பாச்சில் அவனீசுவரம்
பாச்சில் அவனீசுவரம் (அவனீஸ்வரம்) தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் கோபுரப்பட்டியில் உள்ள முற்கால சோழர் கோவில். இக்கோயில் உத்தம சோழன் காலத்தில் கட்டப்பட்டது.
ஆலய அறிமுகம்
பாச்சில் அவனீசுவரம் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் கோபுரப்பட்டி தாலுக்காவில் அமைந்துள்ளது. இக்கோவில் உத்தம சோழன் ஆட்சிக்காலத்தில் (பொ.யு. 981 க்கு முன்பு) கட்டப்பட்டது. தற்போது தமிழக தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
கோவிலின் மூலவராக அவனீஸ்வரர் சிற்பம் லிங்க வடிவில் வழிபடப்படுகிறது. கோவிலின் ஆகம முறைகள், தலபுராணங்கள், இலக்கிய சான்றுகள் பற்றிய விவரங்கள் அறியக் கிடைக்கவில்லை.
இடம்
பாச்சில் அவனீசுவரம் கோவில் திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்திலிருந்து 23 கிலோமீட்டர் வடக்கிலும். திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 25 கிலோமீட்டர் வடக்கிலும் அமைந்துள்ளது.
கோவில் வரலாறு, பெயர்
பாச்சில் அவனீசுவரம் கோவில் பற்றிய முதன்மையான வரலாற்று செய்திகள் வரலாற்றாய்வாளர் எஸ்.ஆர். பாலசுப்ரமண்யம் எழுதிய 'Middle Chola Art' என்ற புத்தகத்திலும், இரா.கலைக்கோவன், அர.நளினி, மு.அகிலா எழுதிய 'சிராப்பள்ளி மாவட்ட சோழர்கால கோயில்கள்' என்ற நூலிலும் தொகுக்கப்பட்டுள்ளன. இக்கோவிலுக்குள் காணப்படும் கல்வெட்டுச் சான்றுகளைக் கொண்டு கோவில் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.
பாச்சில் அவனீசுவரம் கோவில் உத்தம சோழன் ஆட்சி காலத்தில் (பொ.யு. 981 க்கு முன்பு) கட்டப்பட்டது.
கோவிலின் பெயர் பெரும்பாலான கல்வெட்டுக்களில் பாச்சில் அவனீசுவரம் எனவும், முதலாம் ராஜராஜரின் 21-ம் ஆட்சியாண்டு கல்வெட்டில் அமளீசுவரம் எனவும், முதலாம் ராஜேந்திரரின் 6-ம் ஆட்சியாண்டு கல்வெட்டில் அமனீசுவரம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவில் தெய்வங்கள்
மூலவரான சிவலிங்கம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது.
கருவறையை சுற்றியுள்ள விமான அமைப்பில் கோஷ்டங்களில் கொற்றவை, பிரம்மா, ஹரிஹரர் மற்றும் தட்சிணாமூர்த்தி சிற்பங்கள் உள்ளன.
கோவில் கட்டிடக்கலை அமைப்பு
பாச்சில் அவனீசுவரம் கோவில் முற்காலச் சோழர் கலை பாணியில் அமைந்துள்ளது. முழுவதும் மணற்கற்களால் கட்டப்பட்டுள்ளது.
கருவறை மற்றும் முகமண்டபத்துடன் கூடிய மணற்கல் கட்டுமானம் வளாக மையத்தில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறைக்கு மேலுள்ள விமானம் சிதைந்துபட்டு பின்னாளில் அகற்றப்பட்டிருக்கவேண்டும் என கருதப்படுகிறது.
முகமண்டபம்
வடபுறம் உள்ள கோஷ்டத்தில் கொற்றவை சிற்பம் உள்ளது. தென்புறம் உள்ள கோஷ்டம் வெறுமையாக உள்ளது. அங்கு விநாயகர் இடம்பெற்றிருக்கலாம் என்று எஸ்.ஆர். பாலசுப்ரமண்யம் கருதுகிறார். இரண்டு வரிசை கண்டபாதத்திலும் சிற்றுருவ சிற்பங்கள் உள்ளன.
விமான அமைப்பு
கோயில் விமானம் அதிஷ்டானம் (அடித்தளம்), பாதவர்க்கம் (சுவர்ப்பகுதி), பிரஸ்தாரம் (கூரை) ஆகிய உறுப்புகளைக் கொண்டுள்ளது. பிரஸ்தாரதிற்கு மேலுள்ள உறுப்புகள் பின்னாளில் சிதைந்து அகற்றப்பட்டிருக்கலாம் .
