under review

பதினெண் புராணங்கள்

From Tamil Wiki

பதினெண் புராணங்கள் வேத வியாசரால் தொகுக்கப்பட்டவை. இப்புராணங்கள் வேதகாலத்திற்கும் வெகுகாலம் முற்பட்டவை என்பது ஆய்வாளர்களின் கருத்து. இவை பெரும்பாலும் வடமொழியிலேயே வழிவழியாக வாய்மொழியாக வழங்கப்பட்டன. மும்மூர்த்திகள் என்று போற்றப்படும் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரின் பெருமைகள், சிறப்புகள் பதினெண் புராணங்களில் கூறப்பட்டுள்ளன. பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் இவற்றைத் தமிழில் தந்துள்ளார்.

பதினெண் புராணங்கள்

பதினெண் புராணங்கள், அஷ்டா தச புராணங்கள் என்றும் அழைக்கபடுகின்றன. பதினெண் புராணங்களாவன,

  • பிரம்ம புராணம்
  • பத்ம புராணம்
  • விஷ்ணு புராணம்
  • வாயு புராணம்
  • பாகவத புராணம்
  • நாரத புராணம்
  • மார்க்கண்டேய புராணம்
  • அக்னி புராணம்
  • பவிஷ்ய புராணம்
  • பிரம்ம வைவர்த்த புராணம்
  • லிங்க புராணம்
  • வராக புராணம்
  • ஸ்கந்த புராணம்
  • வாமன புராணம்
  • கூர்ம புராணம்
  • மச்ச புராணம்
  • கருட புராணம்
  • பிரம்மாண்ட புராணம்

பதினெண் புராண வரலாறு

பிரம்ம புராணம்

பிரம்மன், தட்சப் பிரஜாபதிக்கு விவரிப்பதாக உள்ள இப்புராணத்தில் 25,000 ஸ்லோகங்கள் உள்ளன.

பத்ம புராணம்

பிரம்மனின் பத்மாசனம் இப்புராணத்தில் விவரிக்கப்படுவதால் இது பத்ம புராணம் என்ற பெயரைப் பெற்றது. ஆறு காண்டங்களில் 55,000 ஸ்லோகங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

விஷ்ணு புராணம்

பராசர மகரிஷி, மைத்ரேயருக்கு உபதேசம் செய்ததே விஷ்ணு புராணம். இப்புராணம் ஆறு காண்டங்களையும், ஒவ்வொரு காண்டத்திலும் ஐந்து பெரும் பிரிவுகளையும் கொண்டுள்ளது. இப்புராணம், மிகப் பழமையான புராணமாகக் கருதப்படுகிறது,

வாயு புராணம்

இப்புராணம், பதினான்காயிரம் ஸ்லோகங்களைக் கொண்டுள்ளது. இதில் பிற்காலத்திய குப்த வம்சத்து மன்னர்களைப் பற்றியும், பாணபட்டர் என்ற புலவரைப் பற்றியும் செய்திகள் காணப்படுகின்றன.

பாகவத புராணம்

ஸ்ரீமத் பாகவதம் என்றும் ஸ்ரீமத் பாகவத புராணம் என்றும் இப்புராணம் அழைக்கப்படுகிறது. வியாசரால் இயற்றப்பட்டது. மகாபாரதத்தில் முழுமையாக இடம் பெறாத ஸ்ரீகிருஷ்ணரின் முழு வரலாறும், விஷ்ணுவின் பிற அவதாரங்கள் குறித்த செய்திகளும் இப்புராணத்தில் இடம்பெற்றுள்ளன. இப்புராணம் 12 காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 18000 ஸ்லோகங்கள் இப்புராணத்தில் உள்ளன.

நாரத புராணம்

நாரத மகரிஷி, ரிஷி சனத்குமாரருக்கு உபதேசித்தது இப்புராணம். 25,000 ஸ்லோகங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

மார்க்கண்டேய புராணம்

மிகப்பழைமையான புராணங்களுள் ஒன்றாக இப்புராணம் கருதப்படுகிறது. இதிலுள்ள தேவி மகாத்மியம் என்ற பகுதிதான், பின்னர் தனியான ஓர் உப புராணமாக உருவெடுத்தது. ‘துர்க்கா சப்த சதி’ எனப்படும் துர்க்கையைப் போற்றும் 700 துதிகள் இதில் இடம்பெற்றுள்ளன. ஜைமினி முனிவருக்கு, மார்க்கண்டேய முனிவர் கூறுவதாக கதைக்குள் கதையாக பல்வேறு புராணக் கதைகள் இதில் உள்ளன.

