under review

நவநீதேஸ்வரர் கோயில்

From Tamil Wiki
நவநீதேஸ்வரர் கோயில்
நவநீதேஸ்வரர் கோயில்

நவநீதேஸ்வரர் கோயில் நாகப்பட்டினம் சிக்கலில் உள்ள தேவாரப் பாடல்பெற்ற தலம். இக்கோயில் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ளது.

இடம்

நவநீதேஸ்வரர் கோயில் நாகப்பட்டினத்திலிருந்து திருவாரூர் செல்லும் வழித்தடத்தில் ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சிக்கல் ரயில் நிலையத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

வரலாறு

நவநீதேஸ்வரர் கோயில் முசுகுந்த சோழ மன்னனால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த இடத்தின் வரலாற்றுப் பெயர் மல்லிகாரண்யம். சிக்கல், எண்கண், எட்டுக்குடி ஆகிய இடங்களில் உள்ள முருகன் சிலைகள் ஒரே சிற்பியால் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. மன்னன் கோச்செங்கட் சோழனால் கட்டப்பட்ட மாடக் கோயில்களில் ஒன்றாக இந்தக் கோயில் கருதப்படுகிறது. மன்னன் கோச்செங்கட் சோழன் சுமார் எழுபது மாடக்கோயில்களைக் கட்டியதாக நம்பப்படுகிறது. யானையால் எளிதில் அணுக முடியாது என்பது மாடக்கோயில்களின் தனிச்சிறப்பு.

கல்வெட்டு

இக்கோயிலில் ஜடாவர்மன் வீரபாண்டியன், சதாசிவ மகாராயர், வீரபூபதி அச்சுததேவ மகாராயர் ஆகிய மன்னர்கள் காலத்தைச் சேர்ந்த எட்டு கல்வெட்டுகள் உள்ளன.

நவநீதேஸ்வரர் கோயில் சிற்பங்கள்

தொன்மம்

மகாவிஷ்ணு, முருகன், நாரதர், அகஸ்தியர், வசிஷ்டர், விஸ்வாமித்திரர், கௌதமர், காத்யாயனர், சோழ மன்னன் முச்சுகுந்த சக்கரவர்த்தி, காமதேனு ஆகியோர் இங்கு இறைவனை வழிபட்டதாக நம்பிக்கை உள்ளது.

சிற்பியும் மன்னன் முத்தரசனும்

சோழ மன்னன் முத்தரசனின் அறிவுறுத்தலின் பேரில் ஒரு சிற்பி இந்த கோவிலுக்கு முதலில் ஒரு முருகன் சிலையை செய்தார். இந்தச் சிலையின் பிரதிகளை அந்தச் சிற்பி செய்வதைத் தடுக்கும் பொருட்டு அவரின் வலது கட்டைவிரலை மன்னன் துண்டித்தார். சிற்பியின் கனவில் முருகன் தோன்றி எட்டுக்குடி கோயிலுக்கு மற்றொரு சிலையை உருவாக்கும்படி சொன்னார். தனது கனவில் வந்த வழிமுறைகளைப் பின்பற்றி சிற்பி தனது வலது கட்டைவிரலின் துணையின்றி சிலை செய்தார். சிலை கட்டி முடிக்கப்பட்டு எட்டுக்குடி கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டபோது முத்தரசனுக்குத் தெரியவந்தது. சிற்பியின் செயலால் கோபமடைந்த அவர் மேலும் சிற்பங்களை உருவாக்க முடியாதபடி அவரைக் குருடாக்கினார்.

மீண்டும் முருகன் கனவில் தோன்றி மூன்றாவது சிலையை உருவாக்கச் சொன்னதால் இறைவனின் அறிவுறுத்தலைப் பின்பற்றி தன் மகளின் உதவியோடு அதைச் செய்தார். சிலை செய்யும் போது உளி அவரது மகள் மீது பட்டு இரண்டு துளிகள் இரத்தம் அவர் கண்களில் தெறித்தது. அவருக்குப் பார்வை திரும்பியது. பார்வை வந்ததும் “எண்கண்” என கத்தினார். இச்சம்பவத்தைக் கேள்விப்பட்ட முத்தரசன் மன்னன் சிற்பியின் பெருமையை உணர்ந்து மன்னிப்பு கேட்டார்.