அதிஷ்டானம்
விமானத்தின் அதிஷ்டானம் உபானம், ஜகதி, த்ரிபட்ட குமுதம், கம்பு, கண்டம் ,கம்பு, துணை உபானம், கம்பு, கண்டம், கம்பு, வேதி உறுப்புகளை கொண்டுள்ளது. பாதபந்த அதிஷ்டானமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
பாதவர்க்கம்
கருவறையின் அதிஷ்டானத்திற்கு மேல் உள்ள பாதவர்க்க பகுதியில் அரைத்தூண்களும் (குட்யஸ்தம்பம்) கோஷ்டங்களும் உள்ளன. அரைத்தூண்கள் தாடி, ஆமலகம், பலகை, வீரகண்டம் மற்றும் தரங்க போதிகையுடன் காணப்படுகின்றன.
கோஷ்ட சிற்பங்கள்
வடக்கு கோஷ்டம்
முகமண்டபத்தில் உள்ள வடக்கு கோஷ்டத்தில் துர்கை சிற்பம் உள்ளது. தாமரை பீடத்தில் சமபாத ஸ்தானகத்தில் உள்ளது. கரண்டமகுடம், மகர குண்டலங்கள், சவடி, சரப்பளி, ஸ்வர்ண வைகாக்ஷம், மார்புக்கச்சு, புலிமுகக் கச்சு ஆபரணங்கள் அணிந்து, பின்னிரு கரங்களில் தீக்கங்குகள் சூழ் சக்கரமும், சங்கும் கொண்டுள்ளது. வலது முன் கை அபயஹஸ்தத்திலும் இடது முன்கை கடி ஹஸ்தத்திலும் உள்ளது.
முகமண்டபத்தின் வடக்கு கோஷ்டத்திற்கு மேலுள்ள மகரதோரணத்தில் கஜசம்ஹாரர் உருவம் உள்ளது. இடசுழற்சியில் உடலும் வலதிருப்பமாக முகமும் அமைந்துள்ளது. வலக்காலை முழங்கால் அளவு மடித்து வலப்புறம் திருப்பிய நிலையில் உள்ளது.
கருவறையின் வடக்கு கோஷ்டத்தில் பிரம்மாவின் சிற்பம் உள்ளது. சடைமகுடம், பூட்டுக்குண்டலங்கள், கண்டிகை, சரப்பளி, முப்புரிநூல், உதரபந்தம், முத்துத் தோள்வளைகள், கைவளைகள் பெற்று, புலிமுக அரைக்கச்சு பட்டாடை அணிந்துள்ள சிற்பம். வலது முன் கை அபயஹஸ்தத்திலும் இடது முன்கை கடி ஹஸ்தத்திலும் உள்ளது. பின் வலக்கை அட்சமாலையும் இடக்கை குண்டிகையும் ஏந்தியுள்ளது.
கருவறையின் வடக்கு கோஷ்டத்திற்கு மேலுள்ள மகரதோரணத்தில் எட்டு கைகளுடன் காளியின் சிற்பமும் முன்னிரு கைகளில் திரிசூலமும் உள்ளது. அழிக்க வரும் காளியிடமிருந்து தப்பியோடும் அரக்கன் உருவமும் உள்ளது.
கிழக்கு கோஷ்டம்
கருவறையின் கிழக்கு கோஷ்டத்தில் ஹரிஹரரின் சிற்பம் உள்ளது. வலப்பாதி சிவபெருமானாக சடைமகுடமும், சிற்றாடையும் உள்ளது. இடபாதி விஷ்ணுவாக கிரீடமகுடமும் பட்டாடையும் உள்ளது. சிவப்பகுதியின் வலது முன்கை அபயஹஸ்தத்திலும் வலது பின்கை மழுவையும் ஏந்தியுள்ளது. இடது முன்கை கடிஹஸ்தத்திலும், இடது பின்கை தீக்கங்குகள் சூழ் சங்கும் கொண்டுள்ளது. மகரகுண்டலங்கள், முப்புரிநூல், உதரபந்தம், தோள், கைவளைகள் பெற்று விஷ்ணுபாகத்தின் தோள்களில் சடைப்புரிகள் துவளும் கழுத்தில் சரப்பளி.
