under review

ந. பிரியா சபாபதி

From Tamil Wiki
ந. பிரியா சபாபதி

ந. பிரியா சபாபதி (ஏப்ரல் 4, 1979) மாற்றுக்கல்விச் சிந்தனையாளர், கல்வியாளர், விமர்சகர், தமிழாசிரியர். குழந்தைகளின் கல்வி வளர்ச்சியில் பெற்றோர்-ஆசிரியர்-சமுதாயம் பெறும் முக்கியத்துவம் பற்றித் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகிறார். பள்ளிக்குழந்தைகளின் மனநிலை பற்றியும் குழந்தைகள்-பெற்றோர்-ஆசிரியர் உறவுநிலை குறித்தும் உளவியல் அடிப்படையில் புத்தகங்களை எழுதியுள்ளார்.

பிறப்பு, கல்வி

ச. நடராஜன் – ந. சண்முகலட்சுமி தம்பதியருக்கு ஏப்ரல் 4, 1979-ல் அப்பாசமுத்திரத்தில் பிறந்தார். இவர் மூன்று வயதிலிருந்து தூத்துக்குடியில் வளர்ந்தார். தூத்துக்குடி ஏ.பி.சி. மகளிர் கல்லூரித் தமிழ்த்துறையில் இளங்கலை, முதுகலை, ஆய்வியல் நிறைஞர் பட்டங்களைப் பெற்றவர். எழுத்தாளர் பா. ராகவனின் படைப்புகளைப் பற்றி ஆய்வு செய்தார்.

தனிவாழ்க்கை

இவருக்கு உடன் பிறந்தோர் மூவர். அக்கா ந. சண்முக மகாலட்சுமி, அண்ணன் ந. பாலசுப்பிரமணியன், தங்கை ந. பாரதி. இவர் திருமணத்திற்குப் பின்னர் மதுரையில் குடியேறினார். கணவர் பெயர் க. பா. சபாபதி. மதுரை டி.வி.எஸ். கல்வியியல் கல்லூரியில் இளங்கலை கல்வியியல் படிப்பைப் பயின்றார். 2004 முதல் ஆசிரியப்பணியில் உள்ளார்.

இலக்கிய வாழ்க்கை

நாளைய தலைமுறை நல்லாயிருக்க ஃப்ரீ அட்வைஸ்

"படித்த மேதைகளுக்கும் படிக்காத மேதைகளுக்கும் ஒரே மேடை இந்தச் சமுதாயம்தான். அந்த மேடையில் ஜொலிப்பவர்களுள் பலர் 'படிக்காத மேதைகள்தான்’ என்ற நிலை ஏற்பட்டால், ஒட்டுமொத்த கல்விநிறுவனங்களின் 'கதி’ என்னவாகும்? எல்லாவற்றையும் பாடத்திட்டத்தில் வைத்துக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று கல்வித்துறை நினைத்தால், அதையே பெற்றோரும் மாணவர்களும் எதிர்பார்த்தால், ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு பெரிய அலமாரி நிறையும் அளவுக்குப் புத்தகங்களைத் தயாரிக்க வேண்டும். 'கற்றுக்கொள்வது’ என்பது, வாழ்க்கை முழுவதும் நிகழவேண்டிய செயல்பாடு. அதனால், அதைச் சுருக்கிப் பாடத்திட்டத்தில் அடக்கிவிட முடியாது. நிச்சயமாக எல்லாவற்றையும் பாடத்திட்டத்தில் வைக்கவே முடியாது. பாடத்திட்டத்திற்கும் சமுதாயத்திற்கும் இடையே உள்ள இடைவெளியில்தான் இன்றைய தலைமுறையினர் தடுமாறி விழுகின்றனர். அந்த இடைவெளி குறைக்கப்படும் போதுதான் சிறந்த இளைய தலைமுறையை நாம் பெற முடியும்" என்று தன்னுடைய ஆசிரியர் பணி அனுபவத்தால் கண்டடைந்த கல்விசார்ந்த சிந்தனைகளைத் தன் எழுத்திலும் பேச்சிலும் வெளிப்படுத்தி வருகிறார்.

