under review

பால் சக்காரியா

From Tamil Wiki
பால் சக்காரியா (நன்றி: வம்ஸி)

பால் சக்காரியா (Paul Zacharia) (பிறப்பு: ஜூன் 5, 1945) நவீன மலையாள எழுத்தாளர். ஊடகவியலாளர், பேச்சாளர். நாவல்கள், சிறுகதைகள், பயணக்கட்டுரைகள், சிறார் இலக்கியங்கள் எழுதி வருகிறார். சக்காரியாவின் அரசியல், சமூகம், மதம் சார்ந்த கட்டுரைகள் கவனிக்கப்படுபவை.

வாழ்க்கைக் குறிப்பு

பால் சக்காரியா ஜூன் 5, 1945-ல் பழைய திருவிதாங்கூரில் கோட்டயத்திற்கு அருகிலுள்ள உருளிகுன்னத்தில் M.S. பால் முண்டாட்டுச்சுண்டையில், தெரிஸாக்குட்டி இணையரின் மூன்றாவது மகனாகப் பிறந்தார். ஆரம்பக் கல்வியை உருளிகுன்னத்தில் உள்ள ஸ்ரீ தயானந்தா தொடக்கப் பள்ளியில் பயின்றார். விளக்குமடம் புனித ஜோசப் உயர்நிலைப் பள்ளியில் தனது படிப்பைத் தொடர்ந்தார். 1960-ல் மெட்ரிகுலேஷன் படித்தார். பின்னர் செயின்ட் தாமஸ் கல்லூரியில் புதுமுக வகுப்பை முடித்தார். 1961-ல் பாளை மைசூரில் உள்ள செயின்ட் பிலோமினா கல்லூரியில் ஆங்கில இலக்கியம், வரலாறு, பொருளாதாரம் ஆகிய பாடங்களில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

பணி

பால் சக்காரியா 1966-ல் மல்லேஸ்வரத்தில் உள்ள எம்.இ.எஸ் கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளராகத் தனது பணியைத் தொடங்கினார். அங்கு அவர் ஓராண்டு பணியாற்றினார். 1967-ல் காஞ்சிரப்பள்ளி செயின்ட் டோமினிக் கல்லூரியில் விரிவுரையாளராகச் சேர்ந்தார். மேலும் 1971-ல் பெங்களூரு ரூபி டயர் மற்றும் ரப்பர் ஒர்க்ஸ் பகுதியின் மேலாளராகப் பணியாற்றுவதற்காக கோவைக்குச் செல்லும் வரை அங்கேயே இருந்தார். கோயம்புத்தூரில் ஒரு வருடம் இருந்தார்.

தனிவாழ்க்கை

பால் சக்காரியா லலிதாவை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.பால் ஜக்காரியா பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா, புது தில்லி மற்றும் திருவனந்தபுரம் கிளப், திருவனந்தபுரம் ஆகியவற்றின் உறுப்பினராக இருந்தார். திருவனந்தபுரத்தில் வசிக்கிறார்.

ஊடகவியல்

பால் சக்காரியா இருபது ஆண்டுகள் புது தில்லியில் பல்வேறு ஊடகங்களில் பணியாற்றினார். அஃபிலியேட்டட் ஈஸ்ட்-வெஸ்ட் பிரஸ்(Affiiated east west press), ஆல் இந்தியா மேனேஜ்மென்ட் அசோசியேஷன் (AIMA), பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா (PTI), இந்தியா டுடேயின் மலையாள பதிப்பு போன்றவற்றில் பணியாற்றினார். 1993-ல் கேரளாவுக்குத் திரும்பினார். ஏசியாநெட்டை நிறுவிய குழுவில் ஒருவராக இருந்தார். அங்கு ஒரு மூத்த பத்திரிக்கையாளரான பி.ஆர்.பி.பாஸ்கருடன் இணைந்து ஏழு ஆண்டுகள் ஓடிய முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி விமர்சனமான 'பத்ரவிசேஷம்' நிகழ்ச்சியை இணைந்து தொகுத்து வழங்கினார்.

இலக்கிய வாழ்க்கை

பால் சக்காரியா கேரளாவின் முன்னணி செய்தித்தாள்கள் மற்றும் இதழ்களுக்கு தொடர்ந்து எழுதினார். அரசியலில் அவரது நிலைப்பாட்டை பேச்சு, எழுத்து வழியாக வெளிப்படுத்தி வருகிறார். ஆங்கிலத்தில் இவரது கட்டுரைகள் 'இந்தியா டுடே', 'அவுட்லுக்', 'தி வீக்', 'தி இந்து' 'டெக்கான் ஹெரால்ட்,' 'தி பயோனியர்', 'தி டைம்ஸ் ஆஃப் இந்தியா', 'எகனாமிக் டைம்ஸ்', 'தி ஹிந்துஸ்தான் டைம்ஸ்,' 'தெஹல்கா', 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்', 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' போன்ற இதழ்களில் வெளிவந்தன. பால் சக்காரியா ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, சவுதி அரேபியா, சீனா, கும்பமேளா பற்றிய பயணக் குறிப்புகளை வெளியிட்டார். நாவல்கள், சிறுகதைகள் எழுதினார்.

