under review

நாணயம் விகடன்

From Tamil Wiki
நாணயம் விகடன் இதழ்

நாணயம் விகடன் (2005), ஆனந்த விகடன் குழுமத்திலிருந்து வெளிவந்த மாதம் இருமுறை இதழ். தமிழில், எளிய நடையில் வணிகச் செய்திகளைத் தருவதையும், வாசகர்களின் பொருளாதார வாழ்க்கையை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இவ்விதழ் வெளிவந்தது.

வெளியீடு

ஜூனியர் விகடன், அவள் விகடன், சுட்டி விகடன், சக்தி விகடன் போன்ற பல இதழ்களை வெளியிட்ட ஆனந்தவிகடன் குழுமம், எளிய நடையில் வணிகச் செய்திகளைத் தர வேண்டும்; வாசகர்களின் பொருளாதார வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், நாணயம் விகடன் மாதம் இருமுறை இதழை டிசம்பர், 2005-ல் தொடங்கியது. எஸ். பாலசுப்பிரமணியன் இதன் ஆசிரியராகச் செயல்பட்டார்.

தொடக்க காலத்தில் 80 பக்கங்களுடன் 15 ரூபாய் விலையில் வெளிவந்தது. காலமாற்றத்திற்கேற்ப இதழின் விலை உயர்ந்தது.

நாணயம் விகடன்: டிசம்பர் 2023 இதழ்

உள்ளடக்கம்

’பணத்தைப் பெருக்கும் தாரக மந்திரம்’ என்ற முகப்பு வாசகம் இதழின் அட்டையில் இடம்பெற்றது. பொருளாதாரம், பங்கு வர்த்தகம், வணிகம், தொழில் முதலீடுகள் சார்ந்த செய்திகளை எளிய தமிழில் நாணயம் விகடன் வெளியிட்டது. ஆசிரியர் பக்கம், நாணயம் ஸ்பெஷல், பங்குச் சந்தை, சேமிப்பு, தொடர்கள், கேள்வி-பதில் போன்ற பகுதிகள் இவ்விதழில் வெளியாகின. 'வருமானத்தைப் பெருக்க என்ன செய்யலாம்?'சம்பாத்தியத்தைக் கணக்கிட்டு செலவு செய்வது எப்படி? எந்தச் 'செலவெல்லாம் முதலீடு', 'எதுவெல்லாம் வெறும் செலவு, வீண் செலவு?' ,'பணத்தை எங்கே, எப்படி முதலீடு செய்வது?', 'சேமிப்புக்கும் முதலீட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? '- என்பது போன்ற பல தலைப்புகளில் கட்டுரைகள் வெளியாகின.

வாசகர்கள், தங்கள் பொருளாதார வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் பல தொடர்களை பொருளாதார வல்லுநர்கள் எழுதினர். சிக்கனமாக இருப்பது எப்படி?, கையிலிருக்கும் பணத்தை வைத்துச் செல்வம் சேர்ப்பது எப்படி? பணத்தை எப்படி, எதில், புத்திசாலித்தனமாக முதலீடு செய்வது, பணத்தை எந்த வகையில் எப்படிப் பெருக்குவது, எதிர்காலச் சேமிப்புக்கு எது உதவும்- என்றெல்லாம் பல ஆலோசனைக் கட்டுரைகள், தொடர்கள் நாணயம் விகடனில் வெளியாகின. தொழில் முனைவோர்களின் நேர்காணல்கள், வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரைகள், சாதனையாளர்களின் சாதனைப் பக்கங்கள், வர்த்தக நிறுவனங்களின் வரலாறு போன்ற பல செய்திகளை நாணயம் விகடன் இதழ் வெளியிட்டது. வீடு, நிலம் வாங்கும்போது கவனிக்க வேண்டிய செய்திகள், உலகப் பொருளாதாரத் தகவல்கள், தொழிலதிபர்களின் ஆலோசனைகள் இடம்பெற்றன.

பொருளாதார வல்லுர்களைக் கொண்டு பங்கு வணிகம், முதலீடு சார்ந்த பல ஆலோசனைக் கூட்டங்களை நாணயம் விகடன் இதழ் ஒருங்கிணைத்தது. ஆன் லைன் வர்த்தகம், ஓய்வூதிய முதலீடு பற்றிய கட்டுரைகள், சுய மேம்பாட்டுப் பயிற்சிக் கட்டுரைகள், தொடர்கள் இதழில் வெளியாகின. இணைப்பிதழ்களையும் நாணயம் விகடன் வெளியிட்டது.

தொடர்கள்

சோம. வள்ளியப்பன், நாகப்பன், எஸ்.எல்.வி. மூர்த்தி, அ. தில்லைராஜன் போன்றோரின் பொருளாதாரம் சார்ந்த கட்டுரைத் தொடர்கள் வெளியாகி வாசக வரவேற்பைப் பெற்றன.

மதிப்பீடு

நாணயம் விகடன், நுணுக்கமான வியாபார உத்திகளை மிக எளிமையான தமிழில் விளக்கிக் கூறியது. பணத்தை எங்கே, எப்படி முதலீடு செய்வது என்று வழிகாட்டியது. வாசகர்களின் எதிர்கால வளமான வாழ்வுக்கு ஆலோசனை கூறும் இதழாக நாணயம் விகடன் இதழ் மதிப்பிடப்ப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page