under review

பரதநாட்டிய சாஸ்திரம் (நூல்)

From Tamil Wiki
பரதநாட்டிய சாஸ்திரம் நூல்

பரத நாட்டிய சாஸ்திரம் (2001) வடமொழியில் பரத முனிவரால் எழுதப்பட்ட பரத நாட்டிய சாஸ்திர நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு. இதனை மொழிபெயர்த்தவர், எஸ்.என். ஸ்ரீராமதேசிகன். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இந்நூலை வெளியிட்டது.

பிரசுரம், வெளியீடு

பரத நாட்டிய சாஸ்திரம் நூலை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 2001-ல் வெளியிட்டது.

ஆசிரியர் குறிப்பு

பரத நாட்டிய சாஸ்திரம் நூலைத் தமிழில் மொழிபெயர்த்தவர் எஸ். என். ஸ்ரீராமதேசிகன். இவர், சிறுங்கட்டுர், நடாதூர் ஸ்ரீ அம்மானாசாரியரின் மகன். தமிழ் மற்றும் வடமொழி அறிஞர். 1983 முதல் 1996 வரை தமிழக அரசின் சார்பில் இந்திய மருத்துவ இயக்குநரகத்தில் கெளரவத் தனி அலுவலராகப் பணியாற்றினார். அக்கால கட்டத்தில் 'பிராஸபாரதம்', 'அஷ்டாங்க சங்கிரகம்', 'சரக ஸம்ஹிதா', 'ஸுசுருத சம்ஹிதா' போன்ற சம்ஸ்கிருத நூல்களைத் தமிழாக்கம் செய்தார். 6700 பக்கங்களில் ஆறு பகுதிகளாக தமிழக அரசால் அவை அச்சிடப்பட்டு வெளியாகின. அவை ஆயுர்வேதம் பயிலும் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்குப் பாடபுத்தகங்களாக அமைந்தன.

நூல் அமைப்பு

பரத நாட்டிய சாஸ்திரம் நூலில் நாடக அமைப்பு, 108 கரணங்கள், சுவைகள், பாவங்கள், அபிநய வகைகள், நாடக மேடையில் கையாளப்படும் உரையாடல்கள், நாடக வகைகள், நாடகக் கதை அமைப்பு, ஆடைகள். அணிகலன்கள், ஒப்பனை, நாடகத்தை நடத்தும் சூத்திரதாரரின் பண்பு, இசைக் குறிப்புகள், ராகம் எனப் பல செய்திகள் விரிவாக இடம்பெற்றுள்ளன.

சம்ஸ்க்ருத மொழிக்கு தேவையான மரபிலக்கணம், சொல்லிலக்கணம், காவியத்தில் பயன்படுத்தத்தக்க சொற்பொருள், அணிகள் போன்றவை பற்றிய செய்திகளும் விளக்கப்பட்டுள்ளன. நாட்டியம் தொடர்பான கரணங்கள், அபிநயம், முத்திரை, ஹஸ்தம், அடைவு, ந்ருத்த ந்ருத்ய நாட்டிய நாடகங்கள் என அனைத்தும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

அத்தியாயங்கள்

பரத நாட்டிய சாஸ்திரம் நூல், 6000 சம்ஸ்கிருத சுலோகங்களையும், 36 அத்தியாயங்களையும் கொண்டுள்ளது.

முதல் அத்தியாயம்

இந்த அத்தியாயத்தில் நாட்டிய சாஸ்திரம் தோன்றிய வரலாறு விளக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் அத்தியாயம்

நாட்டியத்திற்கு உரிய மண்டபங்களின் அமைப்பு இந்த அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது.

மூன்றாம் அத்தியாயம்

இதில் அரங்க தேவதைகளின் வழிபாட்டு முறைகள் விளக்கப்பட்டுள்ளன.

நான்காம் அத்தியாயம்

இந்த அத்தியாயத்தில் நிருத்தத்திற்கு உரிய கரணங்கள், அங்கஹாரங்கள் விரிவாக விளக்கப் பட்டுள்ளன.

ஐந்தாம் அத்தியாயம்

இந்த அத்தியாயத்தில் திரையை அகற்றுவதற்கு முன் செய்யத்தக்க ஏற்பாடுகள், இசைக்கருவிகளைச் சீர்படுத்திக் கொள்ளுதல், சுருதி கூட்டுதல், இசைக்கருவிகளை இயக்குபவர்கள் அமர்ந்திருக்க வேண்டிய முறைகள் விளக்கப்பட்டுள்ளன.

