பாத்திமா சஹாரா
பாத்திமா சஹாரா (கவிச்சாரல் சாரா) (பொ.யு. 20-ம் நூற்றாண்டு) ஈழத்து பெண் எழுத்தாளர். பெண்ணியம் சார்ந்த புரட்சிக் கவிதைகள் எழுதினார்.
வாழ்க்கைக் குறிப்பு
பாத்திமா சஹாரா இலங்கை நாட்டின் வட்மேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்தில் புளிச்சாக்குளத்தில் முஹம்மது சமுஹுன், சித்தி பஸீனா இணையருக்குப் பிறந்தார். ஆரம்பக்கல்வி தொடக்கம் உயர்கல்வி வரை புளிச்சாக்குளம் உமர் பாரூக் மஹா வித்தியாலயத்தில் கல்வி கற்றார். இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய கற்கைகள் பொதுத்துறையில் கல்வி கற்றார்.
இலக்கிய வாழ்க்கை
பாத்திமா சஹாரா 'கவிச்சாரல் சாரா' எனும் புனை பெயரில் கவிதை எழுதினார். கட்டுரைகளை எழுதுவதில் மேலதிக ஈடுபாடு கொண்டிருந்தார். முதல் கவிதை "சுகமான சுமைகள்" மெட்ரோ பத்திரிகையில் வெளியானது. தினகரன், மித்திரன், மெட்ரோ போன்ற பத்திரிகைகளிலும் இவரின் கவிதைகள் வெளிவந்தன. நெய்தல், உலகப்பாவலர் மன்றம், தென்றலின் வீதியில், ஆகாயக் கனவுகள், ஊற்று, கொலுசு, தமிழருவி, தேடல், மூங்கில் கவிதைகள் போன்ற மின்னிதழ்களிலும் மலர்வனம் என்ற கவிதைத் தொகுப்பிலும் சாளரம், அல் இஸ்லாங் (இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம்) மாதாந்த சஞ்சிகையிலும் இணையத்தளங்களிலும் இவரின் கவிதைகள் வெளிவந்துள்ளன.
2018-ல் 'விழிகள் தேடும் விடியல்' எனும் முதல் கவிதைத் தொகுப்பு இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம் மாணவர் பேரவை வழியாக வெளியானது. தற்பொழுது சிறுகதைகளையும் எழுதி வருகிறார். இவரின் முதல் சிறுகதை "கெம்பஸ் போண புள்ள வேணாம்" எனும் தலைப்பில் அமைந்துள்ளது.
விருதுகள்
- சிந்தனைக்கவி விருது - ஊலழள குழுமம்.
- தமிழ் கவிச்சுடர் விருது - உலகப்பாவலர் தமிழன்னை தமிழ்ப் பேரவை குழுமம்
- கவிச்சரம் விருது - டாக்டர் ஜீவாவின் கவிதைப் பூங்கா குழுமம்
- வித்தகக் கவி விருது - கம்பன் கவிக்கூடம் குழுமம்
- கவிச்சிகரம் விருது - சங்கத்தமிழ் கவிதைப் பூங்கா குழுமம்
- ஹைக்கூ கவிதைக்காக கவிச்சரம் விருது - கவிமலர்கள் குழுமம்
நூல் பட்டியல்
கவிதைத் தொகுப்பு
- விழிகள் தேடும் விடியல்
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 24-Jan-2026, 11:21:02 IST