under review

பகுத்தறிவு (சேலம் இதழ்)

From Tamil Wiki
பகுத்தறிவு மாத இதழ், சேலம்

பகுத்தறிவு (1951), திராவிட முன்னேற்றக் கழக ஆதரவு இதழ். 1951 முதல் சேலத்திலிருந்து வெளிவந்தது. ஜலகண்டபுரம் பி. கண்ணன் இதன் ஆசிரியர். சமூக மாற்றத்தை மக்களிடையே உருவாக்கும் நோக்கத்தில் இவ்விதழ் வெளிவந்தது.

பதிப்பு, வெளியீடு

பகுத்தறிவு மாத இதழ், ஜனவரி 14, 1951 முதல் சேலத்திலிருந்து வெளிவந்தது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர்களுள் ஒருவரும், எழுத்தாளரும், நாடக ஆசிரியருமான சலகை கண்ணன் என்னும் ஜலகண்டபுரம் ப. கண்ணன் இவ்விதழைத் தொடங்கி நடத்தினார். அறிவியல் திங்கள் வெளியீடு என்ற குறிப்புடன் வெளிவந்த இவ்விதழின் விலை 2 அணா. ஆண்டுச் சந்தா ஒரு ரூபாய், எட்டணா. வெளிநாட்டுச் சந்தா:இரண்டு ரூபாய். ஆண்டைக் குறிக்க 'மலர்' என்பதையும், மாதத்தைக் குறிக்க 'இதழ்' என்பதையும் பகுத்தறிவு இதழ் பயன்படுத்தியது. தமிழ் மாதந்தோறும் முதல் நாளில் வெளிவரும் என்ற குறிப்புடன், 36 பக்கங்களுடன் இவ்விதழ் வெளிவந்தது. ஜூலை 1951 முதல் இதழின் விலை மூன்று அணாவாகவும், ஆண்டுச் சந்த இரண்டு ரூபாய் நான்கணாவாகவும் உயர்த்தப்பட்டது. 30 பக்கங்களில் வெளியானது.

ஜூலை 1956 முதல், பகுத்தறிவு வார இதழாக வெளிவந்தது. எட்டுப் பக்கங்கள் கொண்ட இதழின் விலை ஓரணாவாக இருந்தது. ஆண்டுச் சந்தா: மூன்று ரூபாய் எட்டணா. டிசம்பர் 1956 முதல் 12 பக்கங்களில், ஒன்றரை அணா விலையில் வெளிவந்தது. ஆண்டுச் சந்தா ஐந்து ரூபாய்க்கு உயர்த்தப்பட்டது.

பகுத்தறிவு வார இதழ், சேலம்
பகுத்தறிவு வார இதழில் கேலிச் சித்திரம்

உள்ளடக்கம்

பகுத்தறிவு மாத இதழ்

பகுத்தறிவு மாத இதழின் முகப்புப் பக்கத்தில் வெளிநாட்டு அறிஞர்களின் படங்கள் இடம் பெற்றன. முகப்பில் இடம் பெற்ற சார்லஸ் பிராட்லா, எமிலி ஜோலா, ரூஃசோ, வால்டையர் போன்ற அறிஞர்களைப் பற்றிய கட்டுரைகள் இதழின் உள்ளே இடம் பெற்றன. தலையங்கத்தை கண்ணன் எழுதினார். பகுத்தறிவுக் கொள்கைகளை விளக்கும் பல சிறுகதைகள் இதழில் இடம்பெற்றன. மரபுக் கவிதைகளுக்கும் இவ்விதழ் இடமளித்தது. உலகச் செய்திகள், நாட்டு நடப்புகள் ‘நடப்பும் கருத்தும்' என்ற பகுதியில் இடம் பெற்றன.

