பாடாங் (மலாய் நாட்டார் கதைகள்)
பாடாங் எனும் அசாத்திய வலிமைமிக்க வீரனின் கதை மலேசியாவிலும் சிங்கையிலும் பிரபலமான புராணக்கதைகளில் ஒன்று. பாடாங் வெறும் புராணக்கதை என்று ஒரு சாராரும் உண்மையாக வாழ்ந்த மனிதர் என்று இன்னொரு சாராரும் கூறி வருகின்றனர். பாடாங் புராணக்கதையின் வழி அசாத்திய வலிமை பெற்றவராகச் சித்தரிக்கப்பட்டாலும் சாதாரண மக்களைப்போலவே வாழ்ந்து மடிந்தார் என்று சொல்லப்படுகிறது.
பாடாங் அசாத்திய வலிமை பெற்ற கதை
பாடாங் செலுவாங்கைச் சேர்ந்த நிரா சுரா என்ற செல்வந்தரின் அடிமையாக இருந்தார். பாடாங்கிடம் ஒப்படைக்கப்பட்ட பணிகளில் ஒன்று வனப்பகுதியைச் சுத்தப்படுத்துவது. காடாயிருக்கும் பகுதியை விளைநிலமாக மாற்றும் கடுமையான பணியில் பாடாங் தினமும் காலையிலேயே ஈடுபடத் தொடங்கினார்.
பாடாங் வேலை செய்யும் இடத்திற்கு அருகில் ஒரு ஆறு இருந்தது. ஆற்றின் அருகே உள்ள மலையின் அடிவாரத்தில்தான் பாடாங் காட்டைத் திருத்தும் வேலைக்குப் பிறகு ஓய்வெடுப்பார். இலையில் மடித்து கொண்டு வந்த சோற்றைச் சாப்பிடுவார். ஒருநாள் சாப்பிட்டபின் ஆற்றோரத்திற்குச் சென்ற பாடாங் அங்கு தெளிந்த நீரில் மீன்கள் நீந்தி விளையாடுவதைக் கண்டார். தினமும் சாதாரண உணவையே உட்கொள்ளும் பாடாங். மீன்களைப் பிடித்தால் சோற்றோடு வைத்து சாப்பிடலாம் என்றும் நிறைய மீன் கிடைத்தால் தன் எஜமானருக்கும் கொடுக்கலாம் என்று எண்ணினார். மீன்களைப் பிடிக்க மூங்கிலால் ஆன ஒரு வகை பொறியைத் தயார் செய்து ஆற்றில் வைத்தார்.
மறுநாள் அதிகாலை காட்டிற்கு வேலைக்குச் செல்லும் முன் பாடாங் ஆற்றில் இறங்கி மீன்களுக்கு வைத்த பொறியைக் காணச் சென்றார். ஆனால் அங்கு மீன்களுக்குப் பதிலாக வெறும் மீன்களின் முட்கள் மட்டுமே சிதறிக் கிடந்தன. ஆற்றின் கரையில் மீன் முட்களின் குவியலைக் கண்டு ஆச்சரியப்பட்டார். மீன் செதில்களின் எச்சங்களைத் தவிர, அதில் மீன் இல்லை. மீண்டும் மூங்கிலால் ஆன அந்தப் பொறியை ஆற்றில் வைத்துச் சென்றார். மறுநாளும் அதே நிலைமையே ஏற்பட்டது.
"பச்சையாக மீனை யார் சாப்பிடுகிறார்கள்?" என்று பாடாங்கிற்கு ஆச்சரியமாக இருந்தது. பாடாங் தாம் வைத்த பொறியில் சிக்கிய மீனை யார் திருடியது என்பதை உளவு பார்க்க வழக்கம் போல் பொறியை வைத்து விட்டுக் காட்டைச் சுத்தம் செய்யச் சென்று, அந்தி சாய்ந்ததும் ஒரு புதரின் பின்னால் ஒளிந்து கொண்டார். இரவு வெகுநேரம் ஆனதும் ஒரு உருவம் வந்தது. சிவந்த கண்கள், நீண்ட கோரைப் பற்கள், நீண்ட தாடி, நீண்ட கூந்தல், நீளமான நகங்கள் என அவ்வுருவம் கோரமாக இருந்தது. "பேய் போல இருக்கிறதே!", என்று பாடாங் மனதுக்குள் எண்ணினார். அவ்வுருவம் பொறியில் சிக்குண்ட மீன்களை எடுத்துத் தின்றது. பாடாங் தைரியமாக அவ்வுருவத்தின் மீது பாய்ந்து தாடியைப் பிடித்தார். அவ்வுருவம் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்ள போராடியது. ஆனால் பாடாங் மிகத் தைரியமாக அவ்வுருவத்தை எதிர்க்கொண்டார். இறுதியில், அவ்வுருவம் தோல்வியை ஒப்புக்கொண்டது. தன்னை விடுவிக்குமாறு வேண்டியது. இருப்பினும், பாடாங் எளிதில் விட்டுவிடவில்லை. "என்னை விடுவித்தால், நீ விரும்பியதைக் கொடுப்பேன்" என்று அவ்வுருவம் பாடாங்கிடம் உறுதி கூறியது..
