under review

பிரேமகலாவத்யம்

From Tamil Wiki

பிரேமகலாவத்யம் (1893) திரிசிரபுரம் சு.வை.குருசாமி சர்மா எழுதிய நாவல். இது ஒரு மிகைக்கற்பனைக் கதை. தமிழின் மூன்றாவது நாவல் என வரிசைப்படுத்தப்படுகிறது. தமிழில் பொழுதுபோக்கு நாவல்கள் உருவாக வழியமைத்தது.

எழுத்து, பதிப்பு

பிரேமகலாவத்யம் 1888-ல் திரிசிரபுரம் சு.வை.குருசாமி சர்மாவால் எழுதப்பட்டது. 1893-ல் வெளியாகியது.

கதைச்சுருக்கம்

மழபாடி என்னும் ஊரில் வாழும் தயாநாதர் என்பவருக்கு கடுமுகி என்னும் பெண் இரண்டாம் மனைவி. அவருடைய முதல் மகன் பிரேமன். அவனை பள்ளிக்கு அனுப்பாமல் அடிமையாக நடத்துகிறாள். அவனுடைய அறிவைக்கண்ட ஒரு பெரியவர் அவன் இல்லத்தருகே குடில்கட்டி தங்கி அவனுக்கு கல்வி கற்பிக்கிறார். பிரேமனும் அவருடன் வசிக்கிறான். அவர்களுடன் ஆத்ரேயன் என்னும் நண்பனும் படிக்கிறான். ஒருநாள் தன் தந்தையை காணவரும் பிரேமனை கடுமுகி கடுமையாக அடிக்கவே அவன் கடிதம் எழுதிவைத்துவிட்டு ஊரைவிட்டுச் செல்கிறான். அவன் குருவும் ஊரைவிட்டுச் செல்கிறார். கடுமுகி அந்தக்குடிசையை கொளுத்திவிடுகிறாள். அவர்கள் இருவரும் விபத்தில் இறந்ததாக ஊராரை நம்பச்செய்கிறாள்.

பல இடங்களுக்குச் செல்லும் பிரேமன் நரபலி கொடுக்கும் பிராமணர்களிடமிருந்து தப்பி அன்பில் என்னும் ஊருக்கு வந்து அங்கிருக்கும் பானுசேகர சர்மாவின் அன்புக்கு பாத்திரமாகிறான். அவர் மகள் கலாவதியை காதலிக்கிறான். நண்பனை தேடி ஆத்ரேயன் குரங்காட்டியாக அலைந்து அவ்வூருக்கு வந்து பிரேமனை கண்டுகொண்டு நிகழ்ந்ததைச் சொல்கிறான். கலாவதியை பாஸ்கர வாத்தியார் என்பவர் தன் மகனுக்காக பெண்கேட்கிறார். பானுசேகர சர்மா மறுக்கிறார். கொடியவராகிய பாஸ்கர வாத்தியார் பல சதிகள் செய்து பிரேமனை கொலைக்குற்றவாளியாக ஆக்கி தண்டனை பெற்றுத் தருகிறார். கைகால்கள் கட்டப்பட்டு ஆற்றில்வீசப்படும் பிரேமனை ஒரு துறவி காப்பாற்றுகிறார். அந்த துறவி அவன் ஆசிரியர்தான்.

உண்மைகள் வெளிப்படுகின்றன. கடுமுகி கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறாள். பாஸ்கர வாத்தியார் தண்டனைக்குள்ளாகிறார். பிரேமனும் கலாவதியும் மணந்துகொள்கிறார்கள். பிரேமன் உள்ளூர் அரசனின் அமைச்சன் ஆகிறான்.

இலக்கிய இடம்

இந்நாவல் தமிழ் நவீன இலக்கியத்தின் தொடக்ககால தடுமாற்றம் ஒன்றின் சித்திரம். இதன் கூறுமுறை வாய்மொழிப்புராணங்களை ஒட்டியது. பட்டிவிக்ரமார்க்கன் கதை போன்றவற்றின் சாயல் கொண்டது. ஆனால் இது காட்டும் சமூகச்சூழல் யதார்த்தமானது. பதினெட்டாம்நூற்றாண்டு தஞ்சாவூர் மாவட்ட கிராமங்களே இதில் பேசப்படுகின்றன. பிராமணசமூகச் சூழல் விவரிக்கப்படுகிறது.

இந்நாவலில் அக்காலத்தில் இருந்த விளையாட்டுக்கள், மதநம்பிக்கைகள் போன்ற சமூகச்சித்திரங்கள் உள்ளன. அக்காலப் பிராமணர்கள் சொற்களை கொச்சையாக்கிப் பேசும் வழக்கமிருந்தது. அதை ராஜம் அய்யர் கமலாம்பாள் சரித்திரத்தில் கண்டிக்கிறார். அதேபோல இந்நாவலும் கண்டிக்கிறது. 'மழபாடி’ என்னும் ஊர் 'மலவாடி’ என திரிந்திருப்பதை கேலியுடன் உரையாடலில் காட்டுகிறார்.

விவாதம்

பிரேமகலாவத்யம் வெளிவந்தபோது விவேக சிந்தாமணி இதழில் 1894-ல் நீண்ட விமர்சனம் ஒன்று வெளியிடப்பட்டது. இரு இதழ்களிலாக வெளிவந்த அவ்விமர்சனம் இந்நாவலை ராஜம் ஐயரின் கமலாம்பாள் சரித்திரத்துடன் ஒப்பிடுகிறது தீபம் 1976 நவம்பர் இதழில் டாக்டர் தா.வே.வீராச்சாமி இந்நாவலில் கடுமுகி என சொல்லப்படுவது பிரிட்டிஷ் ஆதிக்கத்தையே என விளக்கி ஒரு கட்டுரையை எழுதினார். அதை மறுத்து சிட்டி-சிவபாதசுந்தரம் 1977 ஜனவரி இதழில் கட்டுரை எழுதினார்.

உசாத்துணை✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:36:21 IST