under review

பிரத்தியாகாரம்

From Tamil Wiki

பிரத்தியாகாரம் திருமூலர் குறிப்பிடும் அஷ்ட யோகங்களில் ஒன்று. உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி அதன்மூலம் மனதைக் கட்டுப்படுத்துவதைக் குறிக்கிறது. எட்டு வகையான யோகங்கள் மூலம் அஷ்டமா சித்திகளைப் பெற்றவர்கள் சித்தர்களாகின்றனர். எட்டு யோகங்களில் பிரத்தியாகாரம் ஐந்தாவது நிலையில் உள்ளது.

பிரத்தியாகாரம்

புலன்கள் வாயிலாக வெளிநோக்கிச் செல்லும் மனதை அடக்கி உள்ளேயே நிறுத்துவது பிரத்தியாகாரம். உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி மனதைப் பண்படுத்தும்.

  • திருமந்திரம் - மூன்றாம் தந்திரம்

கண்டுகண்டு உள்ளே கருத்துற வாங்கிடில்
கொண்டு கொண்டு உள்ளே குணம்பல காணலாம்
பண்டு உகந்து எங்கும் பழமறை தேடியை
இன்றுகண்டு இங்கே இருக்கலு மாமே.

விளக்கம்: வெளியே அலைந்து பழக்கப்பட்டுவிட்ட மனதை உடலின் உள்ளேயே பொருந்தும்படி செய்தால் சிறிதுசிறிதாக அகஇருள் விலகும். தேடப்படும் பரம்பொருளை நம் உடலின் உள்ளேயே நம்மால் உணரமுடியும்.

  • திருமந்திரம் - மூன்றாம் தந்திரம்

கடைவாச லைக்கட்டிக் காலை எழுப்பி
இடைவாசல் நோக்கி இனிதுள் இருத்தி
மடைவாயிற் கொக்குப் போல் வந்தித் திருப்பார்க்
குடையாமல் ஊழி இருக்கலு மாமே.

விளக்கம்: மூலாதாரத்தினை இறுக்கி மனதை அங்கே நிறுத்தி அபான வாயுவை குமித்து வெளிப்படாமல் அடக்க, நீர்நிலையில் பெரிய மீனை எதிர்பார்த்து நிற்கும் கொக்கு போல குணடலினி சக்தியானது இடைவாசல் வழியாக அதாவது இடை பிங்கலை நாடிகளுக்கு இடையில் இருக்கும் சுழுமுனை வழியாக ஒவ்வொரு ஆதாரங்களையும் கடந்து மேலெழுந்துவந்து ஜோதியுடன் கலக்கும். இதனால் ஊழிக்காலம் வரை உடலை அழியாமல் வைத்துக்கொள்ள முடியும்.

பிராண சங்கமம்

'பிராணசக்தி' அல்லது 'பிராணன்' என்பது 'வாசி' என அழைக்கப்படுகிறது. பிரபஞ்ச சக்தியே பிராணசக்தி என அழைக்கப்படுகிறது. நாம் உட்சுவாசிக்கும் மூச்சுக் காற்றுடன் பிராணசக்தியும் உட்புகுகிறது. சக்கரங்கள் (ஏழு ஆதாரங்கள்) மூலமாக பிராணசக்தி உள்வாங்கப்படுகிறது. பிராணனைக் கட்டுப்படுத்தும் இலகுவான வழி மூச்சுப் பயிற்சியாகிய பிராணாயாமம் ஆகும். இந்த பிராண சக்தியானது சூட்சும சரீரத்தினால் ஈர்க்கப்பட்டு ஆதாரங்களில் சேமிக்கப்படுகிறது. இது 'நாத சங்கமம்' என அழைக்கப்படுகிறது. பின்னர் எழுபத்து நாலாயிரம் நாடிகளின் வழியாக தச வாயுக்களுடன் இணைந்து தூலஉடல் முழுவதும் பரவுகிறது. இது 'பிராண சங்கமம்' என அழைக்கப்படுகிறது. இந்த பிராண ஓட்டம், வெவ்வேறு நாடிகளில் மாறி மாறி ஓடும். அந்த ஓட்டத்தின்படியே உடலியக்கமும், மனவியக்கமும் செயல்படுகின்றன என்பது சித்தர்களது விளக்கம்.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 22-Jul-2025, 18:43:34 IST