under review

நற்றுணையப்பர் கோயில்

From Tamil Wiki
நற்றுணையப்பர் கோயில் (நன்றி: தரிசனம்)
நற்றுணையப்பர் கோயில்

நற்றுணையப்பர் கோயில் திருநனிப்பள்ளியில் (புஞ்சை) அமைந்த தேவாரப் பாடல் பெற்ற தலம். இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இடம்

நற்றுணையப்பர் கோயில் திருநனிப்பள்ளி(புஞ்சை) மயிலாடுதுறையில் செம்பனார் கோயிலில் இருந்து திருக்கடையூர் செல்லும் பாதையில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து பதின்மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

வரலாறு

நற்றுணையப்பர் கோயில் சோழ மன்னன் முதலாம் பராந்தகனால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த கோவிலில் பதினெட்டு கல்வெட்டுகள் உள்ளன. அவற்றில் பதினேழு சோழர் காலத்துடன் தொடர்புடையவை (மன்னர்கள் குலோத்துங்கன், ராஜராஜன், ராஜேந்திரன் மற்றும் விக்ரமன்); ஒன்று விஜயநகர (கிருஷ்ண தேவராயர்) காலத்தைச் சேர்ந்தது.

பெயர்க்காரணம்

இந்த கோவிலை முதலில் கட்டிய நன்னியின் பெயரிலிருந்து 'நனிப்பள்ளி' என்ற பெயர் பெற்றிருக்கலாம். இங்குள்ள சிவபெருமான் நற்றுணையப்பர் என்று அழைக்கப்பட்டார். 'நம்மை சிறந்த வாழ்க்கைக்கு வழிநடத்தும் இறைவன்' என்ற பொருளில் இப்பெயர் உள்ளது.

நற்றுணையப்பர் கோயில்

தொன்மம்

விநாயகர்

புராணத்தின் படி விநாயகர் காகத்தின் உருவம் எடுத்து அகஸ்திய முனிவரின் கமண்டலத்தை வீழ்த்தியதால் சாபம் பெற்றார். தன் இயல்பு நிலைக்கு மாற இயலாத விநாயகர் நிவாரணம் பெற இக்கோயிலில் வந்து வழிபட்டு புனித தீர்த்ததில் நீராடினார். காகம் தீர்த்தத்தொட்டியில் இருந்து வெளிவந்த போது அதன் நிறம் தங்கமாக மாறியிருந்தது. எனவே இந்த இடம் "பொன்செய்" என்று பெயர் பெற்றது. இதுவே பின்னர் புஞ்சை என மருவியது.

திருஞானசம்பந்தர்

திருஞானசம்பந்தரின் தாய் பகவதி பிறந்த ஊர். சம்பந்தர் சிவபெருமானைப் போற்றிப் பதிகம் செய்யத் தொடங்கியதையும், இறைவனிடம் தங்கத் தகடுகளால் ஆசி பெற்றதையும் கேள்விப்பட்ட இந்த ஊர் மக்கள் அவர் இங்கு வர விரும்பினர். சிறு குழந்தையாக இருந்ததால், சம்பந்தருக்கு நீண்ட தூரம் நடக்க முடியவில்லை. அவனுடைய தந்தை அவனைத் தோளில் சுமந்தார். துறவி சம்பந்தர் இந்த கிராமத்தை அடைந்தபோது அவர் தனது தந்தையான சிவபாத ஹ்ருதயரின் தோள்களில் அமர்ந்து தனது பதிகம் பாடினார். இந்த கிராமத்தைச் சுற்றியுள்ள தரிசு நிலங்கள் அவரது பதிகத்தின் சக்தியால் வளமான சாகுபடி நிலமாக மாறியதால் இந்த இடம் "பொன்செய்" என்று அழைக்கப்பட்டது.

அகஸ்தியர்

அகஸ்தியர் இங்கு சிவபெருமானின் திருமண தரிசனம் பெற்றதாக நம்பப்படுகிறது. இச்சம்பவத்தை உணர்த்தும் வகையில் கல்யாண சுந்தரேஸ்வரருக்கு மாடவீதியில் தனி சன்னதி உள்ளது.

நற்றுணையப்பர் கோயில்

கோயில் பற்றி

  • மூலவர்: நற்றுணையப்பர், ஸ்வர்ணபுரீஸ்வரர்
  • அம்பாள்: பர்வதராஜ புத்திரி, ஸ்வர்ணாம்பிகை, மலையன் மடந்தை
  • தீர்த்தம்: ஸ்வர்ண தீர்த்தம்
  • ஸ்தல விருட்சம்: செண்பகம், புன்னை
  • பதிகம் வழங்கியவர்கள்: திருஞானசம்பந்தர்-1, திருநாவுக்கரசர் (அப்பர்)-1, புனித சுந்தரமூர்த்தி (சுந்தரர்)-1
  • இக்கோயிலில் உள்ள சிவன் சுயம்பு மூர்த்தியாக உள்ளார்.
  • தேவார மூவர் தங்கள் பதிகங்களை வழங்கிய நாற்பத்தி நான்கு பாடல் பெற்ற ஸ்தலங்களில் இதுவும் ஒன்று.
  • திருஞானசம்பந்தரின் தாய் பகவதி பிறந்த ஊர் இது.
  • கடைசியாக கும்பாபிஷேகம் செப்டம்பர் 14, 1970 அன்று நடந்தது.
நற்றுணையப்பர் கோயில்

