under review

பி. இரத்தினசபாபதி

From Tamil Wiki
பி. இரத்தினசபாபதி

பி. இரத்தினசபாபதி (பிறப்பு: ஏப்ரல் 29, 1941) எழுத்தாளர், ஆய்வாளர், கல்வியாளர். பேராசிரியர். 'தமிழகக் கல்வி ஒரு வரலாற்றுப் பார்வை' என்னும் பி. இரத்தினசபாபதியின் நூல் கல்வியாளர்களால் குறிப்பிடத்தகுந்த ஆய்வு நூலாகக் கருதப்படுகிறது.

பிறப்பு, கல்வி

பி. இரத்தினசபாபதி, ஏப்ரல் 29, 1941 அன்று, தென்காசி அருகிலுள்ள கணக்கப்பிள்ளை வலசை என்ற ஊரில், இல. பிச்சமுத்து - சுப்பம்மாள் இணையருக்குப் பிறந்தார். தொடக்கக் கல்வியை கணக்கப் பிள்ளை வலசை மாவட்டக் கழகத் தொடக்கப் பள்ளியில் பயின்றார். தென்காசி ஐ.சி. ஈசுவரன் பிள்ளை உயர்நிலைப்பள்ளியில் மேற்கல்வி கற்றார். கணினித்துறையில் பட்டயம் பெற்றார்.

விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் புதுமுக வகுப்புப் பயின்றார். பாளையங்கோட்டை தூய சவேரியர் கல்லூரியில் பயின்று இளங்கலை பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பயின்று தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் படித்து ஆசிரியர் பயிற்சிப் பட்டம் பெற்றார். 1989-ல் முனைவர் பட்டம் பெற்றார். கணினி அறிவியலில் பட்டயம் பெற்றார்.

தனி வாழ்க்கை

பி. இரத்தினசபாபதி, மணமானவர். மனைவி கௌரிபாய். இவர்களுக்கு நவநீதமுத்து, ரேணுபத்மா என இரு பிள்ளைகள்.

கல்விப் பணிகள்

பி. இரத்தினசபாபதி, 1972-ல், தஞ்சை சரபோஜி கல்லூரியில் தமிழ்ப் பயிற்றுநராகப் பொறுப்பேற்றார். தொடர்ந்து வேலூர் முத்துலிங்கம் கல்லூரி, கலைஞர் கருணாநிதி அரசுக் கல்லூரி, திருவண்ணாமலை கல்லூரி, சென்னை நந்தனம் கலைக் கல்லூரி, சென்னை சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி ஆகியவற்றில் கணித ஆசிரியர், பள்ளித் துணை ஆய்வாளர், மாவட்டக் கல்விப் பொறுப்பு அலுவலர், தமிழ்ப் பயிற்றுநர், தமிழ்ப் பேராசிரியர், கணினிக் கல்விப் பேராசிரியர் எனப் பல நிலைகளில் பணியாற்றினார் 1999-ல் பணி ஓய்வு பெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

பி. இரத்தினசபாபதி, கல்வியியல் சார்ந்த பல நூல்களை எழுதினார். 'தமிழகக் கல்வி ஒரு வரலாற்றுப் பார்வை' என்னும் பி. இரத்தினசபாபதியின் நூல், தமிழகக் கல்வியியலில் புதிய சிந்தனைகளையும் தெளிவையும் விதைத்த நூலாக ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. இரத்தினசபாபதி எழுதிய 'கல்வியில் தேர்வு', 'வினாக்களில் விரிசல்' முதலிய நூல்கள் தமிழ்நாட்டில் தேர்வு முறையில் மாற்றங்களை ஏற்படுத்தக் காரணமாகின.

தமிழ் இலக்கியம், மருத்துவம், கல்வியியல், கணினிக் கல்வி போன்ற துறைகளில் 30-க்கும் மேற்பட்ட தமிழ் நூல்களையும், 2 ஆங்கில நூல்களையும் எழுதினார். 10 நூல்களை பதிப்பித்தார். இவரது நூல்கள் பல கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பாட நூலாக வைக்கப்பட்டன.