திரை வாழ்க்கை

பால் சக்காரியா 'ஜோசஃப் ஒரு புரோகிதன்', 'ஜனனி' ஆகிய மலையாளப்படங்களுக்கு திரைக்கதைகள் எழுதினார். 'கைரளிவிலாசம்' என்ற தூர்தர்ஷன் தொலைக்காட்சித் தொடருக்கு திரைக்கதை எழுதினார்.

விருதுகள்

  • கேந்திர சாகித்ய அகாதெமி விருது
  • கேரள சாகித்ய அகாதெமி விருது
  • நவம்பர் 2013-ல் கேரள சாகித்ய அகாதெமியின் சிறந்த உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நூல் பட்டியல்

நாவல்
  • பாஸ்கர பட்டேலரும் என் வாழ்வும் (1988)
  • எந்துண்டு விசேஷம் பிலதோஸ்? (1996)
  • கடவுளை போற்று! (1996)
  • இஷ்டிகாயும் ஆசாரியும் (1999)
  • இதனெண்டே பெரு. கோட்டயம் (2001)
  • ஐயப்பதின்ட்காதோம்!. கோட்டயம் (2003)
  • ஜக்காரியாயுடே நாவல்கள் (2003)
சிறுகதைத்தொகுப்பு
  • குன்னு (1969)
  • அம்பாடி (1969)
  • ஓரிடத்து: சகரியாயுதே கதைகள் (1978)
  • ஒரு நஸ்ராணி யுவாவும் கௌலிசாஸ்திரவும் (1983)
  • ஆர்காரியம்: கதகா (1986)
  • சலாம் அமெரிக்கா (1993)
  • கண்ணாடி காணமொளவும் (1997)
  • கண்ணாடி காணமொளவும் (1997)
  • கன்னியாகுமரி: kathakaḷ (1999)
  • சக்கரியாயுதே பெண்கதைகள்: கதகா (2001)
  • ஜக்காரியாயுடே திரஞ்செடுத கதைகள் (2002)
  • சகரியாயுதே கதைகள் (2002)
  • பிரதிகதைகள் (2003)
  • சகரியாயுடே யேசு (2007)
  • என்டே பிரியபெட்டா கதைகள் (2008)
  • அல்போன்சம்மையுடே மரணமும் சவசம்ஸ்காரவும் (2011)
  • தென் (2016)
பயணக்கட்டுரை
  • ஒரு ஆப்பிரிக்க யாத்திரை (2005)
  • தடகநாடு(2007)
  • நபியுடே நாட்டில் (2007)
  • அக்னிபர்வதங்களுடே தாழ்வாரயில் (2009)
  • பாம்பம்! ஹர ஹர பம்பம் போல்! (2011)
  • வழிபோக்கன்
சிறுவர் இலக்கியம்
  • வயனசாலா (2008)
  • படையாளி (2009)
  • சாந்தனுவின்டே பக்ஷிகல் (2011)
  • ஜு கதை (2009)
மொழிபெயர்ப்புகள்
  • பாவனயுடே அந்த்யம் – அருந்ததி ராய்
  • ஞங்கள் நீங்கள்கு பூமி விட்டால் – தலைமை சியாட்டலின் பேச்சு
  • ஒரு எந்தினெந்தினு பெண்குட்டி – மஹாஸ்வேதா தேவி
நினைவுகள்
  • உருளிக்குன்றத்திண்டே லுதீனியா
தமிழில் மொழிபெயர்க்கப்பட்டவை
  • இதுதான் என் பெயர் (சிறுகதைகள்) - கே.வி.ஜெயஸ்ரீ
  • இரண்டாம் குடியேற்றம் (சிறுகதைகள்) - கே.வி.ஜெயஸ்ரீ
  • அல்போன்சம்மாவின் மரணமும் இறுதிச் சடங்கும் (சிறுகதைகள்) - கே.வி.ஜெயஸ்ரீ
  • யேசு கதைகள் (சிறுகதைகள்) - கே.வி. ஜெயஸ்ரீ
  • பால் சக்காரியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் - கே.வி.ஜெயஸ்ரீ
  • தேன் - பவா. செல்லத்துரை
  • இதுதான் என் பெயர் - சுகுமாரன்
  • சக்காரியாவின் கதைகள் - சாகித்திய அகாடெமி
  • அல்ஃபோன்சம்மாவின் மரணமும் இறுதிச் சடங்கும் - கே.வி.ஷைலஜா
  • அரபிக் கடலோரம் - சுகுமாரன்
  • ஜூவின் கதை - சங்கரராம சுப்ரமணியன்

இணைப்புகள்


✅Finalised Page