கோயில் அமைப்பு

கிழக்கு நோக்கிய இக்கோயிலுக்கு ஒற்றை நடைபாதை உள்ளது மற்றும் அதன் பிரதான கோபுரத்திற்கு அடுக்குகள் இல்லை. கோபுரத்தின் இடத்தில் பஞ்சமூர்த்தியை (சிவன், பார்வதி தேவி, விநாயகர், முருகன் மற்றும் சண்டிகேஸ்வரர்) சித்தரிக்கும் சிற்பங்கள் உள்ளன. கருவறை பிரமாண்டமாகவும், விசாலமாகவும் இருப்பதால், இந்த சன்னதிக்குள் யானை புகுந்து இறைவனை வழிபட்டதாக நம்பப்படுகிறது. சிவபெருமானின் கருவறை கோபுரமும்(விமானம்) மிகப் பெரியதாகவும் குவிமாட வடிவிலும் உள்ளது. இந்த கோபுரம் தமிழகத்தின் மிகப்பெரிய கோபுரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இக்கோயிலில் உள்ள பிரதான மண்டபம் 'நானிப்பள்ளி கொடி வட்டம்' என்றழைக்கப்பட்டது. கருவறையின் வெளிப்புறச் சுவர்களில் ராமாயணக் கதைகளைச் சித்தரிக்கும் பல சிற்பங்கள் உள்ளன. நடைபாதையில் செதுக்கப்பட்ட தூண் உள்ளது. அதில் யாளியின் புடைப்புச் சிற்பம் உள்ளது. இந்த யாளியின் பற்களுக்கிடையே உள்ள ஒரு சிறிய துளையின் ஒரு முனையில் கயிறு அல்லது குச்சியை செருகினால், அது மறுமுனையில் இருந்து வெளிப்படுவது இதன் தனிச்சிறப்பு.

சிற்பங்கள்

சிவன், பார்வதி தேவியின் சன்னதிகள் உள்ளன. விநாயகர், முருகன், அவரது துணைவியருடன் நடராஜர், நால்வர், லிங்கம், சூரியன் மற்றும் விநாயகர் ஆகியோரின் சன்னதிகள், சிலைகள் மாடவீதிகளில் உள்ளன. கோஷ்டத்தில் விநாயகர், அகஸ்தியர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை மற்றும் சண்டிகேஸ்வரர் அவரது மனைவியுடன் கூடிய சிலைகள் உள்ளன. கருவறையில் கல்யாணசுந்தரேஸ்வரர், பார்வதி தேவியின் சிலைகள் உள்ளன. இங்கு பார்வதி தேவிக்கு இரண்டு சந்நிதிகள் உள்ளன. முதலாவது பர்வதராஜ புத்ரி சிவன் சன்னதியின் வலது பக்கத்தில் உள்ளது. இரண்டாவது மலையன் மடந்தை தாழ்வாரத்தில் உள்ளது.

சிறப்புகள்

  • இக்கோவிலின் பெரும்பாலான சிலைகள் பெரிய அளவில் அழகாக செதுக்கப்பட்டவை.
  • சூரியன் ஒவ்வொரு ஆண்டும் சித்திரையில் 7-13 வரை ஏழு நாட்களுக்கு லிங்கத்தின் மீது தனது கதிர்களை செலுத்தி சிவனை வழிபடுவதாக நம்பப்படுகிறது. இந்த நாட்களில் இங்குள்ள சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.
  • திருமண முயற்சிகளில் தடைகளை எதிர்கொள்பவர்கள் இங்குள்ள கல்யாண சுந்தரேஸ்வரரை வழிபடலாம்.
  • செழிப்பு, ஞானத்தின் வரம் வேண்டி இக்கோயிலின் சிவபெருமானை வழிபடுவர்.

திறந்திருக்கும் நேரம்

  • காலை 8-12 வரை
  • மாலை 5-7 வரை

விழாக்கள்

  • ஆவணியில் விநாயகர் சதுர்த்தி
  • புரட்டாசியில் நவராத்திரி
  • ஐப்பசியில் ஸ்கந்த ஷஷ்டி, அன்னாபிஷேகம்
  • கார்த்திகையில் திரு கார்த்திகை
  • மார்கழியில் திருவாதிரை
  • மாசியில் சிவராத்திரி
  • பிரதோஷம் தொடர்ந்து அனுசரிக்கப்படுகிறது

உசாத்துணை


✅Finalised Page