under review

பின்னலூர் மு. விவேகானந்தன்

From Tamil Wiki
பின்னலூர் மு. விவேகானந்தன்

பின்னலூர் மு. விவேகானந்தன் (பிப்ரவரி 23, 1951) எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

பிறப்பு, கல்வி

மு. விவேகானந்தன், பிப்ரவரி 23, 1951 அன்று, கடலூர் மாவட்டத்தில் உள்ள பின்னலூரில் ஆ. முருகேசன் - சரஸ்வதி இணையருக்குப் பிறந்தார். பின்னலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வி கற்றார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயின்று இயற்பியலில் இளநிலைப் பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் படித்து இயற்பியலில் முதுநிலைப் பட்டம் பெற்றார். சட்டவியலில் இளநிலை பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

பின்னலூர் மு. விவேகானந்தன், கருவூலக் கணக்குத்துறையில் பணியாற்றினார். சட்டமன்ற மேலவைச் செயலகம், தமிழ்நாடு நிர்வாகத் தீர்ப்பாயம் ஆகியவற்றில் பணிபுரிந்தார். துணைப் பதிவாளராகப் பணியாற்றி, 2000-ல் விருப்ப ஓய்வு பெற்றார். பணி ஓய்வுக்குப் பின் வழக்கறிஞராகப் பணியாற்றினார். மணமானவர். மனைவி: விஜயலட்சுமி

பின்னலூர் மு. விவேகானந்தன் நூல்கள்

இலக்கிய வாழ்க்கை

பின்னலூர் மு. விவேகானந்தன் சிறார்களுக்குரிய நூல்களையும், பொது வாசிப்புக்குரிய நூல்களையும் எழுதினார். 'முகம்' இலக்கியச் சிற்றிதழில் பல்வேறு கட்டுரைகளை எழுதினார். போஜ்புரி மொழிச் சிறுகதைகளை ஆங்கிலம் வாயிலாகத் தமிழில் மொழிபெயர்த்து 'முகம்' இதழில் மாதந்தோறும் எழுதினார்.

ஆன்மிகம், சிறார் இலக்கியம், பொது நூல்கள் என 50-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார்.

நாடகம்

பின்னலூர் மு. விவேகானந்தன் வானொலியிலும் பங்களித்தார். வானொலிக்காக 25-க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதினார்.

அமைப்புச் செயல்பாடுகள்

பின்னலூர் மு. விவேகானந்தன், அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தில், எழுத்தாளர் விக்கிரமனுடன் இணைந்து பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார்.

விருதுகள்/பரிசு

  • 'ஒரு குயிலின் கதை' நூலுக்கு சென்னைப் பகுத்தறிவாளர் கழகப் பரிசு மற்றும் விருது
  • 'இரு பறவைகள்' நூலுக்கு, குழந்தை எழுத்தாளர் சங்க வெள்ளிப் பதக்கம்
  • 'வாழும் போதே வரலாறு' நூலுக்கு தமிழ் வளர்ச்சித் துறை அளித்த சிறந்த நூலுக்கான விருது
  • 'வாழும் போதே வரலாறு' நூலுக்கு பாரத ஸ்டேட் வங்கிப் பரிசு
  • 'வழிகாட்டும் வள்ளலார்' நூலுக்கு ஏவி.எம். அளித்த வெள்ளிப் பதக்கம்
  • 'இந்தப் பூவில் எத்தனை வண்ணங்கள்' நூலுக்கு பாரத ஸ்டேட் வங்கிப் பரிசு
  • 'ஞாலம் போற்றும் ஞான சூரியன்' நூலுக்கு இலக்கியப் பீடம் விருது
  • 'பெருமை பெறும் பெண்ணியம்' நூலுக்கு இலக்கிய பீடம் - திரிசக்தி குமுமப் பரிசு
  • 'கவிதை அல்லது அழகு' நூலுக்கு தமிழ் வளர்ச்சித்துறையின் முதல் பரிசு
  • 'வழக்கறிஞர்கள் வளர்த்த தமிழ்' நூலுக்கு, ஐந்து இலக்கிய அமைப்புகளின் பரிசு
  • 'சைவத் தமிழ் நூல்கள்' நூலுக்கு சேக்கிழார் ஆராய்ச்சி மையப் பரிசு
  • திறனாய்வுச் செம்மல் பட்டம்

மதிப்பீடு

பின்னலூர் மு. விவேகானந்தன் இலக்கியம், ஆய்வு, மொழிபெயர்ப்பு, சிறார் இலக்கியம், ஆன்மிகம், பொது வாசிப்புக்குரிய நூல்கள் என பல்துறை சார்ந்த நூல்களை எழுதினார். பின்னலூர் மு. விவேகானந்தன் எழுதிய 'வழக்கறிஞர்கள் வளர்த்த தமிழ்' நூல், சட்டம் மற்றும் நீதித் துறையைச் சேர்ந்தவர்கள் தமிழுக்கு அளித்த பங்கு குறித்துக் கூறும் மிக முக்கியமான வரலாற்று ஆவணமாக மதிப்பிடப்படுகிறது.

வழக்கறிஞராகப் பணியாற்றி, இலக்கியத்திற்கும் பங்களிப்புகளைத் தந்த 'சிகரம்' ச. செந்தில்நாதன், த. இராமலிங்கம், சுமதி உள்ளிட்டோரின் வரிசையில் பின்னலூர் மு. விவேகானந்தன் இடம் பெறுகிறார்.

நூல்கள்

பொது நூல்கள்
  • பாதை மாறாத பாட்டுக் குயில் (கவிக்கொண்டல் மா. செங்குட்டுவனாரின் வாழ்வும் பணியும்)
  • ஞாலம் போற்றும் ஞான சூரியன் (பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி வரலாறு)
  • இந்தப் பூவில் எத்தனை வண்ணங்கள்! (டாக்டர் பூவண்ணன் குறித்த இலக்கியத் திறனாய்வு)
  • ஆணிவேர்கள் (சிறுவர் நாடகம்)
  • இரு பறவைகள் (நாடகம்)
  • தமிழ் வளர்த்த சமயம்
  • மழலை இலக்கியத்தின் மறுமலர்ச்சி
  • வாசனைத் தமிழுக்கு வயது ஐம்பது
  • காலச்சுவடிகள்
  • பாட்டு இலக்கியம் ஒரு பார்வை
  • தமிழ் வளர்த்த வழக்கறிஞர்கள்
  • அருட்பிரகாச வள்ளலாரின் அருட்சிந்தனைகள்
  • வழிகாட்டும் வள்ளலார்
  • ஒரு குயிலின் கதை
  • வாழும் போதே வரலாறு
  • பெருமை பெறும் பெண்ணியம்
  • கவிதை அல்லது அழகு
  • சைவத் தமிழ் நூல்கள்
  • மகளிர் மேன்மையும் சட்ட உரிமைகளும்
  • நீங்களும் வென்று காட்டுங்கள்
  • திருவிளையாடல்
மொழிபெயர்ப்பு
  • அனைத்திந்தியச் சிறுகதைகள்

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 07-Feb-2025, 17:29:26 IST