under review

தெருக்கூத்து

From Tamil Wiki
தெருக்கூத்து கலைஞர் (நன்றி - சொல்வனம்)

தெருக்கூத்து இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழும் ஒருங்கே இணைந்து நிகழ்த்தப்படும் நிகழ்த்துக்கலை. இதனை ஊரின் முக்கியமான அல்லது மக்கள் அதிகம் கூடும் பகுதியில் மேடை அமைத்தோ அல்லது தெருவிலோ நிகழ்த்துவதால் இப்பெயர் வந்தது. இக்கலை தமிழகத்தில் தென் ஆற்காடு, வடஆற்காடு, செங்கல்பட்டு, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் நிகழ்த்தப்படுகிறது. சேலம், தர்மபுரி மாவட்டங்களிலும் சில பகுதியில் நிகழ்த்தப்ப்படுகிறது. தெருக்கூத்தில் கட்டை கட்டி ஆடுவது அதன் சிறப்புகளுள் ஒன்று. எனவே இதனைக் "கட்டைக்கூத்து" என்றும் அழைப்பர்.

தெருக்கூத்து பிரிவு

வடக்கத்திப் பாணி கூத்து கலைஞர்கள்

தெருக்கூத்தினைத் தெற்கத்திப் பாணி, வடக்கத்திப் பாணி என இருவகையாகப் பகுக்கின்றனர். தென் ஆற்காடு மாவட்டமும், புதுச்சேரி மாநிலமும் தெற்கத்திப் பாணியிலானது. திருவண்ணாமலை, வட ஆற்காடு, செங்கல்பட்டு மாவட்டக் கூத்துகள் வடக்கத்திப் பாணியிலானது. வந்தவாசி, திண்டிவனம் பகுதிகளிலுள்ள குழுக்கள் இரு பாணிகளையும் பின்பற்றிக் கூத்துகள் நிகழ்த்துகின்றன. இவர்கள் தங்கள் பார்வையாளர்களின் விருப்பத்திற்கேற்பப் பாணிகளை அமைத்துக் கொள்வர்.

தென் ஆற்காடு மாவட்டத்தில் ஏறக்குறைய நாற்பது கூத்துக் குழுக்கள் உள்ளன. வடக்கத்திப் பாணியில் முகவீணை என்ற இசைக்கருவி பயன்படுத்தப்படும். தெற்கத்திப் பாணியில் முகவீணை பயன்படுத்துவதில்லை. ஆனால் வந்தவாசி, திண்டிவனம் பகுதிகளில் பார்வையாளர்/குழுவினரின் விருப்பத்திற்கேற்ப முகவீணை இணைத்துக் கொள்வதும் உண்டு. வடக்கத்திப் பாணிக் கூத்தர்கள் விறைப்பான பாவாடைகளை அணிவர்.

தெற்கத்தி மெட்டு, விலாசம் மெட்டு (வடக்கத்தி மெட்டு) என்று இரு வகைகளிருக்கிறது.

ஒரு தெருக்கூத்துக் குழுவில் பதினைந்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள் இருப்பர். தெருக்கூத்துக் குழுவினை "சமா" என்றழைப்பர். குழுவினைத் திரட்டிப் பயிற்சியளித்துத் தலைமை தாங்குபவர் "வாத்தியார்" என்றழைக்கப்படுவார். சமாவிற்குரிய ஒப்பனைப் பொருட்கள் வாத்தியாருக்குச் சொந்தமானவை.

நடைபெறும் முறை

கூத்துக்கலைஞர்கள் மேடையில்

இக்கலை பெரும்பாலும் கோவில் சார்ந்த ஒரு நிகழ்த்துக் கலையாகவே கருதப்படுகிறது. கூத்து நடைபெறுவதற்கு வாத்தியாரை அணுகி முன்பணம் கொடுத்து உறுதி செய்வர். இவ்வாறு உறுதி செய்யும் முறையை "பாக்கு வைத்தல்" அல்லது "தாம்பாளம் வைத்தல்" என்றழைப்பர்.