அக்னி புராணம்

அக்னி தேவன் வசிஷ்ட முனிவருக்குக் கூறியது அக்னி புராணம். சிவலிங்கம், துர்க்கை, ராமர், கிருஷ்ணர் பற்றிய செய்திகளும், நாடகம், சிற்பம், ஜோதிடம் போன்ற கலைகளைப் பற்றிய செய்திகளும் இப்புராணத்தில் விரிவாக இடம்பெற்றுள்ளன.

பவிஷ்ய புராணம்

சூரியன் மனுவுக்குக் கூறிய புராணம் இது. எதிர்காலத்தில் என்னென்ன நிகழ்வுகளெல்லாம் நடக்கும் என்பதை சூரியன் மனுவுக்கு விவரித்தான். அதைப் பற்றியும், திருத்தலங்கள், வழிபாடுகள், வழிபாட்டு உரிமைகள் பற்றியும் இந்நூலில் பல செய்திகள் கூறப்பட்டுள்ளன.

பிரம்ம வைவர்த்த புராணம்

இப்புராணம் நான்கு காண்டங்களைக் கொண்டது. அவை, பிரம்ம காண்டம், ப்ரக்ருதி காண்டம், கணேச காண்டம், கிருஷ்ண ஜன்ம காண்டம். இப்புராணத்தில் 18000 ஸ்லோகங்கள் உள்ளன. இப்புராணத்தில் உள்ள கணேச காண்டம் என்ற பகுதிதான் பின்னர் விநாயக புராணமாக உருப்பெற்றது. ‘கிருஷ்ண ஜன்ம காண்டம்’ என்ற பகுதியில் உள்ள சில செய்திகள், ஸ்ரீமத் பாகவத புராணத்திலும் இடம்பெற்றுள்ளன.

லிங்க புராணம்

சிவபெருமானைக் குறித்தும் அவரது 28 வடிவங்களைக் குறித்தும் கூறும் புராணம் இது. லிங்க வழிபாட்டின் தோற்றம், காரணம், சிவபெருமானின் அவதார லீலைகள், சிவனின் அருளிச் செயல்கள் இப்புராணத்தில் இடம்பெற்றுள்ளன. இப்புராணத்தில் 18000 ஸ்லோகங்கள் உள்ளன.

வராக புராணம்

விஷ்ணுவின் வராக அவதாரத்தை விவரிக்கும் புராணம் இது. இப்புராணத்தில் 14000 ஸ்லோகங்கள் உள்ளன.

ஸ்கந்த புராணம்

முருகனின் வரலாற்றை விரிவாக விளக்கும் புராணம் இது. முருகனின் தோற்றம், அவதாரப் பெருமை, சூரபத்மனை வதம் செய்தது, வள்ளி, தெய்வானை திருமணம், முருகப் பெருமானின் அருளிச் செயல்கள் ஆகியன இப்புராணத்தில் இடம்பெற்றுள்ளன.

வாமன புராணம்

வாமன அவதாரத்தை விவரிக்கும் புராணம் இது. கூடவே சிவன் - பார்வதி ஆகியோரது திருமண வரலாறும் இப்புராணத்தில் இடம்பெற்றுள்ளது. இதில் 10000 ஸ்லோகங்கள் உள்ளன.

கூர்ம புராணம்

இந்திரத்யும்னன் என்ற மன்னனிடம், விஷ்ணுவின் இரண்டாவது அவதாரமான கூர்ம அவதாரம் பற்றிய செய்திகள் விவரிக்கப்படுவதாக இப்புராணம் அமைந்துள்ளது. இதில் 8000 ஸ்லோகங்கள் உள்ளன.

மச்ச புராணம்

விஷ்ணுவின் முதலாவது அவதாரமான மீன், (மத்ஸ்யம்; மச்சம்) தன்னைக் குறித்து மனுவிடம் விவரிப்பதாக உள்ளது இப்புராணம். 10000 ஸ்லோகங்களை உள்ளடக்கிய இப்புராணத்தில், பல மன்னர்களின் வரலாறுகள் இடம்பெற்றுள்ளன.

