under review

தொல்கபிலர்

From Tamil Wiki

தொல்கபிலர்: சங்ககாலக் கவிஞர்களில் ஒருவர். இவருக்கு அடுத்தவர் பெருங்கவிஞர் கபிலர். அவரிலிருந்து வேறுபடுத்தும் பொருட்டு இவருக்கு தொல்கபிலர் என்ற பெயர் அளிக்கப்பட்டது.

(பார்க்க கபிலர்கள் )

தொல்கபிலர் பாடல்கள்

தொல்கபிலர் பாடிய ஆறு பாடல்கள் கிடைக்கின்றன. அவை அகநாநூறு 282, குறுந்தொகை 14, நற்றிணை 114, 276, 328, 399 ஆகியவை.

அகநாநூறு

அகநாநூறு 282-ம் பாடலில் அக்காலத்தில் மணமகன் மணமகளுக்கு பரிசம் (பரிசு) தந்து திருமணம் செய்துகொள்ளும் வழக்கம் உள்ளது தெரிய வருவதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். தாரம் என்னும் சொல் இப்பாடலில் செல்வத்தை குறிக்கிறது. யானைத்தந்தம், காட்டில் மண்ணை தோண்டி எடுத்த அருமணி, நீரில் கிடைக்கும் முத்து ஆகியவை மூன்று கான்செல்வங்கள். அவற்றை தலைவன் பரிசமாக கொண்டுவருகிறான்.பலாப்பழத்தை மறு பரிசாகக் கொடுத்து தலைவியின் தந்தை தலைவனை வரவேற்கிறார்

குறுந்தொகை

குறுந்தொகை 14-ம் பாடலில் மடலேறுதல் பற்றிய செய்தி உள்ளது.

நற்றிணை

நற்றிணை 114-ம் பாடலில் தலைவியை தலைவனிடமிருந்து பிரித்து வீட்டில் சிறைவைத்திருப்பதை பச்சை ஊனுடன் யானையின் உடலில் இருந்து வெட்டப்பட்ட தந்தத்தை வீட்டுக்குள் கொண்டு வைத்திருப்பதுடன் ஒப்பிடுகிறார்.

நற்றிணை 276-ம் பாடலில் தலைவி தன்னை தலைவன் வயவர் மாக்கள் (பரத்தையர்) என எண்ணிவிட்டதாக குறைசொல்கிறாள்.

நற்றிணை 328-ம் பாடலில் தினை மண்ணிலும் தேன் உச்சியிலும் விளைகிறது. அவை ஒன்றுசேரும் நாள் வரும் என்று தோழி சொல்கிறாள்

நற்றிணை 399-ம் பாடலில் வண்டு முட்ட காந்தள் மலரும். பன்றி தோண்டிய குழியில் அருமணி வெளிவந்து நிலவில் சுடர்விட அவ்வெளிச்சத்தில் யானை கன்று ஈனும். அதுபோல தலைவன் தலைவியை அணுகும் நாள் வரும் என்று தலைவி சொல்கிறாள்

உசாத்துணை

  • அகநாநூறு
  • குறுந்தொகை
  • நற்றிணை


✅Finalised Page