திரையை விலக்கிய பிறகு சூத்திரதாரன் அரங்கத்திற்கு வந்து நாட்டியத்தைத் தொடங்கி வைக்க வேண்டிய முறைகள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆறாம் அத்தியாயம்

இந்த அத்தியாயத்தில் காப்பியச் சுவைகள் விளக்கப்பட்டுள்ளன.

ஏழாம் அத்தியாயம்

ஏழாம் அத்தியாயத்தில் நாட்டியத்திற்கு உயிரான காப்பியச் சுவைகளுடன் பாவங்கள் முதலியனவும் விளக்கப்பட்டுள்ளன.

எட்டாம் அத்தியாயம்

உடலுறுப்புகளால் அபிநயம் செய்ய வேண்டிய முறைகள் பற்றி இந்த அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது.

ஒன்பதாம் அத்தியாயம்

இதில் ஸம்யுத ஹஸ்தங்கள், அஸம்யூத ஹஸ்தங்கள், மார்பு, விலாப்பகுதி, நெற்றி, வயிறு போன்றவற்றால் செய்யத்தக்க நுட்பமான அபிநயங்கள் விளக்கப்பட்டுள்ளன.

பத்து மற்றும் பதினோராம் அத்தியாயங்கள்

'சாரி'கள், வானத்திலும், நிலத்திலும் நடப்பதை உணர்த்தும் மண்டலங்கள் முதலியன இந்த இரு அத்தியாயங்களிலும் விளக்கப்பட்டுள்ளன.

பன்னிரண்டாம் அத்தியாயம்

இதில் பாத்திரங்கள், அரங்கத்திற்குள் புக வேண்டிய முறைகள், பலவகைப் பாத்திரங்களின் நடைகள் விளக்கப்பட்டுள்ளன.

பதிமூன்றாம் அத்தியாயம்

இதில் வேறு வேறு நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்களின் 'நடை'களை அபிநயம் செய்யும் முறை, தர்மி, லோகதர்மி, நாட்ய தர்மி முதலியன விளக்கப்பட்டுள்ளன.

பதினான்காம், பதினைந்தாம் அத்தியாயங்கள்

இவற்றில் வடமொழி யாப்பிலக்கணம், சொல்லிலக்கணம் முதலியன பற்றிக் கூறப்பட்டுள்ளது.

பதினாறு, பதினேழாம் அத்தியாயங்கள்

இவ்விரு அத்தியாயங்களிலும் காப்பியங்களில் (நாடகங்களில்) பயன்படுத்தத் தக்க சொல், பொருள், அணிகள், பாத்திரங்களின் உரையாடலுக்குப் பயன்படுத்த வேண்டிய மொழிகளின் விளக்கம் பற்றிக் கூறப்பட்டுள்ளது.

பதினெட்டாம் அத்தியாயம்

இதில் வடமொழியில் உள்ள பத்து வகை நாடகங்களின் இலக்கணம் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

பத்தொன்பது மற்றும் இருபதாவது அத்தியாயங்கள்

இவற்றில் காப்பிய இலக்கணங்களான விருத்திகள் (சுவைக்கேற்ற மொழி நடை) விளக்கப்பட்டுள்ளன.

இருபத்தொன்றாம் அத்தியாயம்

இந்த அத்தியாயத்தில் அரங்கத்தில் அலங்காரங்கள், பாத்திரங்களின் ஆடை, அணிகலன்கள், வேடம் பூணும் முறை பற்றிய விளக்கங்கள் இடம்பெற்றுள்ளன.

இருபத்தியிரண்டாம் அத்தியாயம்

இருபத்தியிரண்டாம் அத்தியாயத்தில் சாத்விக அபிநயங்கள் - அதாவது நிலைமைக்கு ஏற்பப் பாத்திரங்களின் மனநிலையைச் சார்ந்த அபிநயங்கள் - விளக்கப்பட்டுள்ளன.

