under review

பாதீடு

From Tamil Wiki

பாதீடு வெட்சித்திணையின் துறைகளில் ஒன்று. கவர்ந்து வந்து ஊர் மன்றத்தில் நிறுத்திய ஆநிரையை வெட்சி மறவர் தகுதி அறிந்து பகுத்துக் கொடுப்பதைக் கூறுவது.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் வெட்சி மறவர் கவர்ந்து வந்த ஆநிரையை அந்த அந்தந்த மறவர்கள் ஆற்றிய செயல்களை ஆய்ந்து அவரவர் தகுதிக்கேற்பப் பகுத்தளிப்பது பாதீடு என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

கவர்கணைச் சுற்றம் கவர்ந்த கணநிரை
அவர்அவர் வினைவயின் அறிந்து ஈந்தன்று (கொளு 1.17)

வெண்பா

ஒள்வாள் மலைந்தார்க்கும் ஒற்று ஆய்ந்து உரைத்தாற்கும்
புள்வாய்ப்பச் சொன்ன புலவர்க்கும் - விள்வாரை
மறு அட்ட வென்றி மறவர்தம் சீறூரில்
கூறிட்டார் கொண்ட நிரை (14)

பொருள்: ஆநிரையைக் கவர வாட்போரினை மேற்கொண்டவர்க்கும், ஒற்றாய்ந்தவர்களுக்கும், புள் நிமித்தம் கூறியவர்களுக்கும், வெற்றி கொண்ட மறவர்கள் தம்முடைய சிற்றூரில் தாம் கவர்ந்து கொண்டு வந்த நிரையினைப் பகிர்ந்து கொடுத்தனர்.

உசாத்துணை

நொச்சித் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 29-Mar-2025, 11:48:47 IST