முருகனும் சூரபத்மனும்

தேவர்கள் சூரபத்மனின் தாக்குதலில் இருந்து தங்களைக் காக்க வேண்டி முருகப் பெருமானை வழிபட்டனர். முருகன் அசுரனை அழிக்க முடிவு செய்து தன் அன்னை பார்வதியிடமிருந்து வேலைப் பெற்றார். அரக்கனை எதிர்கொள்ள திருச்செந்தூர் சென்றார். இந்த நிகழ்வு 'சூரசம்ஹாரம்' என்று அழைக்கப்படுகிறது. மேலும் இது இந்த கோவிலில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. முருகன் இங்கு 'ஸ்ரீ சிங்கார வேலன்' என அழைக்கப்பட்டார்.

மகாவிஷ்ணுவும் மகாபலியும்

தேவர்கள் மகாவிஷ்ணுவை அணுகி அசுர மன்னன் மகாபலியால் ஏற்பட்ட தொல்லைகளை முறையிட்டு அவரை அழிக்க உதவியை நாடினர். அசுர மன்னன் மகாபலியின் அரசவைக்குச் செல்வதற்கு முன், மகாவிஷ்ணு வாமன அவதாரத்தை எடுத்துக் கொண்டு சிவனை வழிபட இந்தத் தலத்துக்கு வந்தார். சிவபெருமான் அவருக்கு மகாபலியை அழிக்கும் சக்தியை அருளினார். எனவே விஷ்ணு இங்கு 'ஸ்ரீ கோலவாமானப் பெருமாள்' என்று அழைக்கப்பட்டார். சிவன் சன்னதியை ஒட்டி அவருக்கு தனி சன்னதி உள்ளது.

காமதேனு

காமதேனு பசு வறட்சியின் போது இறைச்சியை உட்கொண்டது. இதை அறிந்த சிவன் அவளை சபித்து புலியின் தலை கொண்ட பசுவாக மாற்றினார். துக்கமடைந்த காமதேனு தன்னை மன்னிக்கும்படி இறைவனிடம் வேண்டியது. சிவன் அவளை இந்த இடத்திற்கு வந்து இந்த கோவிலின் புனித குளத்தில் நீராடி பிரார்த்தனை செய்யுமாறு அறிவுறுத்தினார். அதன்படி காமதேனு இத்தலத்திற்கு வந்து நீராடி பழைய நிலைக்குத் திரும்பியது. அவள் மடியிலிருந்து பால் வழிய ஆரம்பித்தது. குளம் முழுவதும் பால் குளமாக மாறியது வெண்ணெயும் உருவானது. சிவனின் உத்தரவுப்படி வசிஸ்டர் முனிவர் இத்தலத்திற்கு வந்து, வெண்ணெயைக் கொண்டு லிங்கத்தை உருவாக்கி பிரார்த்தனை செய்தார். சிவன் இங்கு தோன்றி அவருக்கும் காமதேனுவுக்கும் தரிசனம் தந்தார். காமதேனுவையும் மன்னித்தார். இங்குள்ள இறைவன் 'ஸ்ரீ வெண்ணை லிங்கேஸ்வரர்' என அழைக்கப்பட்டார். வசிஷ்டர் முனிவர் உருவாக்கிய லிங்கம் சில மல்லிகை செடிகளில் சிக்கியதாக நம்பப்படுகிறது. இதனால் இந்த இடம் 'சிக்கல்' எனப் பெயர் பெற்றது.

நவநீதேஸ்வரர் கோயில் ஸ்தல விருட்சம்

கோவில் பற்றி

  • மூலவர்: நவநீதேஸ்வரர், வெண்ணை லிங்கேஸ்வரர்
  • தல விருட்சம்-மல்லிகை
  • அம்பாள்: சத்தியாயதாக்ஷி, வேல்நெடுங்கண்ணி
  • தீர்த்தம்: க்ஷீர புஷ்கரிணி, பால்குளம், கயா தீர்த்தம், லட்சுமி தீர்த்தம்
  • பதிகம்: திருஞானசம்பந்தர் வழங்கிய பாடல்
  • இருநூற்று எழுபத்தியாறாவது தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்று
  • எண்பத்தி மூன்றாவது சிவஸ்தலம்
  • சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக உள்ளார்
  • இங்கு மரகத லிங்கம் உள்ளது.
  • இது சக்தி பீடங்களில் ஒன்று.