தெற்கு கோஷ்டம்
கருவறையின் தெற்கு கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி சிற்பம் உள்ளது. சடைமகுடம், பனையோலை குண்டலங்களுடன் வலது கரத்தை கடக ஹஸ்தத்தில் இடது கையில் பாம்புடன் கிழக்கு நோக்கி படுத்துள்ள முயலகனனின் மீது வலது பாதம் வைத்தபடி வீரசனத்தில் அமர்ந்த தட்சிணாமூர்த்தி சிற்பம். இடது முன்கையில் சுவடி, இடது பின் கையில் தீச்சுடர். வலது முன்கையில் சின்முத்திரை, வலது பின்கையில் அட்சமாலை. ஜடாபாரத்தில் வலதுபுறம் பிறையும், இடது புறம் பாம்பும் உள்ளன. நடுவில் சிம்மமுகம் பதித்த மகர பதக்கம். முப்புரிநூல், உதரபந்தம், இடைச்சிற்றாடை, வலச்செவியில் பனையோலை குண்டலம், இடச்செவியில் மகரகுண்டலம். கழுத்தில் சரப்பளி, உருளைப்பதக்கத்துடன் முத்துமாலை உள்ளன.
பின்புறமுள்ள மரத்தில் வலக்கிளையில் பொக்கணப்பையும் இதழ் விரித்த நீலோற்பலமும் உள்ளன. அணில், பல்லி மற்றும் ஒரு பொந்திலிருந்து ஆந்தையும் உள்ளன.
கருவறையின் தெற்கு கோஷ்டத்திற்கு மேலுள்ள மகரதோரணத்தில் தட்சிணாமூர்த்தி சிற்பம் உள்ளது.
முகமண்டபத்தின் தெற்கு கோஷ்டத்தில் விநாயகர் சிற்பம் இருந்திருக்கலாமென்று எஸ்.ஆர்.பாலசுப்ரமண்யம் கருதுகிறார்.
முகமண்டபத்தின் தெற்கு கோஷ்டத்திற்கு மேலுள்ள மகரதோரணத்தில் நடராஜர் சிற்பம் உள்ளது.
குறுஞ்சிற்பங்கள்
பாச்சில் அவனீசுவரம் கோவிலின் முகமண்டபம் மற்றும் கருவறையின் அதிஷ்டானத்தில் வேதிபாதம் மற்றும் கண்ட பாதங்களில் குறுஞ்சிற்பங்கள் உள்ளன.
முகமண்டப குறுஞ்சிற்பங்கள்
முகமண்டபத்தின் வேதிபாதங்களில் ஏழில் போர்க்கட்சிகளும், ஒன்றில் ஆடற்காட்சியும் உள்ளன. சீதையும் அனுமனும் உள்ள காட்சி ஒன்று, போர்க்காட்சிகளில் காளிங்க நர்த்தனம் உள்ளது.
முகமண்டபத்தின் கண்டபாதங்களில் அனுமன் சீதை, அனுமன் இராவணன் சந்திப்பு காட்சிகள் இரண்டு, சிவன் பாசுபதம் வழங்கிய கட்சி, தட்சிணாமுர்த்தி காட்சி இரண்டு, காளி அரக்கர்களை அழிப்பது இரண்டு, காளிங்கநர்த்தனம் ஒன்று, மகப்பேறு, பெண், யானை, வில் அம்புடன் இருவர் என்று சமூக சித்தரிப்புகள் நான்கு உள்ளன.
கருவறை குறுஞ்சிற்பங்கள்
கருவறையின் வேதிபாதங்களில் 21 பாதங்களில் ராமாயண காட்சிகள் உள்ளன. புள்ளரக்கன், பூதனை அரக்கியை கண்ணன் அழிக்கும் பாகவத காட்சிகள் ஐந்திலும். கங்காதரர், கஜசம்ஹாரர், கங்காளர், பிட்சாண்டவர் உருவங்கள் 4, ஆடற்காட்சிகள் 6, பொதுக்கட்சிகள் 3 உள்ளன.
கருவறையின் கர்ண சாலைப் பத்திகளிலும் பஞ்சரங்களிலும் உள்ள கண்டபாதங்களில் கருடன்-விஷ்ணு, நரசிம்மர், காளை அசுரவதம், ஆலிலைக் கண்ணன் போன்ற பாகவத காட்சிகள் உள்ளன. நான்கில் பிட்சாண்டவர், கஜசம்ஹாரர், பாசுபதமூர்த்தி, கிராதார்ஜுனர், நடராஜர் சிற்பங்கள் உள்ளன.
வடக்கு சாலை, பஞ்சரம் கிழக்கு கர்ணபத்திகள், பஞ்சரங்கள், சாலை பாதங்களில் உள்ள தொடரான 22 காட்சிகள் அக்காலத்தே வழக்கிலிருந்த புராணக்கதை ஒன்றின் பதிவாக அமைந்துள்ளன.
