under review

பிருஹத் கதா

From Tamil Wiki

பிருஹத் கதா (பிருகத் கதா) (பொயு 3-ம் நூற்றாண்டு) அழிந்துபட்ட தொன்மையான காவியம். இது பைசாசிக மொழியில் எழுதப்பட்டது என்றும், இதன் ஆசிரியர் குணாட்யர் என்றும் சொல்லப்படுகிறது. இந்நூல் முழுமையாக அழிந்துவிட்டாலும் இந்நூலின் கதைகள் பின்னர் உருவான பல நூல்களில் உள்ளன எனப்படுகிறது.

ஆசிரியர்

பிருஹத் கதாவின் ஆசிரியர் குணாட்யர். இவர் பொயு 3-ம் நூற்றாண்டில் வாழ்ந்தார் என்று சொல்லப்படுகிறது.

காலம்

பிருஹத்கதா பொயு 6 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. சம்ஸ்கிருத கவிஞர்களான தண்டி, சுபந்து, பாணபட்டர் போன்றவர்கள் தங்கள் நூல்களில் குறிப்பிட்டிருப்பதனால் இந்நூல் அவர்களுக்கு முன், பொயு 6 ல் எழுதப்பட்டிருக்கலாம் என்று சில ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். ஆனால் ஃபாசன், ஹர்ஷர் ஆகியோரால் எழுதப்பட்ட உதயணகுமாரனின் கதை பிருஹத் கதா நூலில் இருந்து எடுத்தாளப்பட்டது எனப்படுகிறது. ஆகவே பொயு 3-ம் நூற்றாண்டிலேயே பிருஹத்கதா எழுதப்பட்டிருக்கலாம் என்றும் ஆய்வாளர் கருதுகிறார்கள்.

நூல்குறிப்புகள்

குணாட்யரின் பிருஹத்கதா பற்றி பிற்கால நூல் குறிப்புகளில் இருந்தே அப்படி ஒரு பெரும் படைப்பு இருந்தது என்பது தெரியவருகிறது

  • பொயு 6 (அல்லது 7) ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுபந்து எழுதிய வாசவதத்தை என்னும் காவியம், பிருஹத்கதாவின் கருப்பொருளை எடுத்துக்கொண்டது என அந்நூல் குறிப்பிடுகிறது. பிருஹத்கதா பற்றிய தொன்மையான குறிப்பு அதுவே.
  • பாணபட்டர் (பொயு 7) அவருடைய ஹர்ஷ சரிதம், காதம்பரி என்னும் இரு காவியங்களிலும் அவற்றின் மூலக்கதை பிருஹத்கதாவில் இருந்து எடுத்தாளப்பட்டது என்கிறார்.
  • தண்டி (பொயு 8) அவருடைய காவ்யாதர்ச என்னும் நூலில் பிருஹத் கதை பைசாசிகம் (காட்டுமிராண்டி மொழி) அல்லது பூத பாஷா (மண்ணின் மொழி) வில் எழுதப்பட்டது என்கிறார்.
  • தசகுமார சரிதம் நூலில் (பொயு 8) தண்டி (இவர் வேறொருவர் என்பது பல ஆய்வாளர்களின் தரப்பு) பிருஹத்கதா பற்றி குறிப்பிடுகிறார்.
  • கம்போடியாவின் கல்வெட்டு ஒன்று (பொயு 875) குணாத்யரையும் அவர் பிராகிருத மொழியை தவிர்த்து பைசாசிக மொழியில் எழுதியதையும் குறிப்பிடுகிறது.
  • நிருபதுங்கரின் கன்னட இலக்கண நூலான கவிராஜமார்க்கா (பொயு 850) துர்வினிதர் எழுதிய மறைந்துபோன பிருஹத்கதாவின் ஒரு வடிவத்தைப் பற்றிச் சொல்கிறது.
  • தனஞ்சயரின் (பொயு 10) தசரூபம் என்னும் நாடக இலக்கண நூலில் பிருஹத்கதா பற்றிய குறிப்பு உள்ளது
  • திருவிக்ரம பட்டரின் நள சம்பு (பொயு 10) என்னும் பாட்டிடையிட்ட உரையுடைச் செய்யுளில் குறிப்பு உள்ளது
  • கோவர்த்தனாச்சாரியா (பொயு 12) இயற்றிய ஆர்யசப்தசதி என்னும் அகத்துறை நூலில் பிருஹத்கதா பற்றிய குறிப்பு உள்ளது