கல்விச் செயல்பாடுகள்

பி. இரத்தினசபாபதி, பணி நிறைவுக்குப் பின் மைசூர், இந்திய மொழிகளின் நடுவண் நிறுவத்தினத்தில் MILES[1], NTs-Indian ஆகிய செயல்திட்டங்களில் பணியாற்றினார். 'தமிழகக் கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம்' என்னும் கல்வியியல் அமைப்பை நிறுவினார். அதன் மூலம் தமிழகப் பள்ளிகளின் கல்வித் தரம், ஆசிரியர்களின் தேவைகள், அவர்களுக்கான பயிற்சிகள் பற்றி ஆய்வு மேற்கொண்டார்.

தனது தமிழகக் கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம் மூலம், தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை, ஆசிரியர் கல்வித்துறை, அரசுப் பள்ளி ஆசிரியர்கள், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், தனியார் ஆசிரியர் பயிற்சி மையங்கள் ஆகியவற்றிற்குப் பணியிடைப் பயிற்சிகளை அளித்தார். கல்வியியலில் ஏற்படும் மாற்றங்கள், வளர்ச்சிகள், புதிதாகக் கொண்டுவரப்படும் கல்வி முறையைப் பற்றி ஆராய்ந்து வளர்ச்சிப் பாதைக்கு வழிகாட்டும் நடைமுறையைத் தமிழகக் கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம் மூலம் மேற்கொண்டார்.

1989-ல் 9-ம் வகுப்பு தமிழ்ப் பாடநூல், 2005-ல் 11-ம் வகுப்பு தமிழ்ச் சிறப்புப் பாட நூல், 2006-ல் 12-ம் வகுப்பு தமிழ்ச் சிறப்புப் பாடநூல் ஆகியவற்றைத் தலைமையேற்று உருவாக்கினார். 1995-ல் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் நகரில் நடைபெற்ற பன்னாட்டு நீர்வளப் பாதுகாப்பு நிறுவனம் நடத்திய கருத்தரங்கில் 'Water Problem in Mega Cities Madras A Case Study' எனும் தலைப்பிலும், 2000-ல் ஸ்டாக்ஹோம் நகரில் நடைபெற்ற கருத்தரங்கிலும் கலந்துகொண்டு ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தார். இந்திய அளவிலும், உலக அளவிலும் நடந்த பல்வேறு கருத்தரங்குகளிலும், பன்னாட்டுக் கருத்தரங்குகளிலும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். 2015-ல் மலேசியாவில் நடைபெற்ற ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாட்டில் 'March to Marshal the Tamil Diasporas Across the Globe' எனும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரை அளித்தார்.

பொறுப்பு

  • பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் செயலாளர் மற்றும் துணைத்தலைவர்.
  • தமிழகக் கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவன அமைப்பாளர்

விருதுகள்/பரிசுகள்

  • பி. இரத்தினசபாபதி, முனைவர் சு. வசந்தியுடன் இணைந்து எழுதிய 'கற்பித்தலில் புதிய அணுகுமுறை' எனும் நூலுக்கு தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007-ம் ஆண்டுக்கான சிறந்த நூலுக்கான பரிசு.
  • தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது (2017)

வாழ்க்கை வரலாறு

பேராசிரியர், முனைவர் பி. இரத்தினசபாபதியின் வாழ்க்கை வரலாற்றை டாக்டர் வாசு. அறிவழகன் எழுதினார். இந்நூலை கலைஞன் பதிப்பகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையுடனும், மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையுடனும் இணைந்து 2016-ல் வெளியிட்டது.