இருபத்தி மூன்றாம் அத்தியாயம்

இந்த அத்தியாயத்தில் பரத நூல், 'பாஹ்ய உபசாரம்’ என்ற புறத்தில் நிகழக் கூடிய காதல் முறைகள் விளக்கப்பட்டுள்ளன (மனைவி அல்லது வேசி முதலிய மாதர்களுடன் நிகழும் காதல் ‘பாஹ்ய உபசாரம்’ எனப்படும்

இருபத்தி நான்காம் அத்தியாயம்

இதில் தலைவன், தலைவி, விதூஷகன் போன்ற நாட்டியப் பாத்திரங்களின் இலக்கணங்கள் கூறப்பட்டுள்ளன.

இருபத்தி ஐந்தாம் அத்தியாயம்

இந்த அத்தியாயத்தில் சித்திராபிநயம் அதாவது இரவு, பகல், நிலவு, மகிழ்ச்சி, உறக்கம், சூரியன், சிங்கம் போன்ற விலங்குகள், பறவைகள் போன்றவற்றை பற்றிய அபிநயங்கள், பெரியோர்களை வணங்க வேண்டிய முறை, உயிர் நீங்கக் கூடிய நிலையில் உள்ளவனின் அபிநயம் போன்றவை விளக்கப்பட்டுள்ளன.

இருபத்தி ஆறாம் அத்தியாயம்

ஆண் வேடத்தைப் பெண், பெண் வேடத்தை ஆண் தாங்குதல் போன்றவற்றை பற்றிய விளக்கங்கள் இந்த அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ளன.

இருபத்தி ஏழாம் அத்தியாயம்

நாடகக் காட்சிகள் காண்போர் மனத்தைக் கவரும்படி வெற்றிகரமாக நடத்துவதற்குப் பின்பற்ற வேண்டிய முறைகள் என்னென்ன என்பது பற்றிய விளக்கங்கள் இந்த அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ளன.

இருபத்தெட்டு முதல் முப்பத்தி மூன்றாம் அத்தியாயங்கள் வரை

இந்த அத்தியாயங்களில் இசையைச் சார்ந்த ஸ்வரம், ராகம், தாளம், வாதிஸம், வாதி சுரங்கள், தாள ஜதிகள் கிராம ஜாதி போன்றவற்றைச் சுவைகளுக்கு ஏற்பப் பயன்படுத்தும் முறைகள், தாளங்களைப் பற்றிய விளக்கங்கள் இடம்பெற்றுள்ளன.

முப்பத்தி நான்காம் அத்தியாயம்

இந்த அத்தியாயத்தில் அந்தந்தச் சுவைக்கு ஏற்ப வாத்தியங்களைப் பயன்படுத்த வேண்டிய முறை, இசைக்கருவிகளைப் பயன்படுத்துபவர்கள் அரங்கில் அமர்ந்திருக்க வேண்டிய முறைகள் முதலியன விளக்கப்பட்டுள்ளன.

முப்பத்தி ஐந்தாம் அத்தியாயம்

நாட்டியத்திற்கு தேர்ந்தெடுக்க வேண்டிய பாத்திரங்களைப் பற்றிய விளக்கத்தை இந்த அத்தியாயத்தில் காணலாம் .

முப்பத்தி ஆறாம் அத்தியாயம்

இந்த அத்தியாயத்தில் நாடகத்தைத் (நாட்டியத்தை) தொடங்குமுன் செய்யவேண்டிய முறைகளின் பயன்கள் பற்றி விளக்கப்பட்டுள்ளது. வியனுலகத்திலிருந்து நாட்டியம் நிலவுலகுக்குக் கொண்டு வரப்பட்ட முறை, நாட்டியத்தின் சிறப்பு முதலியன விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

மதிப்பீடு

பரத நாட்டிய சாஸ்திரம் நூலில், பரத நாட்டியத் தோற்றம், வரலாறு தொடங்கி, நாட்டிய இலக்கணம், பயிற்றுவிக்கும் முறைகள், அதன் நுட்பங்கள் இசை, பண், தாளம், தாள ஜதிகள், பாத்திரங்கள் என அனைத்தும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. பரதம் பயிலுவோருக்கும், பரதம் பற்றிய ஆய்வாளர்களுக்கும், மாணவர்களுக்கும் பயன் தரும் நூலாக பரத நாட்டிய சாஸ்திரம் நூல் அறியப்படுகிறது.

உசாத்துணை

பரதநாட்டிய சாஸ்திரம், கலைமாமணி எஸ்.என். ஸ்ரீராமதேசிகன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, முதல் பதிப்பு: 2001.


✅Finalised Page