தொடர்ச்சிகள்

சோமதேவரின் கதாசரித சாகரம் ( பொயு11), க்ஷேமேந்திரரின் பிருஹத்கதா மஞ்சரி ( பொயு 11), புத்தஸ்வாமியின் பிருஹத்கதா ஸ்லோக சம்கிரகா (பொயு 10) போன்ற பிறகு எழுதப்பட்ட நூல்கள் பிருஹத்கதாவின் கதைகளை மறு ஆக்கம் செய்து உருவாக்கப்பட்டவை எனப்படுகிறது.

தமிழில் கொங்குவேளிர் எழுதிய பெருங்கதை (பொயு 11) பிருஹத்கதாவின் மறு ஆக்கமே எனப்படுகிறது. தமிழில் கந்தியர் எழுதிய உதயண குமார காவியம் பெருங்கதையின் சுருக்கமான வடிவம். இதுவும் பிருஹத்கதையின் இன்னொரு வடிவம் எனப்படுகிறது.

ஆனால் இந்நூல்களின் கதைகள் பிருஹத்கதையின் தொடர்ச்சியே என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை. பிருஹத்கதை ஒரு கதைத்தொகுதியாகவோ, நீண்ட காவியமாகவோ இருந்திருக்கலாம் என்றும் இக்கதைகளும் அவற்றில் இருந்திருக்கலாம் என்றும் மட்டுமே ஆய்வாளர் கூறுகிறார்கள்.

தொன்மம்

கதாசரித சாகரம் பிருஹத்கதாவின் உருவாக்கத்தைப் பற்றி இப்படி ஒரு தொன்மத்தைச் சொல்கிறது. கைலாய மலையில் இருந்த சிவன் தன் மனைவி பார்வதிக்கு பிருஹத்கதாவின் கதையைச் சொன்னார். அதை வித்யாதரமனாகிய புஷ்பதந்தன் ஒட்டுகேட்டான். அதை அவன் தன் மனைவி ஜயைக்கு சொன்னான். ஜயை பார்வதியிடம் அக்கதையைச் சொல்ல, பார்வதி என்ன நடந்தது என அறிந்துகொண்டாள். பார்வதி புஷ்பதந்தனை தீச்சொல் இடும்போது புஷ்பதந்தனின் நண்பனான மால்யவான் அவனுக்கு பரிந்து பேசினான். இருவரையும் பார்வதி தீச்சொல்லிட்டாள். அதன்படி புஷ்பதந்தன் மனிதனாகக் காட்டில் பிறந்து அக்கதையை கானபூதி என்னும் பைசாசிகனிடம் சொல்லவேண்டும். அதன்பின் தீச்சொல் விடுதலை பெற்று கௌசாம்பி என்னும் ஊரில் வரருசி என்னும் முனிவராக மறுபிறப்பு எடுக்கவேண்டும். மால்யவான் குணாத்யன் என்னும் கவிஞனாகப் பிறந்து கனபூதி என்னும் பைசாசிகனிடமிருந்து அக்கதையை கேட்டு அதை ஒரு காவியமாக ஆக்கி உலகுக்கு அளிக்கவேண்டும். அதனூடாக அவனுக்கு விண்மீட்சி அமையும் என்றாள் பார்வதி.

குபேரனின் சாபத்தால் கானபூதி என்னும் பிசாசாக மாறி இருந்த சுப்ரதீகன் என்னும் யட்சன் விந்தியமலை அருகே ஓரு காட்டில் வாழ்ந்து வந்தான். மால்யவான் சுப்ரதிஷ்டை அல்லது பிரதிஷ்டானபுரம் என்னும் நகரில் குணாட்யனாகப் பிறந்தான். வரருசி கானபூதியிடமிருந்து சிவன் சொன்ன கதையைக் கேட்டறிந்தான். அவரிடமிருந்து அதைக் கேட்டறிந்த குணாட்யர் அதை ஆறுலட்சம் பாடல்கள் கொண்ட பெருங்காவியமாக எழுதினார்.