பாடாங் யோசித்தார். நிறைய செல்வம் கேட்டால், தன் எஜமான் அதை எடுத்துக் கொள்ள வாய்ப்புண்டு. அழகான மனைவியைக் கேட்டால், அதையும் பறித்துக் கொள்ள வாய்ப்புண்டு. கடைசியில் முடிவு செய்து "சரி! நான் வலிமைமிக்கவனாக இருக்க விரும்புகிறேன்," என்றார் பாடாங். "நீ வலிமையுள்ளவனாக மாற வேண்டும் எனில், நான் எடுக்கும் வாந்தியை உண்ண வேண்டும்”, என அவ்வுருவம் கட்டளையிட்டது. ஒரு கணம் யோசித்து பாடாங் அதற்குச் சம்மதித்தார். அங்கிருந்த கிழங்கு இலையில் அவ்வுருவம் வாந்தி எடுத்தது. தாமதிக்காமல், பாடாங் அந்த வாந்தியைச் சாப்பிட்டார். பாடாங் அவ்வுருவத்தை விடுவிப்பதற்கு முன்பாக உண்மையிலேயே தனக்கு வலிமை வந்துவிட்டதா என்று சோதிக்க ஒரு மரத்தைப் பிடித்து இழுத்தார். அம்மரம் சரிந்து விழுந்தது. மிக்க மகிழ்ச்சியுடன் அந்தக் கோரமான உருவத்தை விடுவித்து நன்றி கூறினார். கோரமான அவ்வுருவம் திடீரென வெள்ளை முடி மற்றும் வெள்ளை தாடியுங்கொண்ட முதியவராக மாறியது. நீ நினைப்பது போல் நான் பேய் இல்லை. நான் உனக்கு உதவ வந்தேன். நீ பிடிவாதமானவன், உறுதியானவன், நேர்மையானவன்" என்று அந்த முதியவர் கூறினார். பின் அவர் பாடாங்கின் பார்வையில் இருந்து மறைந்தார். அசாதாரண பலத்தைப் பெற்றதற்காகப் பாடாங் கடவுளுக்கு நன்றி கூறினார்.
பாடாங் வலிமை மிக்க வீரர்
பாடாங் அசாத்திய வலிமை பெற்றபின் எஜமானரின் கட்டளைப்படி காட்டைத்திருத்தும் வேலையை ஒரே நாளில் முடித்துவிட்டு வீட்டுக்குச் சென்றார். அடுத்த நாள், பாடாங் வேலைக்குச் செல்லவில்லை. எஜமானரிடம் காடு மற்றும் புதர்களை அழித்துச் சுத்தம் செய்து விட்டதாகப் பாடாங் கூறியதைக் கேட்டு அவரால் நம்பமுடியவில்லை. நிலத்தின் நிலையை நேரில் பார்ப்பதற்காகக் காட்டிற்குச் சென்றார். காடு மற்றும் புதர்கள் நிறைந்த இடம் உண்மையிலேயே பயிரிடமாக மாறியிருப்பதைக் கண்டு நிரா சுரா ஆச்சரியப்பட்டார். தனது நிலத்தில் உள்ள காடுகள் அழிக்கப்பட்டதால் செல்வந்தர் நிரா சுரா மகிழ்ச்சி அடைந்தார். இருப்பினும், பாடாங் ஏதாவது செய்துவிடுவாரோ என்று அவர் கவலைப்பட்டார். அதனால் நிரா சுரா பாடாங்கை தெமாசிக் மன்னரிடம் அனுப்பி வைத்தார். பின்னர் படாங் தெமாசிக் மன்னர் அரண்மனையில் வேலைக்காரனாக வேலையைத் தொடங்கினார்.
ஒரு நாள், அரசி மாம்பழம் சாப்பிட விரும்பினார். பாடாங்கிடம் மாம்பழத்தைப் பறித்து தரும்படி உத்தரவிட்டார். அரசியின் உத்தரவின்படி தாமதிக்காமல் அரண்மனைக்கு எதிரே இருந்த மாமரத்தில் ஏறினார். மாம்பழம் கிளையின் முனையில் இருந்ததால், மாம்பழத்தைப் பறிக்க முயன்ற போது பாடாங் நின்று கொண்டிருந்த கிளை திடீரென உடைந்தது. அவர் தரையில் விழுந்தார். அவரது தலை பாறையில் மோதியது. மரத்தடியில் இருந்த பெரிய பாறை இரண்டாகப் பிளந்தது. இருப்பினும், பாடாங்கின் தலையில் சிறு காயம் கூட ஏற்படவில்லை. இக்காட்சியைப் பார்த்த அரசி ஆச்சரியப்பட்டார். அரசி நடந்த சம்பவத்தை அரசரிடம் கூறினார். அரண்மனைக்கு முன்னால் இருந்த பெரிய கல் இரண்டாகப் பிளந்திருப்பதைக் கண்ட அரசருக்கும் மிகுந்த ஆச்சரியம். தெமாசிக் அரசின் வீரராக பாடாங்கை நியமித்தார். பாடாங்கின் புகழ் எல்லா தேசமும் பரவியது.
