under review

பாவிக அணி

From Tamil Wiki

பாவிக அணி தண்டியலங்காரம் பொருளணியியலில் கூறப்படும் இறுதி அணி. மற்ற அணிகளைப்போல் தனிநிலைச் செய்யுளில் (ஒரு தனிப்பாடலில்) மட்டும் அமையாமல், ஒரு காப்பியம் முழுவதும் ஊடாடி நிற்கும் கருத்தையோ, நீதியையோ குறிக்கிறது. ஒரு காப்பியத்தின் முக்கியக் கருத்தே பாவிகம்.

இலக்கணம்

பாவிகம் காப்பியமாகிய தொடர்நிலைச் செய்யுளில் கூறப்படும் முக்கியக் கருத்து எனக் கொள்ளலாம். இதனைத் தண்டியலங்காரம்

"பாவிகம் என்பது காப்பியப் பண்பே" (தண்டி 91) எனக் குறிப்பிடுகிறது.

மற்ற அணிகள் ஒரு பாடலில் மட்டும் அமைவது போலன்றி காப்பியம் கூறும் முக்கியப் பொருளோ, தத்துவமோ, நீதியோ பாவிகம் எனப்படுகிறது. காப்பியம் முழுவதிலும் கவிஞன் வலியுறுத்த விரும்பும் காப்பியத்தின் சாரமான அடிப்படைக் கருத்தினையே பாவிகம் எனலாம். காப்பியத்தில் இடம்பெறும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் இக்கருத்து ஊடுருவி நிற்பது. இது நூலின் தனிச் செய்யுள்களிலோ, பகுதிகளிலோ புலனாவது இல்லை. தொடக்கம் முதல் முடிவு வரை நூலை முழுமையாக நோக்கும் போதே இப்பண்பு விளங்கும்.

எடுத்துக்காட்டுகள்

தண்டியலங்கார உரையில் பாவிக அணிக்குச் சான்றாக கம்பராமாயணம், மகாபாரதம், அரிச்சந்திர புராணம் ஆகியவை கூறப்பட்டுள்ளன.

பிறன்இல் விழைவோர் கிளையொடும் கெடுப (ராமாயணம்)
பொறையில் சிறந்த கவசம் இல்லை; (மகாபாரதம்)
வாய்மையில் கடியது ஓர் வாளி இல்லை.(அரிச்சந்திர புராணம்)

சிலப்பதிகாரம்

அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம்
உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்

என்ற மூன்று நீதிகளும் சிலப்பதிகாரத்தின் பொருளாக அமைவதால் சிலப்பதிகாரம் பாவிக அணிக்குச் சான்றான காப்பியம்.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 10-Jun-2024, 09:24:43 IST