நீ. வின்சென் டிபோல்
- வின்சென்ட் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: வின்சென்ட் (பெயர் பட்டியல்)
நீ. வின்சென் டிபோல் (மே 19, 1924) ஈழத்து நாட்டுக்கூத்து கலைஞர். பல நாட்டுக்கூத்து, இசை நாடகங்களை எழுதியுள்ளார். தன் குரல் வளத்தாலும், பாகவதர் பாணி நடிப்பாலும் அறியப்படுகிறார். மாணவர்கள் இளைஞர்களுக்கு நாட்டுக்கூத்தைப் பழக்கிய அண்ணாவியார்.
வாழ்க்கைக் குறிப்பு
நீ. வின்சென் டிபோல் இலங்கை யாழ்ப்பாணம் நாவாந்துறையில் மே 19, 1924-ல் பிறந்தார். கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர்.
கலை வாழ்க்கை
நீ. வின்சென் டிபோல் ஒன்பது வயதில் 'தீத்தூஸ்' நாடகத்தில் 'கப்ரியேல் தூதன்' பாத்திரத்தில் நடித்தார். பதினாறு வயதில் எம்.கே. தியாகராஜ பாகவதர் நடித்த 'அசோக்குமார்' படக்கதை பாடல்களை நாடகமாக அரங்கேற்றி குணாளன் பாத்திரத்தை நடித்தார். பாகவதர் பாடல்களில் கவரப்பட்டதால் தன் குரல்வளத்தை அவரது பாணியிலேயெ வைத்துக் கொண்டார். பூதத்தான் யோசேப்பு அவர்களின் நவரச கலாமன்றத்தில் அவர் வேண்டுகோளுக்கிணங்க இணைந்து தன் கலைப்பயணத்தைத் தொடங்கினார். யோசேப்பின் நெறியாள்கையில் 'தேவசகாயன்', 'ஜெனோவா', 'சங்கிலியன்', 'கருங்குயில்', 'குன்றக்கோயில்', 'மனம்போல் மாங்கல்யம்', சவேரியர்' போன்ற நாட்டுக்கூத்துக்களில் முக்கியமான வேடம் ஏற்று நடித்தார். இவை மாலை எட்டு மணி முதல் காலை ஆறு மணி வரை நடிக்கும் கூத்துக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இசை நாடகங்களான 'ஞானசுந்தரி', 'புதுவாழ்வு' போன்றவற்றுக்காக தொண்ணூறு முறை மேடையேறியுள்ளார். பாலாலி, மயிலிட்டி, தாளையடி, நாவாந்துறை, சுண்டிக்குழி, அல்லைப்பிட்டி முதலான இடங்களில் கூத்துக்களை அரங்கேற்றி, மாணவர்களை பயிற்றுவித்தார்.
விருதுகள், பாராட்டுக்கள்
- நவரசக் கலாமன்றம் ஏழிசைக் கலைஞன் பட்டம் வழங்கியது
- குழந்தைக்கவிஞர் 'இசை நம்பி' பட்டம் வழங்கினார்
- முல்லைக்கவி, திருமறைக்கலாமன்றம் பொன்னாடை போர்த்தி கெளரவித்தனர்.
எழுதிய நாட்டுக்கூத்து, இசை நாடகங்கள்
- தானியேல்
- யூதாததேயு
- சத்தியவான் சாவித்திரி
- இலங்கையர்கோன்
- பிரான்சீஸ் அசீஸ்
- நாய் குதிரை மனிதன்
- அருளானந்தர்
- வேளாங்கண்ணி
- நீக்கிளஸ்
- புது வாழ்வு
- புனித பேதுரு
- பாலைவனத்தில் சவுல்
- பாவிகளைத் தேடி
- சாம்ராச்சியமன்னன்
- குழந்தை யேசுவின் பிறப்பு
- புனித சின்னப்பர்
- மோசே
அரங்கேற்றிய கூத்துகள்
- தானியேல்
- ஞானசவுந்தரி
- யூதாததேயு
- நீக்கிளஸ்
- வேளாங்கண்ணி
- புது வாழ்வு
- பாவிகளைத் தேடி
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Sep-2023, 04:54:00 IST