under review

நா.பொன்னையா

From Tamil Wiki
நா.பொன்னையா

நா.பொன்னையா (ஜூன் 22, 1892 - மார்ச் 30, 1951): இலங்கைத் தமிழ் இதழான ஈழகேசரியின் நிறுவனர், ஆசிரியர். இலங்கை இதழாளர்களில் முன்னோடி.

பிறப்பு, கல்வி

நா. பொன்னையா யாழ்ப்பாணம், குரும்பசிட்டியில் ப. நாகமுத்தர், தெய்வானைப் பிள்ளை ஆகியோருக்கு ஜூன் 22, 1892-ல் நான்காவது மகவாகப் பிறந்தார். இவருடைய தந்தைவழிப் பாட்டனார் பரமநாதர் திண்ணைப்பள்ளிக்கூடத்துச் சட்டம்பியார் (ஆசிரியர்). பொன்னையா அவரது ஊரில் ஏழாலையைச் சேர்ந்த தேவராசன்-மேரி என்பவர்கள் அமெரிக்க மிஷன் உதவிபெற்று நடத்திவந்த மேரி பாடசாலையில் நான்காம் வகுப்புவரை படித்தார். 1900-ம் ஆண்டில் பரமானந்த ஆசிரியர் என்பவர் தோற்றுவித்த மகாதேவ வித்தியாசாலையில் ஐந்தாம் வகுப்பை படித்தார். மேலே படிக்க கல்விச்சாலை இல்லாமையால் வேளாண்மைத் தொழிலில் இறங்கினார். பின்னர் மகாவித்துவான் சி. கணேசையரிடம் தமிழ் கற்று யாழ்ப்பாணம் ஆரிய-திராவிட பாஷாபிவிருத்திச் சங்கம் நடத்திய பிரதேச பண்டிதர் சோதனையில் தேர்ச்சி பெற்றார். பின்னர் கோப்பாய் அரசினர் ஆசிரிய கலாசாரப் பிரவேச சோதனையிலும் தேர்ச்சி அடைந்தார். அச்சுத்தொழிலில் ஈடுபட்டமையால் ஆசிரியர் கல்லூரியில் பயில இயலவில்லை.

தனிவாழ்க்கை

பொன்னையா சுதேச நாட்டியம் எனும் பத்திரிகையை நடத்தி வந்த ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளையின் அச்சுக்கூடத்தில் அச்சுத் தொழிலைக் கற்றார். பின்னர் குரும்பசிட்டியைச் சேர்ந்த நல்லையா என்பவர் யாழ்ப்பாண நகரில் நடத்தி வந்த தேசாபிமானி பத்திரிகை நிறுவனத்தில் பணியாற்றினார். 1910-ம் ஆண்டு, கல்வியங்காட்டைச் சேர்ந்த திரு. அரியகுட்டி அவர்கள் கழுத்துறை என்னும் ஊரில் நடத்தி வந்த வியாபார நிலையத்தில் சேர்ந்து சிங்கள மொழியில் வல்லுநராகி வேலையில் முன்னேறி அந்த ஸ்தாபனத்தின் மனேஜராகக் கடமையாற்றினர். நான்கு வருட காலம் அந்த வியாபார நிலையத்தில் உழைத்த திரு. பொன்னையா அவர்கள் முதலாவது மகாயுத்தம் தொடங்கியதும் தாமே ஒரு கடையை உருவாக்கினார்.

திரு. நா. பொன்னையா அவர்கள் 1918-ம் ஆண்டு ஐப்பசி மாதம் தமது சொந்த மாமனாகிய திரு. கதிரிப்பிள்ளை அவர்களின்மகள் மீனாட்சியம்மாளை மணந்தார்.இவர்களுக்கு நான்கு பிள்ளைகள். மூவர் சிறு வயதிலேயே இறந்து விட்டனர். மகள் புனிதவதி முன்னாள் சட்டமா அதிபர் சிவா பசுபதியின் மனைவி. இவர் சிட்னியில் வசித்து வந்தார்.

பொன்னையா தமது வியாபாரத்தை உறவினரான இரு பையன்களிடம் விட்டுவிட்டு ஊரில் இருந்து சுருட்டுத்தொழிற்சாலை ஒன்றை ஆரம்பித்து நடத்தினார். நவகுமார் என்னும் முதல் குழந்தை பிறந்தது. ஆனால் பையன்களால் வணிகம் அழிந்தது. வறுமைநிலையை அடைந்த பொன்னையா 1918-ல் ரங்கூன், மலாயா ஆகிய இடங்களுக்குச் சென்றார். 1920-ல் கிழக்கு ரங்கூன் 92-ம் வீதியில் இருந்து வெளிவந்த சுதேச மித்திரன் பத்திரிகையின் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். சென்னையில் சில காலம் வசித்து கதிரேசபிள்ளை என்பவருடன் சேர்ந்து தந்திச் சுருக்கெழுத்துத் திரட்டு நூலை ஆக்குவதில் முக்கிய பங்காற்றினார். 1925-ல் இரங்கூனில் இருந்து இலங்கை திரும்பி, தெல்லிப்பழையில் யேசுதாசன் என்பவரின் அமெரிக்க மிஷன் அச்சியந்திரசாலையில் பணியாற்றினார். அக்காலகட்டத்தில் அமெரிக்க மிஷன் பாடசாலையில் கைத்தொழில் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

பதிப்பு, அச்சுத்தொழில்

பொன்னையா ஆகஸ்ட் 1926-ல் சுன்னாகத்தில் தனலக்குமி புத்தகசாலை என்னும் புத்தகசாலையை ஆரம்பித்தார். இதனால் அவரால் ஆசிரிய கலாசாலையில் சேர்ந்து படிக்க முடியவில்லை. தென்னிந்திய திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்ட நூல்களை முதன்மையாக விற்றுவந்தார்.