மதிப்பீடு

பி. இரத்தினசபாபதி ஒரு கல்வியாளர். கல்வியியல் சார்ந்து பல ஆய்வுகளை மேற்கொண்டார். ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வித்துறை இவற்றுக்கிடையே ஓர் ஒருங்கிணைப்பு உருவாக உழைத்தார். கல்வியியல் சார்ந்து இவர் எழுதியிருக்கும் நூல்கள் மிக முக்கியமானவையாக கல்வியியல் ஆய்வாளர்களால் மதிப்பிடப்படுகின்றன. பி. இரத்தினசபாபதி கல்வித்துறை சார்ந்து 25-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதிய முன்னோடித் தமிழ்ப் பேராசிரியராக அறியப்படுகிறார்.

நூல்கள்

  • சோர்விலாச் சுரதா
  • கல்வியில் தேர்வு
  • கற்றலும் கற்பித்தலும்
  • கல்வி ஏற்பாட்டில் மொழி
  • அறிவும் கல்வி ஏற்பாடும்
  • கற்போர் கற்றல் உளவியல்
  • தமிழ் கற்பித்தல்
  • தமிழ் கற்பித்தல் முறைகள் - பகுதி 1
  • படிப்புத்துறைகளையும் பாடப்பொருள்களையும் புரிதல்
  • காற்றலைக் கணித்தல்
  • தமிழ் கற்க, கற்பிக்க
  • தமிழகக் கல்வி ஒரு வரலாற்றுப் பார்வை
  • ஆட்சிப்பொறுப்பில் அண்ணா
  • தமிழ்க் கல்வி
  • கல்வியில் தேர்வு
  • வினாக்களில் விரிசல்
  • நுண்நிலை கற்பித்தல்
  • பல்லாண்டு வாழப் பயனுள்ள மருந்துகள்
  • தூது இலக்கியம் - ஒரு புதிய பார்வை
  • கல்வியும் சமூகவயமாதலும்
  • கற்பித்தல், கற்றல் முதன்மைகள்
  • பாடப்பொருள் மற்றும் தமிழ் கற்பித்தல் - பொதுத்தமிழ்
  • தமிழ் கற்பித்தல் புதுமைகள் - சிறப்புத்தமிழ்
  • எழுச்சியுறும் இந்தியாவில் கல்வி
  • செம்மொழிக் கல்வி (தமிழ்)
  • கல்வியில் தேர்வு
  • இன்றைய கல்வியில் உளவியல்
  • கல்வியின் கருத்தியல் அடிப்படைகள்
  • குறவஞ்சி
  • கல்வியில் மாமணி கணபதி
  • சிறப்புத்தமிழ்ச் சீர்மையும் செந்தமிழ்க் கல்வியும்
  • தமிழகக் கல்வி ஒரு வரலாற்றுப் பார்வை
  • செம்மொழிச் சிந்தனைகள்
  • கல்விநெறிக் காவலர் நெ.து.சுந்தரவடிவேலு (டாக்டர் வாசு அறிவழகன் உடன் இணைந்து எழுதியது)
  • நுண்நிலை கற்பித்தல் - ஓர் அறிமுகம் (பேரா. வி.கணபதி உடன் இணைந்து எழுதியது)
  • வளர்ந்தெழும் இந்திய சமுதாயத்தில் கல்வி (வி.நடராஜன், ஆர்.ராஜ்மோகன் உடன் இணைந்து எழுதியது)
  • கல்வி புதுமைகளும் கலைத்திட்ட மேம்பாடும் (வி. நடராஜனுடன் இணைந்து எழுதியது)
  • சமூக அறிவியல் பாடப்பொருள் கற்பிக்கும் முறைகள் (பேரா.வி.கணபதி, வி.நடராஜனுடன் இணைந்து எழுதியது)
  • கற்பித்தலில் புதிய அணுகுமுறை (வரலாறு) (பேராசிரியர் முனைவர் சு.வசந்தி உடன் இணைந்து எழுதியது)

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Jan-2025, 15:58:31 IST