தேனிரா. பாண்டியன்
தேனிரா. பாண்டியன் பிறப்பு: (ஆகஸ்ட் 10, 1952) கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர். வழக்குரைஞராகப் பணியாற்றினார். மரபுக் கவிதைகளையும், புதுக்கவிதைகளையும் எழுதினார்.
பிறப்பு, கல்வி
தேனிரா. பாண்டியன், ஆகஸ்ட் 10, 1952 அன்று, தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாளையத்தில் கேட்டி. இராசன் - சாரதா அம்மையார் இணையருக்குப் பிறந்தார். பள்ளிக் கல்வியை நிறைவு செய்தபின் சட்டம் பயின்று தேர்ச்சி பெற்றார்.
தனி வாழ்க்கை
தேனிரா. பாண்டியன், வழக்குரைஞராகப் பணியாற்றினார். மண வாழ்க்கை விவரங்களை அறிய இயலவில்லை.
இலக்கிய வாழ்க்கை
தேனிரா. பாண்டியன், கவிதை எழுதுவதில் ஆர்வம் கொண்டிருந்தார். முதல் கவிதை 1969-ல் வெளியானது. தொடர்ந்து இதழ்களில் பல கவிதைகள் வெளியாகின. முதல் கவிதைத் தொகுப்பு, 1988-ல், 'தேனிரா பாண்டியன் கவிதைகள்' என்ற தலைப்பில் வெளியானது. தொடர்ந்து பல கவிதைத் தொகுப்புகளை வெளியாகின. மரபுக்கவிதை, புதுக்கவிதை இரண்டிலும் தேர்ந்தவர். வானொலி கவியரங்கங்கள், பட்டிமன்றங்கள் போன்றவற்றில் பங்கு கொண்டார். மும்பை, பெங்களூரூ, திருவனந்தபுரம், தில்லி ஆகிய இடங்களிலுள்ள தமிழ்ச் சங்கங்களில் கவியரங்கங்களுக்குத் தலைமைப் பொறுப்பு வகித்தார்.
இதழியல்
தேனிரா. பாண்டியன், 'தும்பை' எனும் தமிழ்க் கவிதை திங்களிதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். 'கிராம ஊழியன்', 'கவிக்குரல்' போன்ற இதழ்களை நடத்தினார்.
பொறுப்பு
- புதுவை மாநில வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்புத் துணைத் தலைவராகப் பணியாற்றினார்
- ஓசூர் வழக்கறிஞர்கள் சங்கத்தலைவராகப் பணிபுரிந்தார்.
விருதுகள்
- கவிமாமணி - 1990
- தேனருவிப் பாவலர் - 1992
- மனித நேயக் கவிஞர் - 1995
- இணைப்புப் பாலம் விருது - 1996
- மானுடக் கவிஞன் - 2000
- கம்பன் கழகம் வழங்கிய கி.வா.ஜ. நினைவுப் பரிசு
மதிப்பீடு
தேனிரா. பாண்டியன் சந்த நயமிக்க மரபுக் கவிதைகளையும், கருத்துச் செறிவுமிக்க புதுக்கவிதைகளையும் எழுதினார். வழக்குரைஞர் பணி சார்ந்தும் பல கட்டுரைகளை, நூல்களை எழுதினார். ஓசூர் பகுதி வாழ் கவிஞர் மற்றும் எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தகுந்த ஒருவராக அறியப்படுகிறார்.
நூல்கள்
- தேனிரா பாண்டியன் கவிதைகள் - 1988
- சிறகுகள் விரிக்கும் சிம்புட் பறவைகள் - 1992
- கவசங்கள் -1993
- ஒரு பாட்டுக்காரனின் நாட்டுக்குறிப்புகள் - 1996
- நீதிமன்றத்தில் தமிழ் - 1998
- தொடரும் வழக்கறிஞர் போராட்டம் ஏன்? - 2000
- கால முகடுகளில் கவிதைச் சுவடுகள் - 2000
உசாத்துணை
- தேனிரா. பாண்டியன் கவிதைகள், திண்ணை இதழ் கட்டுரை
- இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற 100 தமிழ்க் கவிஞர்கள், முனைவர் ப. முத்துக்குமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ் வெளியீடு, காமன்ஃபோல்க்ஸ் தளம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-May-2025, 23:42:37 IST