under review

நபிகள் நாயகம் பிள்ளைத் தமிழ்

From Tamil Wiki
நபிகள் நாயகம் பிள்ளைத் தமிழ் - செய்யிது அனபிய்யா புலவர்

நபிகள் நாயகம் பிள்ளைத் தமிழ் (1883) முகம்மது நபியின் வாழ்க்கையைக் கூறும் நூல். இந்நூலை இயற்றியவர், இலங்கையைச் சேர்ந்த செய்யிது அனபிய்யா புலவர்.

(நபிகள் நாயகம் பிள்ளைத் தமிழ் - என்னும் இதே தலைப்பில், தொண்டி பீர் முகம்மது புலவர், ஷெய்கு மீரான் புலவர், நாஞ்சில் ஷா உள்ளிட்ட சிலரும் நூல்களை இயற்றியுள்ளனர்)

பிரசுரம், வெளியீடு

நபிகள் நாயகம் பிள்ளைத் தமிழ் நூல், சென்னை பரப்பிரம முத்திராட்சரசாலையில், 1883- ம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்டது. இதன் இரண்டாம் பதிப்பை, கொழும்பு, மீலாத் இயக்கப் பிரசுரக் குழுவினர், 1975-ல், பேராசிரியர் சி. நயினார் முகம்மதுவின் உரையுடன் பதிப்பித்தனர். இந்நூல், இலங்கை அரசின் பல்கலைக்கழகங்களில், உயர்தரத் தேர்வுக்கான தமிழ்ப் பாட நூலாக வைக்கப்பட்டது.

ஆசிரியர் குறிப்பு

செய்யிது அனபிய்யா புலவர், செய்யிது ஹனபிய்யா புலவர் என்றும், சையது அனபியா சாகிப் என்றும் அழைக்கப்பட்டார். 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறந்த இவர், இலங்கை, திருநெல்வேலி, வடகரையைச் சேர்ந்தவர். தந்தை, சையத் மீரா லெப்பை. செய்யிது அனபிய்யா புலவர், தமிழ்க் கல்வியும், மார்க்க கல்வியும் முறையாகக் கற்றவர். மக்களுக்கு மார்க்கக் கல்வியை போதித்து வந்தார்.

நூல் அமைப்பு

நபிகள் நாயகம் பிள்ளைத் தமிழ், 103 பாடல்களைக் கொண்டுள்ளது. நபிகள் நாயகத்தின் பிறப்பு, வளர்ப்பு, சிறு பருவத்தில் அவர் ஆற்றிய அருட்செயல்கள், அற்புதங்கள், பற்றிய செய்திகள் விருத்தப் பாக்களில் இடம்பெற்றுள்ளன.

நபிகள் நாயகம் பிள்ளைத் தமிழ், காப்புச் செய்யுளுடன் தொடங்குகிறது. இறை வணக்கமாக மூன்று பாடல்கள் இடம்பெற்றுள்ளன. தொடர்ந்து நபிகள் நாயகத்தின் வாழ்க்கை,

  • காப்புப்பருவம்
  • செங்கீரைப் பருவம்
  • தாலாட்டுப் பருவம்
  • சப்பாணிப் பருவம்
  • முத்தப் பருவம்
  • வருகைப் பருவம்
  • அம்புலிப் பருவம்
  • சிற்றில் பருவம்
  • சிறுபறைப் பருவம்
  • சிறுதேர்ப் பருவம்

- என, ஆண்பால் பிள்ளைத் தமிழ் நூல்களின் இலக்கண முறை பெற்று, பருவத்திற்குப் பத்துப் பாடல்களாக அமைந்துள்ளது.

மதிப்பீடு

நபிகள் நாயகம் பிள்ளைத் தமிழ், சொற் சுவையும், பொருட் சுவையும், கற்பனை வளமும், வடிவச் சிறப்பும் கொண்டது. எளிய தமிழில் அமைந்துள்ளது. இலங்கையிலிருந்து வெளிவந்த பிள்ளைத் தமிழ் நூல்களுள் முக்கியமான நூலாகவும், இஸ்லாமியப் பிள்ளைத் தமிழ் நூல்களுள் குறிப்பிடத்தகுந்த ஒன்றாகவும், நபிகள் நாயகம் பிள்ளைத் தமிழ் மதிப்பிடப்படுகிறது.

பாடல் நடை

தாலாட்டு

மணியும் பவள மரகதத்தின்
வடிவா யிருந்து முன்னாளில்
மாறா உருவொன் றாய்ச் சமைந்து
மண்ணில் பிறந்த மாதவரே

அணியும் புயத்தார் நபிமார்க
ளனைவர்க் கரசாய் வந்தோரே
ஆதி மறைநூ லோதிடவே
யருள்சேர் திருநா வுடையோரே

பணிதல் வழுவா தவர்க் குயிராய்ப்
பதவி யருளும் பாக்கியரே
பல நோய் துன்ப மணுகாமல்
பலன்க டரூவீ ரெந்நபியே

கணித லடங்கா தறிவுடைய
காசீ நபியே தாலேலோ
கருணைக் கடலா முகம்மதுவே
கபீபே கா மீம் தாலேலோ

சப்பாணி

குவலயந் தனக்கொரு மறைந்திடா விளக்கே
கொட்டுக சப்பாணி
குணமிலாப் பிணிக்கொரு சஞ்சீவி மருந்தே
கொட்டுக சப்பாணி

குவளையின் மலரெனக் கண்ணிரு மணியே
கொட்டுக சப்பாணி
காபதி புகுந்திட அருள்செய்யுந் துரையே
கொட்டுக சப்பாணி

குவைமிகு குறைசிக் குலங்க ளுயர்ந்திடக்
கொட்டுக சப்பாணி
குயில்மொழி யலிமாக் குலங்கள் தழைத்திடக்
கொட்டுக சப்பாணி

குளவு பெரும்புவி மன்னர் மன்னேறே
கொட்டுக சப்பாணி
குதாவொடு பேசிட வந்த முகம்மதே
கொட்டுக சப்பாணி

சிறுபறை

செக்கர் நிறமாறாத செந்தமாரைப் பாத
சித்தீக்கு மருகேசரே
தீனா னபயிருக்கு மழையான போசரே
சிறுபறை முழக்கியருளே

சிக்கமுன் சிகிவீட்டிற் சேராமற் பிறுதவுசில்
செயமாக சேர்ந்தாளவே
செகத்தினிற் சிபத்தாக வந்த மகுமூதரே
சிறுபறை முழக்கியருளே

சிக்கல் மனதணுகாத நபிமார்க ளொலிமார்கள்
செயமன்னர் விறலாளருந்
தேவர் களுமடியதனைச்சே விக்க யேற்றதுரை
சிறுபறை முழக்கியருளே

திக்குலகு புகழ்மக்கங் குறைசிகுல திலகமே
சிறுபறை முழக்கியருளே
தீவினைக ளண்டாம லெனைக் காக்கும் வள்ளலே
சிறுபறை முழக்கியருளே

உசாத்துணை


✅Finalised Page