under review

தேவமாதா அம்மானை

From Tamil Wiki
தேவமாதா அம்மானை - 1935

தேவமாதா அம்மானை (1935) இயேசுவின் அன்னையான மேரி மீது பாடப்பெற்ற அம்மானை இலக்கிய நூல். தேவ மாதாவின் வரலாறு, இயேசுவின் பிறப்பு, வளர்ப்பு, போதனைகள், வாழ்க்கை பற்றிக் கூறுகிறது. இந்நூலை இயற்றிய ஆசிரியர், இதன் காலம் பற்றி அறிய இயலவில்லை.

(தேவ மாதா அம்மானை என்ற தலைப்பில் வேறு சில நூல்களும் புலவர்களால் இயற்றப்பட்டுள்ளன)

வெளியீடு

தேவமாதா அம்மானை 1935-ல், நேரடியாக ஓலைச்சுவடியில் இருந்து, புதுச்சேரியைச் சேர்ந்த ந. சவரிமுத்து பிள்ளை & சன்ஸ் நிறுவனத்தால் பதிப்பிக்கப்பட்டது. செங்கல்பட்டு, செயின்ட் ஜோசப் ஆர்ப்பனேஜ் அச்சகத்தில் அச்சிடப்பட்டது.

நூல் அமைப்பு

தேவமாதா அம்மானை நூலின் தொடக்கத்தில் காப்புச் செய்யுள், கடவுள் வாழ்த்து, அவையடக்கம் ஆகியன இடம் பெற்றன. தொடர்ந்து கீழ்க்காணும் தலைப்புகளில் பாடல்கள் இடம் பெற்றன.

  • தேவமாதா உற்பவம்
  • தேவகன்னிகை கோயிலிற் சேர்தல்
  • தேவகன்னிகையின் திருமணம்
  • கபிரியேல் வானவன் மங்களஞ் சொல்லல்
  • தேவகன்னிகை கருத்தரித்தல்
  • அர்ச். சூசை மாமுனிவர் மனந்தெளிவுறல்
  • இரட்சகரின் பிறப்பு
  • மூவரசர் வந்து பணிதல்
  • தேவகுமாரனைக் கோயிலிற் காணிக்கை கொடுத்தல்
  • ஏரோதையின் கொடுமைக்கஞ்சி எசித்தூர் சேர்தல்
  • தேவமாதா குமாரனைக் காணாமல் தேடியது
  • சூசை மாமுனிவன் நன் மரணமடைதல்
  • தேவ மாதாவின் வேண்டுதலால் திருக்குமாரன் செய்த அற்புதம்
  • ஆண்டவர் பாடுபட மாதாவை வினவி அனுமதி பெறல்
  • ஆண்டவரின் பாடுகளை யுவானி மாதாவுக்கு அறிவித்தல்
  • ஆண்டவர் பூங்காவிற்பட்ட வாதைகள்
  • ஆண்டவர் யூதர் கையிலகப்பட்டது
  • ஆண்டவரை ஆனாசு, கைப்பாசு வீட்டிற்குக் கொண்டு சென்றது
  • ஆண்டவர் பிலாத்து முன்னிலையில் கொண்டு செல்லப்பட்டது
  • ஆண்டவரை ரோமான் கனம் பண்ணுதல்
  • ஆண்டவரை ஏரோதரசன் முன் கொண்டுபோய் நிந்தித்தல்
  • பிலாத்து விடுதலை செய்ய நினைத்தது
  • ஆண்டவரை கல்தூணில் கட்டி முள் முடி சூட்டி அடித்தது
  • பிலாத்து கை கழுவினது
  • பிலாத்து தீர்வையிடுதல்
  • ஆண்டவர் சிலுவை சுமந்துகொண்டு சென்றது
  • தேவமாதா குமாரனைக் காணப் புறப்படல்
  • தேவதாமா குமாரனின் உரூபத்தைக் கண்டு பிரலாபித்தல்
  • ஆண்டவரைச் சிலுவையில் அறைதல்
  • ஆண்டவர் மரித்தல்
  • ஆண்டவரைச் சிலுவையால் இறக்கி அடக்கல்
  • ஆண்டவர் உயிர்த்துப் பர மண்டலஞ் சென்றது
  • ஆண்டவர் பரலோகஞ்ச் சென்றபின் தேவமாதா பூலோகத்திலிருந்த வகை
  • தேவமாதா மோட்சத்துக்கு ஆரோகணமானது
  • தேவமாதாவின் புதுமைகள்

உள்ளடக்கம்

தேவமாதா அம்மானை நூல், தேவ அன்னையான கன்னி மாதாவின் பிறப்பு, வளர்ப்புப் பற்றியும், இயேசுவின் பிறப்பு வளர்ப்பு பற்றியும் அம்மானை eஇலக்கிய வடிவில் கூறுகிறது. கிறித்துவ சமயத்தின் நம்பிக்கைகள், இயேசு கிறிஸ்துவின் போதனைகள், அவர் செய்த நற்பணிகள், பாடுகள் ஆகியன கதைப்பாடல் வடிவில் இடம்பெற்றன. நூலின் தொடக்கத்தில் காப்புச் செய்யுளில், சிலுவை காப்பாக இடம்பெற்றது. வெண்பா, விருத்தம், அம்மானைக் கண்ணிகளில் இந்நூல் அமைந்துள்ளது. பேச்சு வழக்குச் சொற்களும், கொச்சைச் சொற்களும் தேவமாதா அம்மானை நூலில் இடம்பெற்றன.

