under review

பால் டைஷன்

From Tamil Wiki
பால் டைஷன்
டைஷன்

பால் டைஷன் ( Paul Deussen ) (பால் டைசன், பால் டியூஸன், பால் டாய்ஸன்) (ஜனவரி 7, 1845 - ஜூலை 6, 1919) ஜெர்மானிய இந்தியவியல் அறிஞர். பிரம்மசூத்திரத்தையும் பிற நூல்களையும் சம்ஸ்கிருத ஏட்டுச்சுவடிகளில் இருந்து ஜெர்மானிய மொழிக்கு மொழியாக்கம் செய்தவர். கீல் பல்கலை கழகத்தின் தத்துவப்பேராசிரியராகப் பணியாற்றினார்.

பிறப்பு, கல்வி

பால் டைஷன் 7 ஜனவரி 1845-ல் ஜெர்மனியில் ரைன் மாகாணத்தில் நியுவேட், ஆபர்டெரிஸ் (Oberdreis, Neuwied ) என்னும் இடத்தில் மதப்பணியாளரின் குடும்பத்தில் பிறந்தார். இளமையில் பள்ளிக்கல்வி முடித்தபின் டைஷன் போன் (Bonn), டியுபிஞ்சன் (Tübingen) பெர்லின் பல்கலைகழகங்களில் 1864 முதல் 1881 வரை தத்துவம், இறையியலில் பட்டம் பெற்றார். பிளேட்டோ பற்றிய ஆய்வுக்காக அவருக்கு ஆய்வுநிறைஞர் பட்டம் அளிக்கப்பட்டது.

தத்துவ ஈடுபாடு

ஷோபனோவர்

டைஷன் ஜெர்மானிய தத்துவஞானி ஆர்தர் ஷோபனோவரின் நேரடி மாணவர். வாழ்நாள் முழுக்க ஷோப்பனோவரின் சீடராகவே திகழ்ந்தார். 1911ல் ஷோப்பனோவர் கழகத்தை (Schopenhauer-Gesellschaft) நிறுவினார். டைஷன் தன் மரணம் வரை ஷோப்பனோவர் என்ற ஆண்டிதழின் ஆசிரியராக இருந்தார். ஷோப்பனோவரின் தத்துவ எழுத்துக்களை சீர்ப்படுத்தி நூலாக்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தார்.

கான்ட், நீட்சே

டைஷன் இமானுவேல் காண்டின் தத்துவத்தில் ஈடுபாடுகொண்டிருந்தார். பிரடெரிக் நீட்சேயின் நண்பராக இருந்தார். நீட்சே பற்றி ஒரு நூலை எழுதியிருக்கிறார்.

கல்விப்பணி

டைஷன் 1881 முதல் 1887 வரை பெர்லின் பல்கலையில் ஆய்வாளர் (Privatdocent) ஆகவும், 1887 முதல் 1889 வரை முதுநிலை ஆய்வாளராகவும் (Extraordinarius) பணிபுரிந்தார். தத்துவ ஆய்வாளர் (Ordinarius) ஆக 1889 முதல் 1919 வரை கீல் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார்.

இந்தியவியல்

போன் பல்கலையில் பேராசிரியர் கிறிஸ்டியன் லாஸன் காளிதாசனின் சாகுந்தலம் பற்றி நடத்திய பேருரையால் ஈர்க்கப்பட்ட டைஷன் சம்ஸ்கிருதம் மற்றும் இந்தியவியலில் ஈடுபாடு கொண்டார். 1877-ல் டைஷனின் மெய்யியல் சார்ந்த முதல் நூல் வெளியாகியது. ஆங்கிலத்தில் The Elements of Metaphysics என்ற தலைப்பில் அந்நூல் 1894-ல் மொழியாக்கம் செய்யப்பட்டது.

1906ல் டைசனின் பிரம்ம சூத்திரம் மொழியாக்கம் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டது. உபநிடத தத்துவம் என்னும் நூல் 1906ல் வெளியாகியது. ஏறத்தாழ 60 உபநிடதங்களை டைஷன் மொழியாக்கம் செய்தார். டைஷன் வேதாந்தத்தை பிளேட்டோவின் சிந்தனையுடனும் கான்ட்டின் சிந்தனையுடனும் ஒப்பிட்டு எழுதியிருக்கிறார்.

டைஷன் 1904-ல் இந்தியாவுக்கு வந்தார். அவர் எழுதிய என் இந்திய நினைவுகள் என்ற நூல் 1912-ல் வெளிவந்தது. அவருடைய மகள் எரிக்கா 1922-ல் அவருடைய தன்வரலாற்றுக் குறிப்புகளை தொகுத்து நூலாக்கினார்.