கருட புராணம்

மகாவிஷ்ணு, தனது வாகனமாகிய கருடனுக்கு விவரித்த செய்திகளின் தொகுப்பே கருடபுராணம். இதில் 8000 ஸ்லோகங்கள் உள்ளன. இதில் மரணம், மரணத்திற்குப் பின்னான மனிதர்களின் நிலை, மரணத்திற்குப் பின் செய்ய வேண்டிய சடங்குகள், முற்பிறவி, மறுபிறவி பற்றிய செய்திகள், பாவம், புண்ணியம் செய்தவர்கள் அடையும் நிலைகள், சொர்க்க, நரகங்கள், தண்டனைகள் போன்றவை விரிவாக விளக்கப்பட்டுள்ளன

பிரம்மாண்ட புராணம்

நமது பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்தும், அது விரிவடைந்து உருவாகியது குறித்துமான செய்திகள் இப்புராணத்தில் இடம்பெற்றுள்ளன. பெருவெடிப்பு என்று இன்று விஞ்ஞானம் கூறும் நிகழ்வை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே கூறிய புராணமாக, பிரம்மாண்ட புராணம் கருதப்படுகிறது.

பதினெண் உப புராணங்கள்

பதினெண் புராணங்களில் 18 உப புராணங்களும் உள்ளன அவை.

  • சனத்குமார புராணம்
  • நரசிங்க புராணம்
  • சிவ புராணம்
  • பிரஹன்னாரதீய புராணம்
  • துர்வாச புராணம்
  • கபில புராணம்
  • மானவ புராணம்
  • ஔசஸை புராணம்
  • வருண புராணம்
  • ஆதித்ய புராணம்
  • மகேச்வர புராணம்
  • வசிட்ட புராணம்
  • பார்க்கவ புராணம்
  • காளிகா புராணம்
  • சாம்ப புராணம்
  • நந்திகேஸ்வர புராணம்
  • சௌர புராணம்
  • பராசர புராணம்

பதினெண் உப புராணங்கள் (வேறு)

பதினெண் உப புராணங்களாக வேறு சில நூல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை,

  • சூரிய புராணம்
  • கணேச புராணம்
  • காளிகா புராணம்
  • கல்கி புராணம்
  • சனத்குமார புராணம்
  • நரசிங்க புராணம்
  • துர்வாச புராணம்
  • வசிட்ட புராணம்
  • பார்க்கவ புராணம்
  • கபில புராணம்
  • பராசர புராணம்
  • சாம்ப புராணம்
  • நந்தி புராணம்
  • பிருகத்தர்ம புராணம்
  • பரான புராணம்
  • பசுபதி புராணம்
  • மானவ புராணம்
  • முத்கலா புராணம்

பதினெண் புராண விளக்கங்கள்

பதினெண் புராணங்கள் எவை எவை என்பதில் சமயவாதிகளிடம் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. பதினெண் புராணங்களில் சிவ புராணமும் ஒன்று என்றும், அது உபபுராணத்தில் உள்ளது, வாயு புராணமே பதினெண் புராணங்களில் இடம்பெறத் தக்கது என்றும் கருத்துகள் உள்ளன. பதினெண் புராணங்களில் மிகப்பெரியதாகக் ஸ்கந்தபுராணமும், மிகச்சிறியதாக மார்க்கண்டேய புராணமும் உள்ளன.

புராணங்கள் பலவற்றிலும் பிரபஞ்சத்தின் தோற்றம், நிலைபேறு, அழிவு, மீண்டும் தோற்றம் முதலான செய்திகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு புராணத்திலும் நூற்றுக்கணக்கான கதைகள் உள்ளன. பெரும்பாலான கதைகள் ஏறத்தாழ எல்லாப் புராணங்களிலும் உள்ளன என்றாலும் அவற்றிற்கிடையே வேறுபாடுகளும் உள்ளன.

இப்புராணங்கள் அனைத்துமே, இவ்வுலகில் பிறந்த மனிதன் பல்வேறு சிக்கல்கள் நிறைந்த வாழ்க்கையில் எவ்வாறு அமைதியான வாழ்க்கையை மேற்கொள்வது என்பதையும், தர்ம, அர்த்த, காமம் ஆகிய மூன்றை எப்படி அளவறிந்து வாழ்க்கையில் மேற்கொள்வது என்பதையும் கதைகள் மூலம் அறிவுறுத்துகின்றன.

உசாத்துணை


✅Finalised Page