லண்டன் மாநகரில் நடைபெற்ற உலகப் பகுத்தறிவாளர் மாநாட்டில் ’இந்தியாவில் பகுத்தறிவு’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட கட்டுரை, தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது. உலக அறிஞர்களின் சிந்தனைகள், உரைகள் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகின. அறிவியல் செய்திகள், தன்னம்பிக்கைக் கட்டுரைகள், உளவியல் கட்டுரைகள் இடம் பெற்றன. விளம்பரங்களும் இவ்விதழில் வெளிவந்தன. அறிஞர்களின் பொன்மொழிகள் இடம் பெற்றன. பகுத்தறிவுச் சிந்தனைகளை விளக்கும் நகைச்சுவைத் துணுக்குகளும் இவ்விதழில் இடம் பெற்றன. ‘கருத்துரை’ என்ற தலைப்பில் புத்தக விமர்சனங்கள் வெளியாகின.

பகுத்தறிவு வார இதழ்

பகுத்தறிவு வார இதழில் புதிதாக ‘கேள்விக்கணை’ என்ற தலைப்பில், கேள்வி-பதில் பகுதி இடம் பெற்றது. ‘இதயம்’ என்ற தலைப்பில் தலையங்கச் செய்தி இடம் பெற்றது. திரைப்பட விளம்பரங்களும், திரைப்பட விமர்சனங்களும் வெளியாகின. ப. கண்ணன் எழுதிய ‘நந்திவர்மன்’ என்னும் நாடகத் தொடர் வெளியானது. கேலிச் சித்திரங்களும் அவ்வப்போது இடம் பெற்றன. ‘இன்றைய இலக்கியம்’ என்ற தலைப்பில் ‘தமிழ்த்தும்பி’ எழுதிய திறனாய்வுக் கட்டுரை வெளிவந்தது. ஆண்டுதோறும் பகுத்தறிவு இதழ் பொங்கல் மலரை வெளியிட்டது.

பங்களிப்பாளர்கள்

  • ப. கண்ணன்
  • இரா. நெடுஞ்செழியன்
  • பாவலர் வேலாயுதசாமி
  • ப.க .குஞ்சிதம்
  • இளந்தமிழன்
  • ஏ. பெரியசாமி
  • ப. உ. சண்முகம்
  • என்.எஸ். வாசன்
  • பெ.ஆ.சி. வயிரவன்
  • ஆர். சந்திரன்
  • அறிவுக்குஞ்சு
  • ச. ஆறுமுகநாதன்
  • நன்னியூர் நாவரசன்
  • சக்திதாசன்
  • ர. வரதராசன்
  • சிந்தனையாளன்
  • வேங்கை
  • எம். சீதாராமன்
  • அ. வரதநஞ்சையனார்
  • பெரிய குளம் சுப்பராயலு
  • தி.ரா. தர்மராசன்
  • வித்வான் இரா. சொக்கலிங்கன்
  • இரா. சி. சவுண்டப்பன்
  • இரா. இலட்சுமி
  • ஆர்.மகமத்
  • ஏயார்

இதழ் நிறுத்தம்

1951 தொடங்கி 1956 வரை பகுத்தறிவு இதழ்கள் காணக் கிடைக்கின்றன. அதன் பின் இதழ் எப்போது நின்றுபோனது என்ற விவரங்களை அறிய இயலவில்லை.

ஆவணம்

பகுத்தறிவு இதழின் 1951 மற்றும் 1956-ம் ஆண்டின் இதழ்கள் தமிழ் இணையக் கல்வி கழக நூலகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

இலக்கிய இடம்

பகுத்தறிவுக் கொள்கைகளுக்கும், திராவிடச் சிந்தனைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து பகுத்தறிவு இதழ் வெளிவந்தது. இதன் கட்டுரைகள் எளிய தமிழில் அமைந்தன. பொதுவாசிப்புக்குரிய பல சிறுகதைகள் பகுத்தறிவில் வெளியாகின. திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரித்து வெளிவந்த இதழ்களில் பகுத்தறிவு இதழ், குறிப்பிடத்தகுந்த ஓர் இதழாக மதிப்பிடப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page