சிற்பங்கள் பட்டியல்
பாச்சில் அவனீசுவரம் கோவிலில் மூலவர் லிங்கம், கொற்றவை, பிரம்மா, ஹரிஹரர், தட்சிணாமூர்த்தி மற்றும் ரிஷப சிற்பங்கள் உள்ளன.
கல்வெட்டுகள்
இக்கோவிலில் 8 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அனைத்தும் சோழர் காலத்தைய கல்வெட்டுகள், தமிழில் அமைந்துள்ளன. பெரும்பான்மையான கல்வெட்டுகள் ஸ்வஸ்தி ஸ்ரீ என்னும் மங்கலச் சொல்லுடன் துவங்குகின்றன. அனைத்து கல்வெட்டுகளும் இந்திய அரசு வெளியிட்ட கல்வெட்டு ஆண்டறிக்கை 1992-1993-ல் எண்கள் 418-421, 423, 426, 428 ஆகியவற்றில் தொகுக்கப்பட்டுள்ளன.
- கல்வெட்டு எண் 418, உத்தம சோழரின் 12வது ஆட்சியாண்டு (பொ.யு. 981) கல்வெட்டு முகமண்டபத் தெற்கு பட்டிகையில் காணப்படுகிறது. ஸ்வஸ்திஸ்ரீ உத்தமசோழற்கு 12 ஆவது என்று தொடங்கும் கல்வெட்டு முடிவுறவில்லை.[1]
- கல்வெட்டு எண் 419, உத்தம சோழரின் 12-வது ஆட்சியாண்டு (பொ.யு. 981) கல்வெட்டு விமானக் கிழக்கு குமுதத்தில் காணப்படுகிறது. கண்டராதித்தரின் மனைவி செம்பியன் மாதேவி இறைவன் முன் விளக்கு ஏற்ற வாய்ப்பாக தராவினாலான ஐந்து நிலை விளக்குகளை வழங்கியதை குறிப்பிடுகிறது.[1]
- கல்வெட்டு எண் 420, உத்தம சோழரின் 14-வது ஆட்சியாண்டு (பொ.யு. 983) கல்வெட்டு விமானத் தெற்கு குமுதத்தில் காணப்படுகிறது. இக்கோயிலில் நிகழ்ந்த வைகாசி விசாகத் திருவிழாவின்போது உலாத்திருமேனிகளாக எழுந்தருளச் செய்வதற்காக பாதத்தளமும், திருவாசியும் கொண்ட அவனிசுந்தரர் திருமேனியை உத்தம சோழரின் தேவியருள் ஒருவரான வீரநாராயணியார் வழங்கியதை குறிப்பிடுகிறது.[1]
- கல்வெட்டு எண் 421, உத்தம சோழரின் 16-வது ஆட்சியாண்டு (பொ.யு. 985) கல்வெட்டு விமானத் தெற்கு குமுதத்தில் காணப்படுகிறது. இக்கோயிலில் நிகழ்ந்த வைகாசி விசாகத் திருவிழாவின்போது உலாத்திருமேனிகளாக எழுந்தருளச் செய்வதற்காக பாதத்தளமும் திருவாசியும் கொண்ட உமா பட்டராகியார் திருமேனிகளை உத்தம சோழரின் தேவியருள் ஒருவரான வீரநாராயணியார் வழங்கியதை குறிப்பிடுகிறது.[1]
- கல்வெட்டு எண் 423, கல்வெட்டு முகமண்டப தெற்கு குமுதத்தில் காணப்படுகிறது. முதலாம் ராஜ ராஜ சோழரின் ஆட்சிக்காலம் என்று கணிக்கப்படுகிறது. ஆனால் ஆண்டு குறிப்பிட இயலவில்லை. செம்பியன் மாதேவியின் நிவந்தத்தை குறிப்பிடுகிறது. கல்வெட்டு முற்றுப்பெறவில்லை.[1]
- கல்வெட்டு எண் 424, முதலாம் ராஜ ராஜ சோழரின் 21-ம் ஆட்சியாண்டு (பொ.யு. 1006) கல்வெட்டு முக மண்டப வடக்கு அதிஷ்டானத்தில் காணப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் ராஜராஜரின் சதய நட்சத்திரத்தன்றும், தமக்கையான குந்தவையின் அவிட்ட நட்சத்திரத்தன்றும் இறைவனுக்கு திருமுழுக்கு செய்து பெருந்திருவமுது வழங்கவும், அவிட்ட விழா நாட்களில் 30 பிராமணர் 30 தவசியர் உண்பதற்கும் அறக்கட்டளை அமைக்க கருதிய இராஜாச்ரைய வளநாட்டை வகை செய்த ஆவணமுடையான் மார்த்தாண்டன் உத்தமன் அதற்குரிய 300 காலம் நெல் முதலுக்காக ஏற்கெனெவே அவனீசுவரத்தில் அமைக்கப்பட்டிருந்த சில நிவந்தங்களை மாற்றி அமைத்ததை குறிப்பிடுகிறது.[1]
