under review

தேசிய புத்தக அறக்கட்டளை

From Tamil Wiki
தேசிய புத்தக அறக்கட்டளை வெளியிட்ட தமிழ் நூல்களில் சில...

தேசிய புத்தக அறக்கட்டளை (National Book Trust) (NBT) (1957), புத்தகத் துறையின் மேம்பாட்டுக்காகவும், புத்தகம் வாசிக்கும் ஆர்வத்தை மக்களிடையே வளர்ப்பதற்காகவும், இந்திய அரசால் 1957-ம் ஆண்டு நிறுவப்பட்டது. அப்போதைய பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேருவால், குறைந்த கட்டணத்தில் புத்தகங்களை வெளியிட வேண்டும் என்ற நோக்கத்துடன் தன்னாட்சி அறக்கட்டளையாக இந்நிறுவனம் உருவாக்கப்பட்டது. தற்போது இந்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இந்நிறுவனம் செயல்படுகிறது. லெப்டினன்ட் கர்னல் யுவராஜ் மாலிக் தேசிய புத்தக அறக்கட்டளையின் தலைவராகச் செயல்படுகிறார்.

நோக்கம்

தேசிய புத்தக அறக்கட்டளை, கீழ்காண்பவற்றைத் தனது நோக்கங்களாகக் கொண்டு செயல்படுகிறது.

  • புத்தகங்களை வெளியிடுதல்
  • புத்தகத் துறையையும் வாசிப்பு ஆர்வத்தையும் வளர்த்தல்
  • இந்தியப் புத்தகங்களை வெளிநாடுகளில் பரவலாக்குதல்
  • எழுத்தாளர்கள், பதிப்பாளர்களுக்கு உதவுதல்
  • குழந்தைகள் இலக்கியத்தை மேம்படுத்தல்
  • நல்ல இலக்கியத்தை ஊக்குவித்தல்
  • பொதுமக்களுக்குக் குறைந்த விலையில் இலக்கிய நூல்களை வழங்குதல்
  • ஆங்கிலம், ஹிந்தி மற்றும் பிற இந்திய மொழிகளில் புத்தகங்களை வெளியிடுவதை ஊக்குவித்தல்
  • அறக்கட்டளையின் நோக்கங்களுடன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் புத்தக அறக்கட்டளைகளை உருவாக்குவதை ஊக்குவித்தல்

வெளியீட்டு மொழிகள்

தேசிய புத்தக அறக்கட்டளை கீழ்க்காணும் மொழிகளில் புத்தகங்களை வெளியிட்டு வருகிறது.

  • தமிழ்
  • தெலுங்கு
  • மலையாளம்
  • கன்னடம்
  • அஸ்ஸாமி
  • இந்தி
  • வங்காளி
  • குஜராத்தி
  • மராத்தி
  • ஒரியா
  • பஞ்சாபி
  • உருது
  • கொங்கணி
  • நேபாளி
  • மணிப்புரி

இவற்றுடன், சோதனை முயற்சியாக, குழந்தைகளுக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட சில நூல்கள், ஆவோ, காரோ, கோண்டி, காசி, மிசிங், மிஸோ ஆகிய பழங்குடி மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.

தேசிய புத்தக அறக்கட்டளைப் பணிகள்

புத்தக மேம்பாட்டு மையங்கள்

புத்தகங்கள் தடங்கலின்றி எல்லா மாநிலங்களிலும் எப்போதும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சென்னை, ஹைதராபாத், கொச்சி, பாட்னா, கௌஹாத்தி, அகர்தலா, லக்னோ ஆகிய நகரங்களில் தேசிய புத்தக அறக்கட்டளையின் மையங்கள் செயல்படுகின்றன. இந்த மையங்களில் புத்தகங்கள் விற்பனைக்குக் கிடைப்பதுடன், புத்தகம் தொடர்பான நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.

என்.பி.டி. புத்தகப் பண்ணை

புத்தகங்கள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில், தேசிய புத்தக அறக்கட்டளையால் என்.பி.டி. புத்தகப் பண்ணை என்றொரு திட்டம் நிறுவப்பட்டுள்ளது. இதில் 100 ரூபாய் கட்டணம் செலுத்தி உறுப்பினராகி வாங்குகிற புத்தகங்களின் விலையில் தள்ளுபடி அஞ்சல் கட்டணச் சலுகை, பரிசுகள் பெறலாம்.

வெளிநாடுகளில் புத்தகக் காட்சி

தேசிய புத்தக அறக்கட்டளை, பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சிகளில் பங்கேற்று, இந்திய நூல்கள் பலவற்றைப் பிற நாடுகளில் அறிமுகம் செய்கிறது. பல்வேறு இந்தியப் பதிப்பாளர்களின் நூல்கள் தேர்வு செய்யப்பட்டு இக்காட்சிகளில் வைக்கப்படுகின்றன. தெற்காசிய ஆப்பிரிக்க நாடுகளில் நடைபெறும் புத்தகக் காட்சிகளில் சிறப்புக் கவனம் செலுத்தப்படுகிறது.

புத்தக வெளியீடு குறித்த பயிற்சிகள்

தேசிய புத்தக அறக்கட்டளை, புத்தகத் துறையின் மேம்பாட்டுக்காக புத்தகத் தயாரிப்பு, உற்பத்தி, விற்பனை ஆகிய துறை சார்ந்தவர்களுக்காக கருத்தரங்குகளையும், பயிற்சிப்பட்டறைகளையும் நடத்தி வருகிறது. இளைய தலைமுறையினருக்காகப் பதிப்புத்துறை சார்ந்த பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.

புத்தக வெளியீடு பட்டயக் கல்வி

தேசிய புத்தக அறக்கட்டளை கல்கத்தா பல்கலைக்கழகம், தில்லியில் உள்ள அம்பேத்கர் பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து புத்தக வெளியீட்டில் முதுகலைப் பட்டயப் படிப்புக்கான கல்வி வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செயல்படுத்தியுள்ளது.

மின்னூல்கள்

காலமாற்றத்திற்கேற்ப மின்னூல்களையும் தேசிய புத்தக அறக்கட்டளை வெளியிட்டு வருகிறது.

பிற பணிகள்

தேசிய புத்தக அறக்கட்டளையால் சமகால எழுத்துத் தொகுப்புகளை வெளியிடும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்திய இலக்கியங்களை உலகின் பிற மொழிகளில் வெளியிட மொழியாக்க நிதியுதவி வழங்கும் திட்டம் ஒன்று செயல்படுகிறது.

தேசிய புத்தக அறக்கட்டளை பல்வேறு புத்தகக் கண்காட்சிகள், கருத்தரங்குகள், கண்காட்சிகள், பட்டறைகள், இலக்கிய நிகழ்வுகள் போன்றவற்றை ஏற்பாடு செய்து பங்கேற்கிறது. 30 வயதுக்குட்பட்ட இளம் மற்றும் வளரும் எழுத்தாளர்களின் புத்தகங்களை வெளியிடுவதற்காக ’யுவா 2.0’ என்ற திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.

மூலமொழி நூல்கள், மொழிபெயர்ப்புகள், மறுபதிப்புகள் எனப் பல்வேறு முயற்சிகள் மூலம் தேசிய புத்தக அறக்கட்டளை நிறுவனம் புத்தக வளர்ச்சிக்கு உதவி வருகிறது.

உசாத்துணை


✅Finalised Page