தெருக்கூத்துக் கலைஞர்கள் கூத்து நிகழ்த்துவதற்காக தங்கள் ஊரில் தங்கும் போது அவர்களுக்குரிய உணவு, மற்ற தேவைகளை ஊர்மக்களே கவனித்துக் கொள்வர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெருவைச் சார்ந்தவர்கள் அதற்குப் பொறுப்பேற்றுக் கொள்வர்.

தெருக்கூத்து நிகழ்ச்சி மூன்று பிரிவுகளாக அமையும். முதல் கட்டத்திற்கு "மேளக்கட்டு" என்று பெயர். கணபதி பூசைக்குப் பின் மேளக்கட்டை தொடங்குவர். கூத்தின் இசைக்குழு ஆதி, அட, ரூபகம், திரிபுடை, ஜம்பை என்ற ஐந்து தாளங்களைக் கொண்டு தொடங்குவர். இதுவே நாடகம் தொடங்குவதை உணர்த்தும் குறியீடு.

நல்லதங்காள் சரித்திரம் அரங்கில்

இரண்டாவது பகுதி முக்கியமான கதாபாத்திரங்கள் அரங்கினுள் நுழைந்து ஆடுதலாகும். இந்தப் பாத்திரங்களுள் சில திரைப் பிரவேசம் செய்யும். சில திரையில்லாமலும் மேடை அரங்கில் நுழையும். ஒவ்வொரு கதாபாத்திரமும் மேடையில் தோன்றும்போது திரைப்பிடித்திருப்பர். இத்திரையை இருவர் கையில் பிடித்துக் கொண்டு வருவர். கூத்தின் பார்வையாளர்களுக்கும், கலைஞர்களுக்கும் மத்தியில் வேறு திரை இருப்பதில்லை. கலைஞர் தம் முன் பிடித்திருக்கும் திரையின் பின் நின்று கொண்டு தாம் ஏற்கப் போகும் கதாபாத்திரத்தின கூறிவிட்டு திரையை விலக்கி பார்வையாளர்கள் முன் தோன்றுவர். பெரும்பாலும் கட்டை கட்டிக் கொண்டு வருபவர்கள் திரையை பயன்படுத்துவர். கிருஷ்ணன் போன்ற கட்டை கட்டாத கதாபாத்திரங்கள் திரை உபயோகிப்பதில்லை. கலைஞர்கள் இத்திரையை பாடி ஆடுவதற்குத் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளவும், பார்வையாளர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தவும், வாத்தியாருக்கு மரியாதை செய்யவும் திரை பிடிக்கப்படுகிறது. திரையோடு நடிகன் உறவாடும் முறை முக்கியமான பங்கு வகிப்பதாகும்.

கூத்தின் கடைசி கட்டமாக பொது வசனம், முடிவுப்பாட்டு, மங்களம் பாடுதலுடன் முடியும். பார்வையாளர்கள் அமர்ந்திருக்கும் இடங்களிலும் கலைஞர்கள் வந்து ஆடுவதும் உண்டு.

(நன்றி மின்னம்பலம்)

இன்றைய நவீன நாடகங்களில் காணப்படும் அரங்க உத்தி தெருக்கூத்தில் யதார்த்தத்துடனும், உணர்வுடனும், முழுமையாக செயல்படுகிறது. மூன்று பக்கமும் அடைக்கப்பட்ட ஒப்பனை அறை, அதன் முன்பகுதியில் உள்ள ஆடுகளம், அதனை அடுத்து பார்வையாளர்கள் அமரும் பகுதி, இவ்விரண்டிற்கும் இடையே விளக்கு தொங்கவிடப்பட்ட தூண் ஆகியவை தெருக்கூத்தின் பொது அமைப்பு முறை. கூத்து நடைபெறும் ஆடுகளத்தை "களரி" என்றழைப்பர்.