- கல்வெட்டு எண் 426 முகமண்டப, விமான தெற்கு குமுதத்தில் காணப்படுகிறது. முதலாம் ராஜ ராஜ சோழரின் ஆட்சிக்காலம் என்று கணிக்கப்படுகிறது. ஆனால் ஆண்டு குறிப்பிட இயலவில்லை. அவனீசுவரத்து வண்ணக்குக் காரணத்தார் மழபாடி குமரன் இறைவன் முன் நாளும் உழக்கெண்ணையால் நந்தாவிளக்கொன்று ஏற்றுவதற்காக நெல் விலையுமாறு பயன்படுத்தப்பட்ட கால் வேலி நிலத்தின் விளைவாக கிடைத்த 22 கலம் தூணிப்பதக்கு நெல்லுடன் தராவாலான 320 பலம் நிறையுள்ள நிலை விளக்கொன்றையும் கோயிலுக்களித்தை குறிப்பிடுகிறது.[1]
- கல்வெட்டு எண் 428, முதலாம் ராஜேந்திர சோழரின் 6-ம் ஆட்சியாண்டு (பொ.யு. 1018) கல்வெட்டு முக மண்டப வடக்கு அதிஷ்டானத்தில் காணப்படுகிறது. அவனீசுவரம் கோயிலில் பொன் நகைகளை மதிப்பீடு செய்யும் பணியிலிருந்த பண்ணைநல்லூரான் கொற்றங்குமரன் பணி சார்ந்து செய்த குற்றங்களுக்காக முடிகொண்ட சோழ விழுப்பேரரையாரால் சிறையிலிடப்பட்டார் என்ற செய்தியை குறிப்பிடுகிறது.[1]
பிற கல்வெட்டு செய்திகள்
கலம், தூணிப்பதக்கு, உழக்கு ஆகிய முகத்தல் அளவைகள், வேலி, மா, காணி, முந்திரிகை ஆகிய நில அளவுகள், பலம், கழஞ்சு, மஞ்சாடி முதலிய நிறுத்தலளவைகள் வழக்கிலிருந்தன. ராஜச்ரய மரக்கால் கோவில் பண்டாரக காலாக விளங்கியது. 1.5 மீட்டர் நீளமுள்ள அளவுகோல் ஒன்று கோவில் முகமண்டப தெற்குத் தங்குதளத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
தொடர்புடைய ஆளுமைகள்
- பாச்சில் அவனீசுவரம் கோவில் கல்வெட்டுகளின் வாயிலாக கோயில் வரலாற்றுடன் தொடர்புள்ள முக்கிய ஆளுமைகளாக உத்தம சோழர் மற்றும் அவரது தேவியருள் ஒருவரான வீரநாராயணியார், செம்பியன் மாதேவி, முதலாம் ராஜராஜர், குந்தவை, ஆவணமுடையான் மார்த்தாண்டன் உத்தமன், முதலாம் ராஜேந்திரன், பொன் நகைகளை மதிப்பீடு செய்யும் பணியிலிருந்த பண்ணைநல்லூரான் கொற்றங்குமரன் ஆகிய பெயர்களை அறிய முடிகிறது.
- பாச்சில் அவனீசுவரம் கோவில் பற்றி நவீன காலகட்டத்தில் வரலாற்றாய்வுகளை தொகுத்தவர்கள் எஸ்.ஆர். பாலசுப்ரமண்யம் இரா.கலைக்கோவன், அர.நளினி, மு.அகிலா ஆகியோர் அறியப்படுகின்றனர்.
உசாத்துணை
- Middle Chola Temples Rajaraja I To Kulottunga I Ad 985 1070
- சிராப்பள்ளி மாவட்ட சோழர் கால கோயில்கள் - இரா.கலைக்கோவன், அர.அகிலா, மு.நளினி, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை வெளியீடு. - Page 172-204.
அடிக்குறிப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 02-Nov-2025, 17:00:24 IST