'பாடத்திட்டமே வாழ்க்கை அல்ல’ என்ற தெளிவையும் 'உலகமே சிறந்த வகுப்பறை’ என்ற புரிதலையும் மிகச் சரியாக உணர்த்தும் வகையில், 'அவுட் ஆஃப் சிலபஸ்’ என்ற புத்தகத்தை எழுதினார். இது பொதுவாக ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களும் உரியது; தனிப்பட்ட முறையில் பள்ளி, கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவியருக்கும் உரியது. மாறிவரும் சமூகச்சூழலில் கல்வியாளரும் கற்போரும் எதிர்கொள்ளும் இன்னல்களைப் புரிந்துகொண்டு அவற்றை நீக்க, 'நாளைய தலைமுறை நல்லாயிருக்க ஃப்ரீ அட்வைஸ்’ என்ற புத்தகத்தை எழுதினார். இவர், 'இனிவரும் தலைமுறைக்குக் கல்வியை, வாழ்க்கையை எவ்வாறு அறிமுகப்படுத்த வேண்டும்?’ என்ற வினாவை எழுப்பிக்கொண்டு, அதற்கு விடையாகவே இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். பெற்றோர், ஆசிரியர் ஆகிய இருவரின் பார்வைக்கோணமும் எங்கெல்லாம் பிழைபடுகின்றனவோ அங்கெல்லாம் குழந்தையும் மாணவரும் தடம் மாறுகின்றனர். அவர்களின் வாழ்வியல் வழித்தடத்தைச் சீர்ப்படுத்தவே அவர் இந்தப் புத்தகத்தை உருவாக்கியுள்ளார். இந்தப் புத்தகத்தில் உள்ளவை அறிவுரைகள் அல்ல; அறவுரைகள்.

அவுட் ஆஃப் சிலபஸ்

பெண்ணின் பெருமையை ஆண்கள் எவ்வளவு எழுதினாலும் பெண்களால் மட்டுமே உண்மையான, இயல்பான பெண்ணினத்தின் உணர்வை எழுத்தில் கொண்டுவர முடியும். இவர், மகளிர் சுய உதவிக் குழு மூலம் மகளிர் மேம்பாட்டுக்காக உழைத்த 'சின்னபிள்ளை’யிலிருந்து 'எவரெஸ்ட்’ சிகரத்தை அடைந்த 'பச்சேந்திரி’ வரை அனைத்துத் துறைகளிலும் சாதனை புரிந்த பெண்களைப் பற்றியும் அவர்கள் எதிர்கொண்ட வாழ்வியல் சிக்கல்களைக் குறித்தும் புனைவுக்குள் நுழைத்து, 'மாதர்’ என்ற தலைப்பில், நெடுங்கதை வடிவில் எழுதியுள்ளார்.

இலக்கிய இடம்

மாதர்

'ஆசிரியர் பணி’ என்பது, வெறுமனே வகுப்பறைக்குள் மட்டும் நிகழ்ந்து முடிவதில்லை; அது வகுப்பறைக்கு வெளியேயும் சமுதாயத்தை உள்ளடக்கியும் நிகழவேண்டியது’ என்பதைத் தன் எழுத்தின் வழியாக நிறுவியுள்ளார். 'மாற்றுக்கல்வி’ பற்றிய சிந்தனைகளைப் பெற்றோருக்கு மட்டுமல்லாமல் பள்ளி, கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவியருக்கும் புரியவைக்கும் விதத்தில் இவர் புத்தகங்களாக்கியுள்ளார். 'சமுதாயமும் பெற்றோரும் ஆசிரியரும் எவ்வாறெல்லாம் குழந்தைகளை உளவியல் அடிப்படையில் அணுக வேண்டும்?’ என்பது குறித்த இவரின் சிந்தனைகள் முக்கியமானவை. 'கல்விசார்ந்த தகவல்களைப் புனைவுக்குள் எவ்வாறு கொண்டு வருவது?’ என்பதற்குச் சான்றாக இவரின் 'மாதர்’ என்ற புத்தகம் திகழ்கிறது.

படைப்புகள்

நூல்கள்
  • நாளைய தலைமுறை நல்லாயிருக்க ஃப்ரீ அட்வைஸ்
  • அவுட் ஆஃப் சிலபஸ்
  • மாதர்
கட்டுரைகள்
  • சமகாலப் படைப்புகள் குறித்த விமர்சனங்களைத் தொடர்ந்து கட்டுரைகளாக இணையத்தில் எழுதி வருகிறார்.

உசாத்துணை

[[]]


✅Finalised Page