under review

தெ.அ. துரையப்பாபிள்ளை

From Tamil Wiki
தெ.அ. துரையப்பாபிள்ளை
தெ.அ. துரையப்பாபிள்ளை (நன்றி: நூலகம்)

தெ.அ. துரையப்பாபிள்ளை (அக்டோபர் 12, 1982 - 1929) ஈழத்து நவீனக் கவிஞர், எழுத்தாளர், நாடக ஆசிரியர், கல்வியியலாளர். ஈழஇலக்கியம் நவீனமயமாதலுக்கு காரமாணவர்களில் ஒருவர். சிறார் பாடல்கள், சமூக சீர்திருத்தம் சார்ந்த பாடல்கள் பல எழுதினார். வட இலங்கைக்கு பழம்பெறும் தனிவரலாறு உண்டு என்பதை வலியுறுத்தியவர். யாழ்ப்பாணம் மகாஜனக் கல்லூரியை நிறுவியவர்.

பிறப்பு, கல்வி

துரையப்பாபிள்ளை இலங்கை யாழ்ப்பாணம், தெல்லிப்பளையில் அருளம்பலம், தங்கம்மா இணையருக்கு அக்டோபர் 12, 1982-ல் பிறந்தார். ஆரம்பக்கல்வியைத் தெல்லிப்பளை ஆங்கில வித்தியாலயத்தில் பயின்றார். மேற்படிப்பை வட்டுக்கோட்டை செமினரியில் (வட்டுக்கோட்டை சர்வசாத்திரக் கல்லூரி) பயின்றார். 1890-ல் கேம்பிரிஜ் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார்.

ஆசிரியப்பணி

துரையப்பாபிள்ளை சிறிதுகாலம் அரச சேவையில் பணியாற்றினார். அதனை துறந்து பாணந்துறை தூய யோவான் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். பம்பாய் மாநிலத்திலுள்ள கோலாலம்பூர் மிஷன் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். இக்காலத்தில் முப்போக்கு சிந்தனைகளின் தாக்கம் பெற்றார். 1900-ல் தெல்லிப்பளை ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் அதிபரானார். 1910-ல் அமெரிக்க மிஷனரிமாருடன் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் தலைமை ஆசிரியர் பதவியைத் துறந்தார். அதே ஆண்டு மகாஜனக் கல்லூரியை ஆரம்பித்தார்.

நாடகம்

துரையப்பாபிள்ளை 'சகலகுண சம்பன்னன்' என்ற ஒரு நாடகத்தை 1905-ல் எழுதி நெறிப்படுத்தி மேடையேற்றினார். இந்த நாடகம் ஆங்கில நாடகமரபைத் தழுவி எழுதப்பட்ட ஒரு ‘ராஜா-ராணி’க்கதையாக அமைந்தபோதும் அதனுடைய மொழிநடையானது யாழ்ப்பாணத்தின் பேச்சுவழக்கு கலந்தது. அவ்வகையில் ஆங்கில நாடக மரபைத் ஈழத்தமிழர் மத்தியில் தமிழ்ச் சூழலுக்கேற்ப அறிமுகப்படுத்தி வைத்த ஒருவராக மதிக்கப்படுகிறார்.

இதழியல்

துரையப்பாபிள்ளை 1921-ல் இந்துசாதனப் பத்திரிகையின் ஆங்கில உதவி ஆசிரியராக நியமிக்கப்பட்டு 1924-ல் பிரதம பத்திரிக்கை ஆசிரியர் ஆனார். இவ்விதழ்களில் கட்டுரைகள் பல எழுதினார்.

இலக்கிய வாழ்க்கை

தெ.அ. துரையப்பாபிள்ளையின் முதல் நூல் ‘கீதரச மஞ்சரி’ 1901-ல் வெளியானது. நவீனக் கவிதைகள் எழுதினார். சமூக சீர்திருத்த சிந்தனைகளை முன்வைத்து பாடல்கள் இயற்றினார். தமது சமகால சமூகம் தொடர்பாகக் கொண்டிருந்த நோக்குகளைப் புலப்படுத்தும் வகையில் 'இதோபதேசக் கீதரச மஞ்சரி', 'யாழ்ப்பாண சுவதேசக் கும்மி', 'எங்கள் தேசநிலை' ஆகிய பாவடிவப் படைப்புகளையும் இயற்றினார்.