1929-ல் திருமகள் அழுத்தகம் என்ற பெயரில் அச்சுக்கூடத்தையும் ஆரம்பித்தார். திருமகள் அச்சகம் வழியாக 1939-ல் தொல்காப்பியத்தின் எழுத்ததிகாரத்தை சி. கணேசையரின் உரை விளக்கக் குறிப்புடன் சி. வை. தாமோதரம்பிள்ளையின் நினைவாகப் பதிப்பித்து வெளியிட்டார். தொடர்ந்து ஏனைய அதிகாரங்களையும் வெளியிட்டார்.சிவசம்பு புலவர் பிரபந்தத் திரட்டு, வசந்தன் கவித்திரட்டு, ஈழநாட்டுத் தமிழ் புலவர் சரிதம், நாவலர் நினைவு மலர், கல்வி மலர் ஆகியவை முக்கியமான வெளியீடுகள். சி.கணேசையர் அவர்களைக்கொண்டு தொல்காப்பிய பாடவேறுபாடு ஒப்பீட்டுக் கட்டுரைகளை எழுதவைத்து நா.பொன்னையா வெளியிட்டார். தொல்காப்பிய ஆய்வில் அவை பெரிய திறப்புகளை அளித்தன.

உலகப்போர் மூண்டபோது தமிழகத்தில் இருந்து பாடநூல்கள் இலங்கைக்குச் செல்லமுடியாத நிலை உருவானது. பொன்னையா அப்போது வெளியிட்ட பாடநூல்கள் வழியாக இலங்கைக்கே உரிய பாடநூல் மரபு உருவானது. ஐந்து வருடங்களில் ஐம்பதுக்கு மேற்ப்பட்ட புத்தகங்களை வெளியிட்டார்.

இதழியல்

ஜூன் 1930, 22-ல் சிவயோக சுவாமிகளின் ஆசியுடன் ஈழகேசரி வாரப் பத்திரிகையை ஆரம்பித்தார். 1935 முதல் ஈழகேசரியின் ஆண்டு மலர்களை வெளியிட்டு வந்தார். ஈழகேசரி இலங்கைத் தமிழர்களின் இலக்கியப் பண்பாட்டு வளர்ச்சியில் பெரும்பங்காற்றியது.

1933-ல் Ceylon Patriot என்ற ஆங்கில வாரப்பத்திரிகையை எஸ். சி. சிதம்பரநாதன் என்பவரை ஆசிரியராகக் கொண்டு நடத்தி வந்தார்.

1941-ம் ஆண்டில் Kesari என்ற ஆங்கில வார இதழை ஹன்டி பேரின்பநாயகம் என்பவரை ஆசிரியராகக் கொண்டு சில ஆண்டுகள் நடத்தி வந்தார்.

சமூகப் பணிகள்

யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்ட யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ் அமைப்பில் இணைந்து இளைஞர் மாநாடுகளில் பங்காற்றினார். மலையாளப் புகையிலை ஐக்கிய வியாபாரச் சங்கம், கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றில் உறுப்பினராகச் சேர்ந்து பங்களித்தார். 1936 முதல் கிராம சங்கத்தில் உறுப்பினராக இருந்து, பின்னர் 1946 முதல் இறக்கும் வரை மயிலிட்டி கிராமச் சங்கத்தில் தலைவராக இருந்தார்.

இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் உணவுப் பற்றாக்குறை நிலவிய போது 1941-ல் வயாவிளானில் 12 ஏக்கர் நிலத்தை வாங்கி பெருமளவு உணவுப் பொருள் உற்பத்தி செய்தார். அவ்விடத்தில் கைத்தொழில் பாடசாலை ஒன்றை நிறுவ முயற்சிகளை மேற்கொண்ட போது, உள்ளூர் பொதுமக்கள், மற்றும் அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில் அவ்விடத்தை வயாவிளான் மத்திய கல்லூரியின் பயன்பாட்டுக்காகக் கையளித்து பெருமளவு நன்கொடையும் அளித்தார். குரும்பசிட்டியில் சன்மார்க்க சபை என்னும் பெயரில் ஒரு சங்கத்தை 1934-ம் ஆண்டில் நிறுவினார்.

விருதுகள், பட்டங்கள்

1950-ம் ஆண்டில் அரசாங்கம் இவரை சமாதான நீதிபதியாக்கிக் கௌரவித்தது.

மறைவு

நா. பொன்னையா மானிப்பாய் கிறீன் மருத்துவமனையில் மார்ச் 30, 1951-ல் அதிகாலை 4:30 மணிக்குக் காலமானார்.

உசாத்துணை


✅Finalised Page