பாடல் நடை

தேவமாதா திருமணம்

இன்பமுள்ளகன்னியற்கு ஈரேழ்வயது தன்னில்
அன்புடைய சூசைமுனிக் கையாறுமூன்று தன்னில்
ஞானக்கலியாணம் நன்மறையிலுள்ளபடி
வானபரன்கோயில்முன்னே வந்தகுருவானவரும்
இருவர் மனமுமொன்றாய் இருந்துகர்த்தனைப்புகழ
தருமமுடனுலகிற் சமாதானமாயிருக்க
வாய்விட்டுப்பேசி வகுத்தேமணமுடித்துப்
போய்விட்டார் தங்கள் புகழ்பெரியமாளிகைக்கு
நீரோசை பேரோசை நீண்டமுழவோசை
பாரோசையங்கிருக்கும் பல்லோருங்கொண்டாட
நித்தியகன்னியென்றும் நேர்ந்தபலன்குன்றாமல்
சத்தியவாசகந்தான் சாற்றியிருபேரும்
ஒக்கப்பிறந்த ஒருபிறப்பு தான்போலத்
தக்கோரிருபேருந் தாரணியிற்றானிருந்தார்

இயேசு செய்த அற்புதம்

அந்தோ வெமது குடிக் கற்புதமாய்வந்தவளே
சந்தோஷமுக்கனியே தாயேயெமெக்கு நட்டம்
வந்தல்லோபோச்சு வளவிலுள்ளபோசனங்கள்
எல்லாமிருக்க எவர்க்கும்விருப்பமுள்ள
சொல்லரிய முந்திரிகைத் தூயகனியிரசம்
ஒன்று குறைந்ததென வோதினார்தாயார்க்கு
நன்றென்று சொல்லி நமதுகர்த்தனன்னையரும்
சென்றேதமது திருச்சுதனைப்பார்த்துரைப்பாள்
என்றுமிருப்பவனே ஏகனேஎன்சுதனே
எங்கள் குடித்தலைவ னேததும்வதுவைதனிற்
சங்கைகேடானாற் தலைமுறைக்கும் பேச்சு வரும்
முந்திரிகையின்கனியின் மோசமற்றநல்லிரசம்
வந்தோரருந்துதற்கு மகனே குறையாச்சு
உன்பெருமையாலே உதவியெனக்காக
அன்புசெய்யுமென்றாள் அரசர்குலக்கன்னிகையாள்
தாயார்பெரும்புகழுந் தன்னவமுங்கண்டுலகோர்
ஓயாதவாக்கியத்தி லுள்ளதெல்லாம்நம்புதற்கு
கத்தனார் முந்தக் கனபுதுமைசெய்வதற்கு
எத்து நீர்தன்னை யிருமூன்று சாடியிலே
தானிரப்பச்சொல்லித் தனதுதிருக்கரத்தை
ஆனநீர் தன்னில்வைத்து ஆசிர்வதித்தவுடன்
வந்துருசி கூடி மனுவோரருந்துதற்கு
முந்திரிகையின் பழத்தின் முற்றுரசமானதுவே

இயேசுவின் பாடுகள்

முள்ளுந்தலையிலிட்டார் மூங்கிலொன்றுகைகொடுத்த
எள்ளுந்தரிக்க இடங்காணாதேயடித்தார்
சான்றோனேயும்மைத் தருச்சிலுவையிற்கிடத்தி
மூன்றாணிகொண்டு முனையிறுகத்தானறைந்தார்
என்னேச மாமகனே யானுனைப்போற்பாடுபட
உன்னியதிட்ட முவந்துபெற்றேனில்லைஐயோ
உன்னைக்கொலைக்காக்கி உய்வேனோ ஒண்டரையில்
அன்னைக்கு ஆருதவி ஐயோமகனேயென்று
எண்ணமும்வாக்கு மியலறிவும் நன்னினைவும்
திண்ணமறந்து செயமில்லாச்சோகமுற்று
தீட்டியவாளுருவிச் சிமியாமுரைத்தபடி
மூட்டுங்குருசருகில் முதியவலமாகநின்று
அன்னையிரங்கியழ அரியவியக்கோவும்
கன்னிசலோமையருங் கற்றசுவானாளும்
மங்கை மதலேனாளும் மற்றும்வரோணிக்காளும்
சங்கைச்சுவானியருஞ் சலித்தாரம்மானை

மதிப்பீடு

தேவமாதா அம்மானை என்ற தலைப்பில் 1893-லும், 1967-லும் நூல்கள் சில வேறு புலவர்களால் இயற்றப்பட்டு வெளியாகின. அதிலிருந்து மாறுபட்டு இனிய, எளிய நடையில் 1935-ல் வெளியான இந்த தேவமாதா அம்மானை நூல் அமைந்துள்ளது. இயேசுவின் வரலாற்றோடு கூடவே இயேசுவின் அன்னையான மரியாளின் வாழ்க்கையை மிக விரிவாக இந்நூல் பதிவு செய்துள்ளது. இயேசு வாழ்ந்தது, வஞ்சகரால் மாண்டது, உயிர்த்தெழுந்து மீண்டது, இறைவனோடு கலந்து இறுதியில் விண்ணுலகை ஆட்சி செய்வது போன்ற செய்திகள் தேவமாதா அம்மானை நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 02-Jun-2024, 21:13:44 IST