தனது வாழ்நாளின் முதற்பகுதியில் கிறிஸ்தவராக இருந்த தெ.அ. துரையப்பாபிள்ளை பின்னர் சைவத்துக்கு மாறினார். 'சிவமணிமாலை'(1927) என்ற பிரபந்தம் இவருடைய சைவசமயச் சார்பை உணர்த்தியது. Jaffna Present and Past (யாழ்ப்பாணம் அன்றும் இன்றும்) என்ற தலைப்பிலான சமூகவரலாற்றுப் பார்வை சார்ந்த ஆங்கிலக்கட்டுரையை Ceylon National Review(Jan 1907) இதழில் தெ.அ. துரையப்பாபில்ளை எழுதினார். யாழ்ப்பாணம், தனக்கெனத் தனித்துவம் வாய்ந்த வரலாறு, பண்பாட்டுப் பாரம்பரியங்கள் அமைந்த தமிழ்த் தேசம் என்ற கருத்தை இதில் முன்வைத்துள்ளார்.

இலக்கிய இடம்

”இவரது இதோபதேசக் கீதரச மஞ்சரி, யாழ்ப்பாண சுவதேசக் கும்மி, எங்கள் தேசநிலை ஆகியன அக்காலகட்டத்தின் ‘நவீனமயமாதல்’ என்ற இயங்குநிலைக்கான முக்கிய சான்றுகள். இவை நோக்கிலும் வெளிப்பாட்டிலும் சமகால சமூகச்சார்பு கொண்டது. சமகால சமூகக்குறைபாடுகளான தனிமனித ஒழுக்கக் கேடுகள், பொய்ம்மைகள் மற்றும் பொருளாசை சார்ந்தனவாகிய கைக்கூலி மற்றும் சீதனமுறைமை ஆகியவற்றை கண்டனத்துக்கு உள்ளாக்குகிறார். மாறாக, இன்சொல் மற்றும் ஈகை முதலான மனிதநேய அம்சங்கள் எடுத்துரைக்கப்படுகின்றன. எளிதில் பொருள்விளங்கிக் கற்பதற்கான இலகுநடையில், குறிப்பாகக் கீர்த்தனை, பதம் மற்றும் கும்மி ஆகிய இசைப்பாடல் வடிவங்களில் எழுதினார்.” என ஈழத்து கல்வியியலாளர்கள் மதிப்பிடுகின்றனர்.

நினைவு

மகாஜனக் கல்லூரியின் பொன்விழாவை ஒட்டி 1960-ல் தெ.அ. துரையப்பாபிள்ளையின் ஆக்கங்கள் தொகுக்கப்பட்டு ’சிந்தனைச் சோலை’ என்ற தலைப்பில் நூலாக்கப்பட்டன. தெ.அ. துரையப்பாபிள்ளையின் நூற்றாண்டு நிறைவின் நினைவாக ’பாவலர் துரையப்பாபிள்ளை நூற்றாண்டுவிழா மலர்’ 1972-ல் வெளியிடப்பட்டது.

மறைவு

தெ.அ. துரையப்பாபிள்ளை 1929-ல் காலமானார்.

நூல் பட்டியல்

நினைவு மலர்
  • சிந்தனைச் சோலை
  • பவளமல்லி
கவிதை
  • கீதரச மஞ்சரி (1901)
  • யாழ்ப்பாண சுவதேசக்கும்மி (1907)
  • எங்கள் தேசநிலை (1917)
  • சிவமணிமாலை (1927)
நாடகம்
  • சகலகுணசம்பன்னன்

உசாத்துணை


✅Finalised Page