கோவில் அமைப்பு

கிழக்கு நோக்கிய இக்கோயிலில் மூன்று நடைபாதைகளும், அதன் பிரதான கோபுரம் ஏழு அடுக்குகளும் கொண்டது. 'சிக்கல் சிங்காரவேலர்' என்று போற்றப்படும் முருகனுக்கு தனி சன்னதி உள்ளது. கருவறைக்குப் பின்னால், லிங்கோத்பவரின் இருபுறமும், மகாவிஷ்ணு, பிரம்மா வழிபாட்டுத் தோரணையில் சிலைகள் உள்ளன. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரின் சன்னதி உள்ளது. இறைவனை தரிசிக்கும் முன் சில படிகள் ஏறிச் செல்ல வேண்டும். கருவறையின் நுழைவாயில் எந்த யானையும் உள்ளே நுழைய முடியாத அளவுக்கு குறுகியதாக உள்ளது. தியாகராஜருக்கு தனி சன்னதி உள்ளது. வடமேற்கு மூலையில் ஸ்ரீ வரத ஆஞ்சநேயருக்குத் தனி சன்னதி உள்ளது. காமதேனு, முனிவர் வசிஷ்டர் மற்றும் பிற முனிவர்கள் இறைவனை வழிபடுவதைச் சித்தரிக்கும் திருவுருவம் தாழ்வாரத்தில் உள்ள கருவறைச் சுவரில் காணப்படுகிறது.

சிற்பங்கள்

சிவன், பார்வதி தேவி சன்னதிகள் தவிர, சுந்தர விநாயகர், முருகன், தியாகராஜர், மகாலட்சுமி, அறுபத்தி மூன்று நாயன்மார்கள், சப்தரிஷிகள், கார்த்திகை விநாயகர், விசாலாட்சியுடன் கூடிய விஸ்வநாதர், பைரவர், நவகிரகம், சூரியன், சந்திரன் ஆகியோரின் சன்னதிகளும், சிலைகளும் உள்ளன. கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி (சனகாதி ரிஷிகள் இல்லாமல்), சனீஸ்வரர், லிங்கோத்பவர் (அவரது இருபுறமும் விஷ்ணு, பிரம்மா), துர்க்கை, சண்டிகேஸ்வரர் சிலைகளைக் காணலாம்.

சிறப்புகள்

  • அருணகிரிநாதர் தனது திருப்புகழில் இக்கோயிலின் முருகப் பெருமானைப் போற்றிப் பாடல்களைப் பாடினார்.
  • சிங்காரவேலரிடம் 'சத்ரு சம்ஹார திரிசதி' என்ற பிரார்த்தனையை ஓதினால், எதிரிகளால் ஏற்படும் இடையூறுகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
  • இங்குள்ள வரத ஆஞ்சநேயரின் ஆசீர்வாதத்தைப் பெற பக்தர்கள் அவருக்கு தயிர் சாதம் பிரசாதம் வைத்து பூஜை செய்வர்.

திறந்திருக்கும் நேரம்

  • காலை 6-12
  • மாலை 4-9

விழாக்கள்

  • ஆண்டுதோறும் சித்திரை மாதம் பிரம்மோத்ஸவம் கொண்டாடப்படுகிறது.
  • ஐப்பசியில் ஸ்கந்த ஷஷ்டியின் போது கொண்டாடப்படும் "சூரசம்ஹாரம்" திருவிழா முக்கியமானது
  • ஆனியில் திருமஞ்சனம்
  • ஆடியில் ஆடி பூரம்
  • ஆவணியில் விநாயகர் சதுர்த்தி
  • புரட்டாசியில் நவராத்திரி
  • ஐப்பசியில் அன்னாபிஷேகம்
  • கார்த்திகையில் திரு கார்த்திகை
  • மார்கழியில் திருவாதிரை
  • தையில் மகர சங்கராந்தி
  • மாசியில் சிவராத்திரி
  • பங்குனியில் பங்குனி உத்திரம்

உசாத்துணை


✅Finalised Page