பாண் வரவு உரைத்தல்(பெருந்திணை)
பாண் வரவு உரைத்தல் புறப்பொருளில் அமைந்த பெருந்திணையின் துறைகளில் ஒன்று. பெருந்திணைக் காதல் கொண்ட தலைவனது பாணனின் வரவைக் கூறுதல்.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் சிறந்த அணிகலன்களை அணிந்த தலைவியிடம் தோழி, வயல்கள் நிறைந்த ஊரின் தலைவனுடைய பாணன் காண வந்திருப்பதைக் கூறுதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
மாணிழைக்கு வயல் ஊரன்
பாண்வரவு பாங்கி மொழிந்தன்று(கொளு 17.11)
வெண்பா
அஞ்சொல் பெரும்பணைத்தோள் ஆயிழையாய் தாநொடியும்
வஞ்சம் தெரியா மருள் மாலை - எம்சேரிப்
பண்இயல் யாழொடு பாணனார் வந்தாரால்
எண்ணியது என்கொலோ ஈங்கு (335)
பொருள்: இனிய சொற்களையும் மூங்கில் தோள்களையும் அணிகளையும் கொண்ட தலைவியே! மயக்கத்தைத் தரும் இம் மாலைவேளையில் நமது இருப்பிடத்திற்கு, தான் சொல்லும் பொய்யைப் பற்றிக் கவலைப்படாத பாணன் யாழுடன் வந்திருக்கிறான். எதற்கோ?
உசாத்துணை
பெருந்திணை (புறவியல்), தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 31-Jul-2025, 18:37:55 IST