under review

நாகூர்ப் புகைரத வழிச் சிங்கார ஒயிற் சிந்து

From Tamil Wiki
நாகூர்ப் புகைரத வழிச் சிங்கார ஒயிற் சிந்து

நாகூர்ப் புகைரத வழிச் சிங்கார ஒயிற் சிந்து (நூல் தோற்றம்: 1902; பதிப்பு: 1985) சிந்து இலக்கிய நூல்களுள் ஒன்று. இதனை இயற்றியவர், அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த கா. செய்யது முஹம்மது அண்ணாவியார். இந்நூலை, 1985-ல், ஹாஜி கே.எஸ். சையிது முஹம்மது அண்ணாவியார் பதிப்பித்தார். 294 வரிகளாலாகிய 66 பாடல்களைக் கொண்ட இந்நூல், நாகூருக்கும் அதிராம்பட்டினத்திற்கும் இடையில் புகை வண்டிப் பாதை போடப்பட்ட காலத்தில் (1899) பாடப்பெற்றது.

பிரசுரம், வெளியீடு

நாகூர்ப் புகைரத வழிச் சிங்கார ஒயிற் சிந்து நூல், 1899-ல், நாகூருக்கும் அதிராம்பட்டினத்திற்கும் இடையில் புகை வண்டிப் பாதை போடப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டு, 1902-ல், இஸ்லாமியப் புலவர் குலாம் காதிறு நாவலர் முன்னிலையில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. இதனை இயற்றியவர், கா. செய்யது முஹம்மது அண்ணாவியார். இந்நூலை, ஹாஜி கே.எஸ். சையிது முஹம்மது அண்ணாவியார் பதிப்பித்தார். புலவர் அ. அஹ்மத் பஷீர், சிங்கைப் பதிப்பகம் மூலம் அச்சிட்டு 1985-ல் வெளியிட்டார்.

ஆசிரியர் குறிப்பு

கா. செய்யது முஹம்மது அண்ணாவியார், 1857-ல், நவரத்தின கவி காதிர் முஹிய்யித்தீன் அண்ணாவியாருக்குப் பிறந்தார். இவர்கள் முன்னோடிகள் அனைவரும் தமிழ்ப் புலவர்கள். முஹம்மது அண்ணாவியார், தந்தையிடமிருந்த்து தமிழ் இலக்கண, இலக்கியங்களை முறையாகக் கற்றார். அதிராம்பட்டினத்தில் வாழ்ந்த இவர், மாணவர்களுக்குத் தமிழ் கற்பித்தார். தமிழ், அரபு, சம்ஸ்கிருதம் போன்ற பல மொழிகள் அறிந்தவர். 'சீட்டுக் கவிதை', 'நபியுல்லாஹ் பேரில் கீர்த்தனங்கள்', 'நாகூர்ப் புகைரத வழிச் சிங்கார ஒயிற் சிந்து' போன்றவை இவர் இயற்றிய நூல்கள்.

நூல் அமைப்பு

நாகூர்ப் புகைரத வழிச் சிங்கார ஒயிற் சிந்து நூலில் 294 வரிகள் கொண்ட 66 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. நூலின் முதன்மையாகக் காப்புச் செய்யுள் இடம் பெற்றுள்ளது. தலைவன், நாகூர் ஷாஹுல் ஹமீது ஒலி அவர்களுடைய ரவ்லா ஷரீபைக் கண்டு நேர்ந்து வர நாயகியை நகை அணியக் கூறுவதிலிருந்து நூல் தொடங்குகிறது. இறுதியில் ஷாஹுல் ஹமீது ஆண்டகை, யூசுப் நாயகம் ஆகியோரை வழிபாடு செய்து முடித்து ஊர் திரும்ப முனைவதுடன் நூல் முடிவடைகிறது .