குணாட்யர் தன் ரத்தத்தால் காட்டின் இலைகளில் அந்தக் காவியத்தை எழுதியதாகவும் , அதை அவர் சாதவாகன அரசரின் அவையில் அரங்கேற்ற முயன்றதாகவும், அப்போது அங்கிருந்த பண்டிதர்கள் அந்தக் காவியத்தின் மொழியான பைசாசிகம் செவிக்கு அருவருப்பூட்டுவதாகச் சொல்லி அதை நிராகரித்தனர். மனம் உடைந்த குணாட்யர் காட்டுக்குச் சென்று சிதை மூட்டி அதில் தன்னுடைய பெருங்காவியத்தை ஒவ்வொரு இலையாக வாசித்து தீயிலிட்டார்.

காட்டுக்கு வேட்டைக்குச் சென்ற சாதவாகன அரசன் காட்டிலுள்ள அத்தனை விலங்குகளும் கூடி அமைதியாக அமர்ந்து அக்காவியத்தை கேட்பதைக் கண்டு அதன் மகத்துவத்தை உணர்ந்து ஓடிப்போய் குணாட்யரை தடுத்தான். ஆனால் அந்த பெருங்காவியத்தின் 7 காண்டங்களில் ஒன்று மட்டுமே எஞ்சியது. ஆறு காண்டங்களும் தீயில் எரிந்தன. குணாட்யரும் தீயில் பாய்ந்து மறைந்தார். அந்த ஒரு காண்டத்திலுள்ள கதைகளே இன்று எஞ்சுகின்றன. இக்கதை பிற்கால நூலான கதாசரிதசாகரத்தில் உள்ளது.

கதை

பிருஹத்கதாவின் உள்ளடக்கம் பொதுவாக இன்றுவரை எவருக்கும் தெரியாத ஒன்றே. பிருகத்கதையில் உள்ள உதயணன் கதை, நரவாகனதத்தன் கதை ஆகியவை பிற்கால காவியங்களால் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன. தசகுமார சரிதம், அவந்திசுந்தரி கதை, காதம்பரி போன்ற பல காவியங்கள் பிருஹத்கதையில் இருந்து வந்தவை. இந்நூலில் மொத்தம் எத்தனை கதைகள் இருந்தன என்று தெரியவில்லை. உதயணன் என்னும் கதைநாயகனின் வாழ்க்கையைச் சொல்லும் காவியங்கள் பின்னாளில் இந்தியாவில் பல உருவாயின. தமிழில் எழுதப்பட்ட பெருங்கதை உதயணன் கதையை மட்டும் விரிவாக்கிச் சொல்வது.

இலக்கிய இடம்

பிருஹத்கதா பைசாசிக மொழியில் எழுதப்பட்டது என ஆசாரிய தண்டி உள்ளிட்டோர் கூறுகின்றனர். இந்தியாவின் பொதுவான அறிவியக்க மொழியாக விளங்கிய சம்ஸ்கிருதம், அதற்கிணையான இடத்தை வெவ்வேறு காலகட்டங்களில் பெற்றிருந்த பிராகிருதம், பாலி ஆகிய மொழிகளுக்கெல்லாம் அடிப்படையாக பழங்குடி மொழிகள் இருந்துள்ளன என்பதிலும், அவற்றில் பேரிலக்கியங்கள் உருவாயின என்பதற்கும் பிருஹத்கதா சான்று. பிற்காலத்தில் பல காவியங்களின் கதைப்பொருளாக திகழ்ந்த உதயணன் கதை போன்ற பல கதைகள் அடங்கிய மாபெரும் கதைக்கொத்து அது. இன்றைய ஆய்வாளர்கள் அந்நூல் கிடைத்திருந்தால் அதுதான் மானுடத்தின் மிகப்பெரிய தொல்நூலாக இருந்திருக்கும் என கருதுகிறார்கள்.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 20-Apr-2025, 21:45:10 IST