பிரம்ம சூத்திரம்

டைஷனின் பிரம்மசூத்திர மொழியாக்கம் பிரம்ம சூத்திரத்தின் சங்கரர் உரையை அடியொற்றியது. அது ஒரு முன்னுதாரணமான மொழியாக்கமாகக் கருதப்படுகிறது. பல்வேறு பழைய ஏட்டுச்சுவடிகளில் இருந்து பிரம்மசூத்திரத்தின் சரியான பாடத்தை உருவாக்கி டைஷன் மொழியாக்கம் செய்தார். அதன்பின்னரே ஆங்கில மொழியாக்கம் வெளிவந்தது. இந்தியாவில் பிறமொழிகளில் பிரம்மசூத்திரம் மொழியாக்கம் வழியாக அறியப்பட்டது அதற்குப் பின்னர்தான்.

அத்வைதம்

பால் டைஷன் தன்னை அத்வைதியாக உணர்ந்தார். இந்துவாக மாறி தேவசேனா என்று தன் பெயரை மாற்றிக்கொண்டார்.

விவேகானந்தருடன்

விவேகானந்தர் தன் ஐரோப்பியப் பயணத்தில் நவம்பர் 8, 1896ல் சுவிட்சர்லாந்தில் இருந்து கீல் நகருக்கு வந்து பால் டைஷனைச் சந்தித்தார். டைஷன் விவேகானந்தரின் அணுக்கநண்பராகவும் மாணவராகவும் ஆனார். விவேகானந்தர் பால் டைஷனின் நாநூறு பக்க அளவுள்ள உபநிடத விளக்கத்தை ஒரு மணிநேரத்தில் வாசித்துவிட்டதாகவும், அதை அவ்வளவு விரைவாக படிப்பதைப் பற்றி அவநம்பிக்கை கொண்டபோது விவேகானந்தர் அந்தப் பக்கங்களை அப்படியே ஒப்பித்ததாகவும், 'மனம் அழிந்த நிலை'யில் அதை வாசித்ததாக விவேகானந்தர் விளக்கியதாகவும் விவேகானந்தரின் வரலாறுகளில் உள்ளது.

இரண்டு நாட்கள் உடன் தங்கிவிட்டு விவேகானந்தர் பிரெமென் என்னும் ஊருக்கு செல்ல டைஷன் அங்குசென்று அவருடன் பதினைந்து நாட்கள் தங்கினார். அங்கிருந்து விவேகானந்தருடன் லண்டன் சென்று உடன் தங்கினார். இ.டி.ஸ்டர்டி (E.T.Sturdy)க்கு எழுதிய கடிதத்தில் விவேகானந்தர் டைஷனை 'கர்ஜிக்கும் வேதாந்தி' என்று குறிப்பிட்டிருக்கிறார். அவரைப்பற்றி விவேகானந்தர் பிரம்மவாதி இதழில் ஒரு கட்டுரையும் எழுதினார். 1946-ல் பிரபுத்த பாரதம் இதழில் The Upanishads abroad என்னும் கட்டுரையில் சுவாமி ஜெகதீஷ்வரானந்தர் பால் டைஷன் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்.

மதிப்பீடு

மாக்ஸ்முல்லர் பால் டைஷனின் பிரம்மசூத்திரம் முதலிய மொழியாக்கங்களை 'இந்தியவியலின் மகத்தான தொடக்கம்' என்று சொல்லி சிறப்பித்தார்.

சுவாமி விவேகானந்தர் டைஷனை 'வேதாந்தம் பற்றி ஆய்வு செய்தவர்களில் மிகச்சுதந்திரமான சிந்தனையாளர்களுள் ஒருவர்' என்று மதிப்பிடுகிறார். அவரை 'மாக்ஸ் முல்லர் போன்ற முன்னோடியான இந்தியவியலாளர்' என்று பிரம்மவாதின் இதழில் 1896-ல் எழுதிய கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

நூல்கள்

  • Erinnerungen an Friedrich Nietzsche (1901)
  • My Indian Reminiscences (1912)
  • Vedânta und Platonismus im Lichte der Kantischen Philosophie 1904
  • The Sutra of the Vedanta 1906
  • The Philosophy of the Upanishads 1906
  • Outlines of Indian philosophy, with an appendix: On the philosophy of the Vedânta in its relations to Occidental metaphysics (1907)
  • Vedhânta, Platon und Kant (1917)
  • The General history of philosophy 6 volumes

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 28-Mar-2025, 09:05:59 IST