கோவில் திருவிழாக்களில் முதல் நாள் கூத்து தொடங்கப் போவதைக் குறிக்கும் வகையில் எல்லா இசைக்கருவிகளையும் ஒருசேர இசைப்பர். இதனைக் "களரி கட்டுதல்" என்பர். களரி கட்டுதலில் இறைவணக்கப் பாடல்களும், கலைஞர்கள் ஒருசேரப் பாடும் இறைப்பாடல்களும், குறிப்பிட்ட தெய்வத்தைப் பற்றி பாடும் பாடல்களும் இடம்பெறும். இதனைத் தொடர்ந்து விநாயகர் துதி ஆரம்பமாகும். அப்போது விநாயகராக ஒரு கலைஞர் வேடமிட்ட ஆடுகளத்தில் வருவார். இந்த விநாயகரை பூஜை செய்ய குருக்கள் வேடத்தில் மற்றொருவர் வருவார். குருக்கள் வரவு குறித்த பாடல் அப்போது பாடப்படும்.

விநாயகர் துதி முடிந்ததும் அவையடக்கப் பாடல்கள் பாடுவர். இப்பாடலை கூத்தை உருவாக்கிய ஆசிரியரோ, தலைவரோ பாடுவார். கதையின் சொற்பொருள் குற்றம் பொறுக்க வேண்டியும், பாடலை இயற்றிய ஆசானின் ஊர் பேர் ஆகியவற்றையும், குழுவின் முகவரியையும் பாடுவார்.

கூத்தின் இறுதி பகுதியில் மங்களம் பாடுதல், வாழி விருத்தம், வசனம் ஆகியன பாடப்படும். இப்பகுதியில் கூத்தை இயற்றியவர், கேட்டவர், பார்த்தவர், ஆடியவர் ஆகியோருக்கு வாழ்த்து கூறுவர். இது பாடல் அல்லது உரைநடையாக அமையும்.

கூத்து பயிற்சி
கூத்து மேடையில்

தெருக்கூத்து நடன அடவுகள் பயிற்சிக் காலத்திலேயே கற்றுக் கொடுக்கப்படுகின்றன. நடனமாடும் திறமையைப் பெற்ற பின்னரே பயிற்சியாளரை ஆட அரங்கினுள் அனுமதிக்கின்றனர். கால்வைப்பு முறைகள், கை முத்திரைகள் மூலம் விளக்குதல், அங்க அசைவுகள், கிறுக்கி சுழலுதல் மூலம் பாத்திரத்தின் தன்மையை வெளிப்படுத்துதல் போன்றவை பயிற்சியின் போது கற்றுக் கொடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஏற்ப நடன அடவுகள் வேறுபடும். பாத்திர அறிமுகம், உணர்ச்சி வெளிப்பாடுகள், பாத்திரத்தின் பண்புகள் ஆகியவை நடன அடவுகளின் மூலம் வெளிப்படுத்தப்படும். பரதநாட்டியத்தின் நாட்டிய முறைகளைத் தெருக்கூத்தின் நடன அடவுகளோடு சில அறிஞர்கள் ஒப்பிட்டுள்ளனர்.

கூத்தாடக் கற்ற பின் ஏதேனும் ஒரு திருவிழாவில் அரங்கேற்றமும் நிகழும். இந்த அரங்கேற்றத்தின் போது அரங்கேற்ற கலைஞர்களுக்கு உறவினர்கள் புதுத் துணி, பணம் போன்றவற்றைப் பரிசாகக் கொடுப்பர்.

கூத்து கலைஞர்கள்

தெருக்கூத்துக் கலைஞர்கள் தொழில் முறை கலைஞர், பயில்முறைக் கலைஞர், இனவழிக் கலைஞர் என மூன்று நிலைகளில் பகுக்கின்றனர்.