நூலில் பேச்சு வழக்குச் சொற்கள், ஆங்கிலச் சொற்களின் நேரடித் தமிழ்ச் சொற்கள் இடம் பெற்றுள்ளன. மைடியர், கிளிட்டு, பஸ்டு கிளாஸ், பாக்டரி, ஸ்டேஷன் மாஸ்டர், போலீஸ், ஜங்ஷன், ஷாப், லேடி, ஓபன் கேரேஜ் போன்ற சொற்கள் அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளன. அரபுச் சொற்கள், பிறமொழிச் சொற்கள், சம்ஸ்ருதச் சொற்கள், வட்டார வழக்குச் சொற்கள் இடம் பெற்றுள்ளன. பல்வேறு உவமைகள் நூலில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

நூல் மூலம் அறிய வரும் செய்திகள்

“மேனகை ரம்பைமின் மானே - நாகை
மாநகர் பார்ப்போம் வா தேனே ”

- என்று நாகூர்ப் புகைரத வழிச் சிங்கார ஒயிற் சிந்து நூல் தொடங்குகிறது. இச்சிந்து நூலில், தலைவி, தலைவனுடன் தன் இல்லத்திலிருந்து புகைவண்டி நிலையத்திற்குச் செல்லும் வழியில் காணும் அதிவீரராமன் பட்டினத்துச் சிறப்புகள், அதன் கோட்டைகள், மாளிகை, பள்ளிகள், குளங்கள், அன்னதானச் சத்திரங்கள் பற்றிய செய்திகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

பெண்கள் அணியும் பல்வேறு ஆபரணங்கள் பற்றிய குறிப்புகள் நூலில் இடம் பெற்றுள்ளன. அவற்றில் பல இன்றும் வழக்கத்தில் உள்ளன.

அதிவீரராமன் பட்டினத்திலிருந்து நாகூரை அடையும் புகைவண்டிப் பாதை வழியில் உள்ள ஊர்களான தம்பிக்கோட்டை, முத்துப்பேட்டை தொடங்கி திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நாகப்பட்டினம், சிக்கல் போன்ற பல ஊர்களைப் பற்றி, அவற்றின் சிறப்புக்களைப் பற்றி, வழியில் உள்ள ஆறுகள் பற்றிய தகவல்கள் நூலில் இடம்பெற்றுள்ளன.

நாகூரின் சிறப்பு, தெருக்கள், கடைகள் அமைந்திருக்கும் விதம், தர்காவின் அமைப்பு போன்ற செய்திகள் இடம்பெற்றுள்ளன.

பல்வேறு பறவைகள், வர்ண விளக்குகள், இசைக்கருவிகள், பழங்கள், வாசனைப் பொருள்கள் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன.

தஞ்சை மன்னர் கட்டி வைத்த பெரிய மினாரா உள்ளிட்ட ஐந்து மினாராக்கள், தங்கக் கலசங்கள், நடு மண்டபத்தில் உள்ள ரசக் கண்ணாடிகள், ஜமாத்துல் ஆகிர் பிறை 1-ல் நடைபெறும் கொடியேற்றம் , ஆண்டகையின் மறைவு நாளான பிறை 10-ல் நிகழும் சந்தனக்கூடு விழா, நாகூர் ஆண்டகை உயிர் பிரிந்த பின் குளிப்பாட்டப் பெற்ற யாஹுசைன் பள்ளி, தொழுகை நடந்த பீர் மண்டபம், அடக்கம் செய்யப்பெற்ற ரவ்லா ஷரீப் போன்ற பல வரலாற்றுக் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

கந்தூரி விழா எப்படி நடக்கிறது, என்னென்ன வேடிக்கைகள் நடக்கின்றன, எத்தனை வகையான பழ வகைகள் முதல் உணவு வகைகள் வரை கிடைக்கின்றன என்பது பற்றிய செய்திகள் நூலில் உள்ளன.

பல்வேறு வாண வேடிக்கைகளை, சீனாப்பெட்டி வாணம், ஜல வாணம், பூதகண வாணம், பீரங்கி வாணம் போன்ற பல வாணங்களை மக்கள் விருப்பத்துடன் பயன்படுத்தியது பற்றிய குறிப்புகள் உள்ளன.

அக்கால இஸ்லாமியர்களின் பழக்க வழக்கங்கள் பற்றிய குறிப்புகளை - வெளியூர் செல்லும் முன் பெரியவர்களைச் சந்திப்பது, அவர்கள் பங்கில் துஆ செய்வது, உள்ளூரில் அடங்கியிருக்கும் பெரியவர்களின் அடக்க ஸ்தலங்களில் பாத்திஹா ஓதிவிட்டுப் புறப்படுவது - அறிய முடிகிறது.

