under review

நிற்க நிழல் வேண்டும்

From Tamil Wiki
நிற்க நிழல் வேண்டும்

நிற்க நிழல் வேண்டும் (1987-88) வாசந்தி எழுதிய நாவல். இலங்கை இனப்போராட்டத்தின் பின்னணியில் எழுதப்பட்டது. இலங்கைப்பிரச்சினையின் எல்லாத் தரப்புகளையும் நிதானமான பார்வையுடன் தொகுத்து முன்வைக்கும் நாவல் இது.

எழுத்து, வெளியீடு

வாஸந்தி எழுதிய நிற்க நிழல் வேண்டும் நாவல் ஜூலை 1987-க்கும் நவம்பர் 1989-க்கும் இடைப்பட்ட காலத்தின் 28 வாரங்களில் கல்கி வாரப்பத்திரிக்கையில் தொடராக வெளிவந்தது. 1989-ல் நூலாக வெளியிடப்பட்டது.

பின்னணி

வாசந்தி இந்நாவலை எழுதிய பின்னணியை பற்றி எழுதியிருக்கிறார். வாசந்தியின் மௌனப்புயல் நாவல் பஞ்சாப் பிரச்சினையைப் பற்றியது. அதை வாசித்துவிட்டு விடுதலைப்புலி அமைப்பைச் சேர்ந்த வெற்றிச்செல்வன் என்னும் இளைஞர் அவரைச் சந்தித்து இலங்கைப்பிரச்சினை பற்றி எழுதும்படி கோரினார். வாசந்தி இலங்கை கொழும்புக்கும், யாழ்ப்பாணத்திற்கும், ராமேஸ்வரம் மண்டபம் முகாமுக்கும் பயணம் செய்து தரவுகளை திரட்டினார். ஆஸ்திரேலியாவில் சிட்னியில் தங்கியிருந்தபோது ஒரு கடையில் சந்தித்த இலங்கைப்பெண் அவரிடம் புலம்பெயர்ந்த வாழ்க்கையைப் பற்றிச் சொல்லி கண்ணீர் விட்டபோது தன் கதைநாயகியை கண்டுகொண்டார். ஆனால் இந்நாவல் விடுதலைப் புலி அமைப்பின் தலைவர் பிரபாகரனை கோபப்படுத்தியது. 2002-ல் ஒரு இதழாளர் சந்திப்பில் அவர் வாசந்தியைச் சந்திக்க மறுத்துவிட்டார் என்று வாசந்தி பதிவுசெய்திருக்கிறார்.

கதைச்சுருக்கம்

நிற்க நிழல்வேண்டும் நாவல் இலங்கையில் யாழ்ப்பாண மேயர் ஆல்ஃப்ரட் துரையப்பா ஜூலை 27, 1975-ல் விடுதலைப் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட நிகழ்வுடன் தொடங்கி இந்திய அமைதிப்படை ஒப்பந்தத்தை புலிகள் முறித்த நிகழ்வுடன் நிற்கும் அரசியலைச் சொல்கிறது. இந்த கால அளவில் இலங்கைப் போராட்டத்தின் எல்லா தரப்புகளையும் இந்நாவல் பேசுகிறது. ஜெயசீலன் என்னும் சீலன் யாழ்ப்பாணத்தில் இருந்து தப்பி ராமேஸ்வரம் வருமிடத்தில் தொடங்கும் கதை பின்னுக்கும் முன்னுக்குமாகச் சென்று அரசியல், சமூகச்சூழலை முன்வைக்கிறது. ஜெயசீலன், அவன் காதலி சீலியா, பிரபு என்னும் இதழாளன் ஆகியோர் வழியாக இலங்கைப்பிரச்சினையின் முழுமையான சித்திரத்தை அளிக்க முற்படுகிறது.

இலக்கிய இடம்

'இந்நாவல் எல்லார் பக்கத்தையும் காட்டுகிறது. போராளிகள் போராட ஏன் ஆரம்பித்தார்கள், ஆனால் பிற்காலத்தில் எப்படி பரிணமித்தார்கள், சிங்களர்களின் அடக்குமுறை, இந்தியாவின் அரசியல் விளையாட்டுகள், அகதிகள், இலங்கையிலிருந்து கள்ளத் தோணி வழியாக தப்பிப்பவர்கள், ஏன் தமிழர்களின் மீது அடக்குமுறை சரியே என்று வாதிடும் சிங்களர்களைக் கூட விடவில்லை' என விமர்சகர் ஆர்வி (சிலிகான் ஷெல்ஃப்) இந்நாவலை மதிப்பிடுகிறார். இலங்கை இனப்பிரச்சினை உருவாகி அது உள்நாட்டுப்போராக மாறி 2009-ல் முடிவுக்குவந்துவிட்டபின்னரும்கூட முழுமையாக எல்லா தரப்பையும் சொல்லும் நாவல்கள் எழுதப்படவில்லை. இலங்கைப்போராளிக் குழுக்களின் ஏதேனும் ஒன்றின் குரலை உணர்ச்சிகரமாக ஒலிப்பவையாகவோ, மிகைநாடகத்துடன் முன்வைப்பவையாகவோதான் நாவல்கள் எழுதப்பட்டுள்ளன. எந்நாவலிலும் சிங்களத் தரப்பு எழுதப்படவில்லை. அவ்வகையில் வாசந்தியின் நாவல் விதிவிலக்காக திகழ்கிறது. பொதுவான பார்வையில் எல்லா தரப்பையும் முன்வைப்பதனாலேயே இந்நாவல் முக்கியமானதாக ஆகிறது.

உசாத்துணை

வாசந்தியின் நிற்கநிழல்வேண்டும். சிலிக்கான் ஷெல்ஃப்


✅Finalised Page