தொழில்முறை கலைஞர்கள் முழுநேரக் கூத்தர்களாக விழங்குகின்றனர். கூத்து அல்லாத நேரங்களில் மட்டும் பிறத் தொழில் செய்கின்றனர். பயில்முறைக் கலைஞர்கள் தெருக்கூத்தையும், பிற தொழில்களையும் செய்பவர்கள். இவர்கள் பரம்பரைக் கலைஞர் அல்ல. இனவழிக் கலைஞர்கள் தங்களுடைய ஊர்களில் உள்ள கோவில்களில் மட்டும் கலை நிகழ்த்துபவர்கள். இவர்கள் பெரும்பாலும் பிற ஊர்களில் கலை நிகழ்த்துவதில்லை. இவர்கள் குறிப்பிட்ட விசேஷங்களில் மட்டும் ஆடுபவர்கள்.

கட்டியங்காரன்
கூத்துக் கலைஞர் கட்டியங்காரருடன்

தெருக்கூத்தில் முதலில் அரங்கில் நுழையும் கதாபாத்திரம் "கட்டியங்காரன்" அல்லது "பஃபூன்". விதூடகன், சூத்திரதாரி, காவல்காரன், சபையலங்காரன் என்றும் இப்பாத்திரம் அழைக்கப்படுகிறது. இது கூத்தின் மைய பாத்திரமாகும். கட்டியங்காரன் வேஷம் ஏற்று நடிக்கும் நடிகர் அரசனைப் புகழ்பவர், அரசவை காவலர், தூதர், வேலைக்காரர், கோமாளி, பொது மக்களுள் ஒருவர் எனப் பல கதாப்பாத்திரங்களை தன்னுள் ஏற்று நடிப்பார். கூத்தை தொடங்குவதோடு மட்டுமல்லாமல் காட்சிகளை விளக்கி, கதைகளைத் தெளிவுபடுத்தி, அறிவுரைகள் வழங்கி, மேலும் பல விதத்தில் ஆடுபவர்களுக்கு உதவி செய்து, கால நேரச் சூழல்களை நெறிபடுத்தி, வாழ்த்துக் கூறி கூத்தை முடிப்பது வரை ஆக அனைத்து பணிகளையும் கட்டியங்காரரே செய்வார். இப்பாத்திரம் தெருக்கூத்தின் தனிக் கூறாக இடம்பெறுகிறது என அறிவுநம்பி குறிப்பிடுகிறார்.

தெருக்கூத்து நடைபெற வேண்டிய நேரத்தை கணக்கில் கொண்டு நிகழ்ச்சிகளைச் சுருக்கியும், நீட்டியும் சூழலுக்கு ஏற்றவாறு கட்டியங்காரர் நடத்திச் செல்வார். இந்தக் கதாபாத்திரம் எல்லா தெருக்கூத்திலும் தோன்றும்.

பார்வையாளர்கள்
அர்ச்சுனன் தபசு - மரம் ஏறும் காட்சி

தெருக்கூத்தில் பார்வையாளர்கள் முக்கிய பங்கை வகிக்கின்றனர். கூத்து நடைபெறும் ஊர்க்காரர்களும் அதன் பக்கத்து ஊர்க்காரர்களும் இக்கலையின் பார்வையாளராக அமைவர். இவர்கள் எல்லோரும் முழுத் தெருக்கூத்தையும் பார்ப்பதில்லை. பல பார்வையாளர்கள் பாயுடன் கூத்து நடக்கும் இடத்திற்கு வருவர். உறக்கம் வரும் போது உறங்கி, முக்கியமான கூத்துக் காட்சிகளின் போது விழித்துப் பார்த்துவிட்டு மீண்டும் உறங்குவர். அனைவரும் பார்க்க விரும்பும் காட்சிகள் சில தெருக்கூத்தில் உண்டு அந்நேரத்தில் கட்டியங்காரரே வந்து தண்ணீர் தெளித்து எல்லோரையும் எழுப்பி விடுவார்.