கலிங்க அரசுக்கும் பாடாங்கின் புகழ் எட்டியது. கலிங்க மகாராஜா தனது நாட்டிலிருந்து வலிமையான வீரர்களுடன் தெமாசிக் வந்தார். பாடாங்குடன் போட்டிபோட போர்வீரன் கொண்டு வரப்பட்டான். தெமாசிக் அரசர் போட்டிக்கு ஒப்புக்கொண்டார். போட்டி நாளை நாடே எதிர்பார்த்தது. நாட்டின் உயரதிகாரிகள் மற்றும் பொது மக்கள் முன்னிலையில் போட்டி நடைபெற இருந்தது. போட்டி தொடங்கக் காத்திருந்தபோது, கலிங்க நாட்டைச் சேர்ந்த வலிமைமிக்க போர்வீரன் பாடாங் அருகில் அமர்ந்தான். பின்னர் கேலியாக பாடாங் மீது தன் காலை வைத்தான். வலிமையான அவனது காலை சாதாரண மனிதனால் நகர்த்தவே முடியாது. ஆனால் பாடாங் போர்வீரனின் காலை மிகச்சாதாரணமாக நகர்த்திவிட்டார். அதிர்ச்சியான கலிங்க போர்வீரன் உண்மையிலேயே பாடாங் மிக வலிமையானவர் என உணர்ந்தான்.
போட்டி தொடங்கியது. கலிங்க நாட்டைச் சேர்ந்த வீரன் சபைக்கு முன்னால் கல்லைத் தூக்கத் தொடங்கினான். கம்பீர உணர்வுடன் அந்த வீரனால் முழங்கால் வரை மட்டுமே கல்லை உயர்த்த முடிந்தது. பின்னர் அந்தக் கல்லை அரசனிடம் கொண்டு வந்து வைத்தான். கலிங்க மகாராஜா மற்றும் பிற பிரமுகர்களும் மகிழ்ச்சியில் சிரித்தனர். இறுதியாக, பாடாங்கின் முறை வந்தது. குள்ளமான பாடாங் பெரிய பாறையை நோக்கி நடந்து வந்தார். பாடாங் கல்லை எடுத்து தலைக்கு மேல் தூக்கி வீசினார். அனைவரும் அதிர்ச்சியுற்றனர். வலிமைமிக்க வீரர்கள் வெட்கமடைந்தனர், அவர்களால் வலிமைமிக்க பாடாங்கிற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. அக்காலக்கட்டத்தில் ஒரு வலிமைமிக்க மனிதனாகப் பாடாங்கின் புகழ் கொடிகட்டிப் பறந்தது.
பாடாங்கின் பிற வீரச்செயல்கள்
300-க்கும் மேற்பட்டவர்கள் ஒரு புதிய கப்பலைக் கடலுக்குள் இழுக்க முடியாதபோது பாடாங் ஒரே கையால் கப்பலை இழுத்தார் எனக் கூறப்படுகிறது. ஜோகூரில் அமைந்துள்ள லயாங் தீவில் உள்ளூர்வாசி ஒருவருடன் கோபங் கொண்டதால் பாடாங்கால் தூக்கி எறியப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.
இறப்பு
பாடாங் சாதாரண மக்களைப்போலவே வயது முதிர்ச்சியால் காலமானார் எனக் கூறப்படுகிறது. அவரது கல்லறை இந்தோனேசியாவின் ரியாவ் தீவுகளில் ஒன்றான கரிமூனில் அமைந்திருக்கும் புரு தீவில் கண்டிஸ் எனும் கிராமத்தின் உள்ள வனப்பகுதியில் உள்ளது.
வரலாற்றுச் சான்றுகள்
கோத்தா திங்கி (Kota Tinggi) அருங்காட்சியகத்தின் காப்பாளர் முகமட் அஸ்லான் ஹாவிஷ் மோஹிடி (2017), பாடாங் பற்றி குறிப்பிடும்போது மலாய் வரலாற்றின்படி பாடாங் 1362 முதல் 1375 வரை தெமாசிக்கில் (தற்போதைய சிங்கப்பூர்) அரசர் ஶ்ரீ ராணா விக்ரமா அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்தவர் எனக் கூறுகிறார். மலாய் வரலாற்றில், பாடாங் சுங்கை ஜோகூர் மேற்கில் உள்ள சயோங்கில் இருந்து வந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பாடாங், பழங்குடி சமுதாயத்தைச் சார்ந்தவராக இருக்க அதிக வாய்ப்புள்ளதாக நம்பப்படுகிறது. ஏனெனில் அப்பகுதியில் இன்றும் கூட, ‘சயோங் பினாங்’ என்றழைக்கப்படும் பழங்குடியினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
உசாத்துணை
- KOMENTAR: Cerita Badang dan S’pura – apa yang boleh kita pelajari darinya
- Membongkar kesahihan kisah Badang
- Legenda Badang
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
13-Sep-2023, 19:03:49 IST