கியத்திற்கு அவர் ஆற்றிய தொண்டைப் பற்றிய உரையாற்றினார். ஆந்திர மாநில அரசு பி. கேசவபிள்ளையின் மகன் தாமோதரபிள்ளை எழுதிய ”Gooty Kesavapillai - A Deenabandu of South India” என்னும் நூலை 1978-ல் வெளியிட்டது.

பட்டம்/சிறப்புகள்

  • ஆங்கில அரசு குத்தி கேசவபிள்ளைக்கு ராவ் பகதூர், திவான் பகதூர், சி.ஐ.இ பட்டங்கள் அளித்தது.
  • அயல்நாட்டு வாழ் இந்தியர்களின் பிரச்சனைகளைப் பேசியதால் 'கூலிங் கிங்'என்றழைக்கப்பட்டார்.
  • 1939-ல் சென்னை சட்டமன்றத்தில் பி. கேசவபிள்ளையின் உருவப்படம் திறந்துவைக்கப்பட்டது.
  • சென்னை தொழிலாளர் சங்க கட்டிடத்தில் பி. கேசவபிள்ளையின் மார்பளவு உருவச்சிலை திறந்துவைக்கப்பட்டது.
  • கோயம்புத்தூரில் மத்திய மந்திரி கே. ரகுராமய்யா தலைமையில் பி. கேசவபிள்ளையின் உருவப்படம் திறந்துவைக்கப்பட்டது.
  • 1960-ல் பி. கேசவபிள்ளையின் நூற்றாண்டு விழாக்கொண்டாட்டம் சென்னை, ஆந்திராவில் நடைபெற்றது.

மறைவு

பி. கேசவபிள்ளை மார்ச் 28, 1933-ல் காலமானார்.

நூல்கள்/நினைவேந்தல்
  • Gooty Kesavapillai - A Deenabandu of South India - பி. தாமோதரபிள்ளை

உசாத்துணை


✅Finalised Page