under review

பின்வருநிலையணி

From Tamil Wiki

செய்யுளில் முன்னர் வந்த சொல்லோ பொருளோ இவ்விரண்டுமோ பல முறை பின்னரும் வருவது பின்வருநிலையணி ஆகும்.

முன்வரும் சொல்லும் பொருளும் பலவயின்
பின்வரும் என்னில் பின்வரு நிலையே (தண்டியலங்காரம். 41)

பின்வருநிலையணி மூன்று வகைப்படும்.அவை,

  • சொல் பின்வருநிலையணி
  • பொருள் பின்வருநிலையணி
  • சொற்பொருள் பின்வருநிலையணி

சொல் பின்வருநிலையணி

சொல் பின்வருநிலையணி என்பது ஒரு செய்யுளில் முன்னர் வந்த சொல் பின்னர் பல இடத்தும் வந்து வெவ்வேறு பொருளைத் தருவது சொல் பின்வரு நிலையணி.

எடுத்துக்காட்டு

உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்

இக்குறட்பாவில் 'உடைமை' என்ற சொல்லானது பெற்றிருத்தல், உடைய, பொருள் என வேறுபட்ட பொருளில் பல முறை வந்துள்ளதால் இது சொல் பின்வருநிலையணி.

பொருள் பின்வருநிலையணி

பொருள் பின்வருநிலையணி என்பது செய்யுளில் ஒரே பொருள் தரும் பல சொற்கள் வருவது.

எடுத்துக்காட்டு

"அவிழ்ந்தன " தோன்றி யலர்ந்தன காயா
நெகிழ்ந்தன நேர்முகை முல்லை - 'மகிழ்ந்திதழ்
விண்டன கொன்றை விரிந்த கருவிளை
கொண்டன காந்தள் குலை

அணிப்பொருத்தம்

இப்பாடலில் மலர்தல் என்னும் பொருள் தரக்கூடிய அவிழ்தல், அலர்தல், நெகிழ்தல், விள்ளல், விரிதல் ஆகிய சொற்கள் பல முறை வந்துள்ளமையால் இது பொருள் பின்வருநிலையணி.

சொற்பொருள்பின்வருநிலையணி

சொற்பொருள் பின்வருநிலையணி என்பது செய்யுளில் முன்னர் வந்த சொல் அதே பொருளில் பல முறை வருவது.

எடுத்துக்காட்டு

வைகலும் வைகல் வரக்கண்டும் அஃது உணரார்;
வைகலும் வைகலை வைகும் என்று இன்புறுவர்;
வைகலும் வைகற்றம் வாழ்நாள்மேல் வைகுதல்
வைகலை வைத்துஉணரா தார்

பொருள்:நாள்தோறும் நாள் கழிந்து வருவதைக் கண்கூடாகப் பார்த்திருந்தும், அப்படிக் கழிதலை தம் வாழ்நாள் மேல் வைத்து, அதுதான் இவ்வாறு கழிகின்றது என உணராதவர்கள், நாள்தோறும் நாள்கழிவதைக் கண்டு துன்புறாமல் இன்புறும் நாளாக எண்ணி மகிழ்வார்கள்.

அணிப்பொருத்தம்

இப்பாடலில், 'வைகல்' என்ற முன் வந்த சொல் மீண்டும் பல இடங்களில் 'நாள்' என்னும் ஒரே பொருளில் வருவதால் இப்பாடல் சொல் பொருள் பின்வருநிலை அணியாகிறது.

உசாத்துணை

தமிழ் இணையப் பல்கலைக்கழகம்


✅Finalised Page