under review

நிலாவண்ணன்

From Tamil Wiki
நிலாவண்ணன்

நிலாவண்ணன் ஒரு மலேசிய எழுத்தாளர். இவரது இயற்பெயர் முனுசாமி. (ஏப்ரல் 15, 1941) சிறுகதைகள், வானொலி நாடகங்கள், கட்டுரைகள், நாவல்கள் எழுதியுள்ளார்.

தனி வாழ்க்கை

நிலாவண்ணன் ஏப்ரல் 15, 1941-ல் பேராக் மாநிலத்தில் உள்ள துரோங் எனும் சிற்றூரில் பிறந்தார். தந்தை கன்னியப்பன். தாயார் யசோதா. இவர் குடும்பத்தில் ஒரே பிள்ளை. தந்தை, எல்லம்மாள் என்பவரை மறுமணம் செய்துக்கொண்டார். அவருக்கு 5 குழந்தைகள். அவர் சிறுவனாக இருக்கும்போது தன் குடும்பத்தைப் பின் தொடர்ந்து பல ஊர்களுக்குக் குடிப்பெயர்ந்துள்ளார். செலாமாவில் உள்ள போண்டோக் தஞ்சோங் தோட்டத்தில் முதல் வகுப்பில் சேர்ந்தார். அது நெடுநாட்கள் நீடிக்கவில்லை. குடும்பம் மீண்டும் புலம் பெயர செலாமாட் தோட்டத்திற்கு வந்தடைந்தார். அங்கே 2 ஆண்டுகள் பெற்றோருடன் இரப்பர் தோட்டத்தில் வேலை செய்தார். டி,ஆர்,பி தோட்ட தலைமை ஆசிரியர் திரு.பழனிமுத்து என்பவர் நிலாவண்ணன் கல்விக்கு வித்திட்டவர். அவர் நிலாவண்ணனை 5-ம் வகுப்பில் பதிந்து கொண்டார். நிலாவண்ணன் 1960-ம் ஆண்டில் 7-ம் வகுப்பில் மாநிலத்திலேயே 1-ம் கிரேடில் தேர்ச்சியடைந்தார். 1962-ம் ஆண்டில் செலாமாட் தோட்ட தனியார் பள்ளியில் 65 வெள்ளி சம்பளத்தில் தற்காலிக ஆசிரியராக அமர்ந்தார். 1966-ம் ஆண்டில் தற்காலிக ஆசிரியராக டி.ஆர். பி பள்ளியில் சேர்க்கப்பட்டார். 1968-1971 வரை பேரா மாநிலத்திலுள்ள SITC ஆசிரியர்கள் பயிற்சி கல்லூரியில் கற்று நிரந்தர ஆசிரியர் தகுதி பெற்றார். 1996-ல் தலைமை ஆசிரியராகப் பணி ஓய்வு பெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

ஆனைமுத்துவுடன்
இலக்கிய செயல்பாடுகளில்

1954 முதல் வாசிப்பதை பழக்கமாக்கிகொண்டவர் நிலாவண்ணன். 14 வயதில் இவரது முதல் சிறுகதையான 'கள்ளுச் சனியன்’ சிறுகதை சிங்கை தமிழ் முரசு நாளிதழில் 1955-ம் ஆண்டு பிரசுரம் கண்டது. 1965-ல் தொடங்கி வார மாத இதழ்களில் சிறுகதை கட்டுரைகளை எழுதத் தொடங்கியவர். பின்னர் வானொலி நாடங்களை எழுதினார்.

இலக்கிய இடம்

10,000 டாலர் விருது பெற்றபோது

நிலாவண்ணன் எழுதிய 'அழகான மௌனம்' என்ற நாவல் 2016-ம் ஆண்டு டான் ஶ்ரீசோமா இலக்கிய அறவாரியம் அனைத்துலக ரீதியில் நடத்திய நாவல் போட்டியில் 10,000 அமெரிக்க டாலரை வென்று கவனம் பெற்றது. எனினும் இந்நாவலின் இலக்கிய இடம் குறித்து மலேசிய இலக்கிய விமர்சகர் அ.பாண்டியன் 'கதை களத்திலும் காலத்திலும் வரலாற்று முக்கியத்துவம் இருந்தாலும், இந்நாவல் முன்வைக்கும் அரசியல் நீக்க தன்மையாலும், கலைநுட்பமற்ற, முதிர்ச்சியற்ற எழுத்து முறையாலும் மிக பலகீனமான நாவலாக உருவாகியுள்ளது.’ என்கிறார்.

இலக்கியச் செயல்பாடுகள்

  • இருபது ஆண்டுகள் லாருட் மாத்தாங் மாவட்ட எழுத்தாளர் வாசகர் சங்கத் தலைமைப் பொறுப்பு வகித்தார். (1989-2009)
  • பத்து ஆண்டுகளுக்கு மேலாக பேரா மாநில தமிழ் எழுத்தாளர் சங்க செயலவை உறுப்பினராகப் பணியாற்றினார். (2011-2021)
  • பேராக் மாநில தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முன்னால் செயலவை உறுப்பினர். (2014)
  • 'செடிக்’ பேரா மாநில அளவில் நடத்திய சிறுகதைப் பட்டறை பயிற்சியாளர். (2019)

பரிசும் விருதுகளும்

  • பாரதிதாசன் இலக்கிய விருது (2002)
  • மலேசிய எழுத்தாளர் சங்க கோ.சா இலக்கிய விருது (2011)
  • மலாயா பல்கலைக்கழக சிறுகதை முதல் பரிசு (2013)
  • தேசிய நில நிதிச் சங்சி இலக்கியப்போட்டியில் சிறுகதை முதல் பரிசு
  • மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சிறுகதைக்குப் பவுன் பரிசு (2014)
  • திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம் மலேசியத் தமிழ்மாமணி விருது (2018)
  • டான் ஶ்ரீசோமா இலக்கிய அறவாரியம் அனைத்துலக ரீதியில் நடத்திய நாவல் போட்டியில் அழகான மௌனங்கள் நாவலுக்கு 10,000 அமெரிக்க டாலர் முதல் பரிசு. (2016)

நூல்கள்

சிறுகதைகள்
  • தைப்பிங் மழைச்சாரலிலே - 1994
  • அங்கீகாரம் - 2005
நாவல்கள்
  • அழகான மௌனம் - 2014

உசாத்துணை


✅Finalised Page