under review

நாயகம் எங்கள் தாயகம்

From Tamil Wiki

நாயகம் எங்கள் தாயகம் ஓர் இஸ்லாமியக் காப்பிய நூல். நபிபெருமானின் வாழ்க்கை வரலாற்றைப் புதுக்கவிதையில் கூறும் இந்நூலை எழுதியவர் வலம்புரிஜான். இஸ்லாமியர் அல்லாத ஒருவர் எழுதிய குறிப்பிடத்தகுந்த இஸ்லாமியக் காப்பியமாக இந்நூல் கருதப்படுகிறது.

பதிப்பு, வெளியீடு

நாயகம் எங்கள் தாயகம் நூலின் முதல் பதிப்பு, செப்டம்பர், 1995-ல் வெளியானது. அதன் மூன்றாம் பதிப்பை, சென்னை கோபாலபுரத்தில் உள்ள ஆசாத் பதிப்பகம், 1999-ல், அச்சிட்டு வெளியிட்டது.

ஆசிரியர்

நாயகம் எங்கள் தாயகம் நூலை எழுதியவர் வலம்புரிஜான்.

காப்பியத்தின் கதை

நாயகம் எங்கள் தாயகம் காப்பிய நூலில், நபிகள் பெருமானின் பிறப்பு முதல் அவரது இளமைப் பருவம், வளர்ப்பு தொடங்கி மக்கள் நலன் குறித்த அவரது சிந்தனைகள், பயணங்கள், இறைவனின் ஆணை, நபிகள் நிகழ்த்திய அற்புதங்கள், அறிவுரைகள், நபிகளின் இறுதிக் காலம் வரை விவரிக்கப்படுகிறது.

நூல் அமைப்பு

நாயகம் எங்கள் தாயகம் நூல் புதுக்கவிதையில் இயற்றப்பட்டுள்ளது. இந்நூலில், பின்வரும் 13 தலைப்புகளில் நபிகளின் வாழ்க்கை விவரிக்கப்பட்டுள்ளது.

  • கடலுக்குக் கிளிஞ்சலின் கடிதம்
  • தன்னைப் பிழிந்த தவம்
  • அதோ அந்தப் பாலைவனம்
  • அன்றைய அரேபியா
  • பெருமான் பிறந்த இடம்
  • வள்ளல் வளர்ந்தார்
  • அன்னை மடியில் அண்ணல்
  • இளைஞரானார் இனியவர் முகம்மது
  • உத்தமர் கண்ட உடன்பாடு
  • நபிகளானார் நாயகம்
  • அண்ணலின் அற்புதம்
  • இஸ்லாத்திற்கா வரும் இறுதி?
  • திருமுகங்களின் திருவிழா!

பாடல் நடை

முகம்மது நபி செய்த அதிசயம்

இனியவர் முகம்மது
இமயம் போல வளரும் நாளில்
அதிசயம் ஒன்று
அங்கே நடந்தது ...
ஆண்டவன் கருணை
அன்று நிகழ்ந்தது ...
மக்கமா நகரம்
மழை இல்லாமல் ...
சுக்கைப்போல் உலர்ந்து வெந்தது !
பொக்கை வாய்க்குள்ளும்
உமிழ்நீர் சுரக்க
பொழுது பார்த்தது ...
அப்படி வறுமை !
அபுதாலீஃப் உள்ளத்துள்ளே
ஊற்று விழித்தது ...
முகம்மதுவை அவர்
அழைத்துப்போனார் ...
மழைக்காய் வேண்டு
மகனே என்றார் ...
இறைவனை வேண்டினார்
முகம்மது அன்று ...
தென்னை இலையாய்
வானம் கிழிந்தது ;
தெருவில் எங்கும்
படகுகள் மிதந்தன ;
மாமழை வந்தது !
மணல்வெளி மறைந்தது
மாநபிக்காக
மறையவன் இரங்கினார்

விந்தை மனிதரின் விண்ணேற்றம்

வானவர் வந்தார்
சுவன்ன தேசத்தின்
சுந்தர விலங்கொன்று வந்தது.
நபிகள் அதில்
நடுநாயகமாக
அமர்த்தப்பட்டார்.
வானவர் காட்டிய இடங்களில்
வழிபாடு நடத்தினார்.
மூசாவிடம்
இறைவன்
முழங்கிய தோரிடம்.
ஈசா நபிகள்
பிறந்த பேரிடம்.
மதீனம் ஒன்று.
மற்றது வேறொன்று.
வான மண்டலத்தில்
ஆதம் நபி முதல்
ஆபிரகாம் வரையிலும்
அந்த நபிக்கு
சலாம் வைத்தார்கள்
நபிகளும் வாழ்த்தினார்!
அல்லாவின்
பேரொளிப் பிழம்பினை
அண்ணல் பார்த்தார்.
சொர்க்கமும் நரகமும்
கண்களில் பட்டன!

வேத நாயகனை
விளங்கும் மெய்ப்பொருளை
ஆதிமுதலை
ஆனந்த வாரிதியை
மனம், மொழி, மெய் கடந்த
மாயப் பெருவெளியை
நபிகள் பெருமான்
உரோமக்கால்கள்
ஒவ்வொன்றிலும்
ஊற்றிக்கொண்டார்!
அல்லாவின்
முன்னிலையில்
அய்ந்து வேளைத் தொழுகை
அமலாயிற்று!

மதிப்பீடு

நாயகம் எங்கள் தாயகம், இஸ்லாமியர் அல்லாத ஒருவர் எழுதிய குறிப்பிடத்தகுந்த இஸ்லாமியக் காப்பியம். காப்பிய நூல்களில் இந்நூல் வசன கவிதை சார்ந்த ஒரு புதுமையான இலக்கியப் படைப்பாக அமைந்துள்ளது. நபிகளின் வரலாற்றைப் புதுக்கவிதையில் கூறும் முதல் நூலாக, ‘வலம்புரி ஜான் எழுதிய நாயகம் எங்கள் தாயகம்’ நூல் அறியப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page