பாடல்கள்

ரயிலின் தோற்றம்

கானுறும் அட்டையின் கால்கள் எனவுருள்
ககுநந்தூர்தல் இஞ்சீனே-கொடுங்
கனல் மலிந்திடும் பாலையின் கொள்ளிவாய்க்
கணத்தின் மூச்சி தோ தானே-கோடை
வான் இடிச் சத்தம் போல் குமுறுதலைக் கண்டு
மயங்காதே மைடியர் மானே-சித்ர
வர்ணக் கிளிட்டிட்ட தங்க மயம் ரெயில்
வண்டியில் ஏறடி தேனே

வண்டி செல்லும் வழியில் காணும் நிறுத்தங்கள்

பஞ்சவர் ணக்கிளி கொஞ்சு மனோபவி
பாக்டெரி யென்று நீ தேறு-தம்பி
பாக்கியவான் கோட்டை ஸ்டேஷன் கடந்து
பறக்குது பிரப்பன் ஆறு-மாடு
செஞ்சுடர் மேவிய முத்து நகர் ஸ்டேஷன்
தெரித லின்புகழ்கூறு-நம்மள்
செய்கு தாவூதொலி யாண்டகை பாதத்தைத்
தெரிசித்து வண்டி யேறு-பெண்ணே
அஞ்சிடாதே கோரை யாறு கடந்தோமே
அச்சுதன் தில்லை விளாகத்தின்-விந்தமே
பஞ்சமுறாப் பாண்டி ஸ்டேஷனும் வந்தோமே

நாகப்பட்டினக் கடை வீதிச் சிறப்பு

மின்னொளி வளையல் சீப்புகள் அஞ்சனம்
வெண்சரம் ஐந்தறைப் பெட்டி-நாடா
மிக்குப் பலமணம் பட்டுக் கயிற்குஞ்சம்
விற்கும் பொற்சரிகைப் பட்டி-சாப்பில்
மன்னி இலங்கிடும் கண்ணாடி பீரோக்கள்
மணிக்கெடி யாரங் கெட்டி-துரை
மார்கள் லேடியுடன் ஓபன் கேரேஜினில்
மணிலா மட்டங்கள் கட்டி-வரும்
என்ன விநோதம் பைஸ்க்கோல்ட்ராமா சர்க்கஸும்
இந்த்ர சபாநடனம் காவற் போலீசும்
இன்னம் வெகுபல வேடிக்கையும் பிரேசும்
இனமும் பல
ஜனமும் வரும்
முனமே மயில்
அனமே நட

===== நாகூரின் சிறப்பு =====\

பாரிசு மக்கா மதிநா றூம் மிசுறு
பைத்துல் முக்கத்திசு வாசி- சீனா
பங்காளங் கொச்சி மலையாள முடில்லி
பம்பாய் மைசூர் மதராசி-என்னும்
ஊர்பல வாசிகள் வந்து ஹத்தம் மௌ
லூதுக ளோதியுங் காசி- இதோ
உண்டியல் போடுங் குடங்கள் நிறைந்தங்கு
ஓய்வில்லை பார்மக ராசி-ஒலி
வாரிசு செய்யிது செய்குமார் சடையர்
வாணருந் தாயிராக் கூட்டமும் மிடியர்
சாரிசன் வில்லை வெள்ளித் தடிக் காரியர்
சனமுந் தரி
சனமும் விமோ
சனமும் பெறத்
தினமும் வரும்

மதிப்பீடு

நாகூர்ப் புகைரத வழிச் சிங்கார ஒயிற் சிந்து நூல், சொற்சுவையும், பொருட்சுவையும் மிக்க நூல். வழிநடைச் சிந்து நூலாக மட்டுமல்லாமல் இஸ்லாமிய மக்களின் வாழ்வியல், பண்பாடு, கலாசாரத்தை, பழக்கவழக்கங்களை, நம்பிக்கைகளை விரிவாகப் பதிவு செய்துள்ளது. புகைவண்டி வழிநடைச் சிந்து நூல்களில், செய்யிது முகம்மது அண்ணாவியார் இயற்றிய, நாகூர்ப் புகைரத வழிச் சிங்கார ஒயிற் சிந்து நூலே, முதல் சிந்து நூலாகக் கருதப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page