தெருக்கூத்தில் பல நிகழ்ச்சிகளில் மக்களின் பங்கேற்பும் மரபாக உள்ளது. அவை அனைத்தும் சடங்காலானவை. அர்ச்சுனன் தபசு காட்சியில் தபசுமரம் ஏறும் கலைஞரை அர்ச்சுனனாகவே பாவித்துப் பிள்ளை வரம் வேண்டுதல், மாடுபிடி சண்டை, பகாசுரன் ஊர்வலம் வருதல் அரக்குமாளிகை கட்டுவதற்குக் குழந்தைகளைப் பயன்படுத்துதல் ஆகிய நேரங்களில் பார்வையாளர்கள் கூத்தில் ஓர் அங்கமாக பங்கேற்பர். ஊர் முழுவதும் அப்போது ஆடுகளமாகிவிடும்.

கூத்து கதை

Kannan soolchi kadhai.jpg

தெருக்கூத்து ஆசிரியர்களில் பலர் இலவசமாகவே இக்கலையைக் கற்றுத் தருகின்றனர். அவர்கள் சில கூத்துப் பாடல்களை எழுதவும் செய்கின்றனர்.

தெருக்கூத்து நாடகத் தன்மை உடையது என்பதால் இதற்கென்று காட்சி ஜோடனைகளோ, பகுப்புகளோ இல்லாமல் நிகழ்த்தப்படுகிறது. இக்கூத்து கதைகள் குறிப்பிட்ட கால வரையறைக்குள் முடிக்கப்பட வேண்டும் என்னும் நிலையில் உருவாக்கப்பட்டதல்ல.

தெருக்கூத்தின் தொடக்கக் காட்சி முதல் இறுதிவரை கதை சொல்லும் முறை செய்யுள் வடிவிலேயே அமைந்திருக்கும். இசையுடன் பாடப்படும் இப்பாடல்களைக் கதைத் தொடர்புப் பாடல்கள், உதிரிப் பாடல்கள் என வகைப்படுத்தலாம். கதைப்பாடல்களிலும் முந்தைய தலையில் எழுதிவைத்தவை, எழுதியது திருத்தப்பட்டவை, புதிதாக எழுதியவை என மூன்று பிரிவுகள் உள்ளன. பாடல்களை அடுத்து பேசப்படும் வசனம் கலைஞர்கள் தன்னியல்பாக தங்கள் மனநிலை மற்றும் திறமைக்கேற்ப உருவாக்குவர்.

தெருக்கூத்தும் மகாபாரதமும்
தெருக்கூத்தில் கர்ண மோட்சம் நாடகம்

மகாபாரதத்தில் வரும் பல சம்பவங்கள் கூத்துகளுக்கு அடிப்படைக் கதைகளாக அமையும். மாரியம்மன் திருவிழாக்களிலும் பாரதக்கதையைக் கூத்தாக நிகழ்த்துகின்றனர். திரௌபதி அம்மன் கோவில்களில் பாரதத் திருவிழா நடைபெறும்போது பின்வரும் கதைகள் மரபாக நிகழ்த்தப்படுகின்றன.

  1. வில்வளைப்பு அல்லது திரௌபதி கல்யாணம்
  2. சுபத்ரா கல்யாணம்
  3. ராஜசூயயாகம்
  4. திரௌபதி துகில்
  5. அர்ஜீனன் தபசு
  6. குறவஞ்சி
  7. கீசகவதம்
  8. கிருஷ்ணன் தூது
  9. அபிமன்னன் சண்டை
  10. கர்ண மோட்சம்
  11. பதினெட்டாம் போர்

பாரதக் கூத்து நடைபெறும் நாட்களில் மதிய வேளையில் பாரதம் படித்தல் நிகழும். பாரதம் படிப்பதற்கென்றே தனி குழுக்கள் உள்ளன. பெரும்பாலும் வில்லி பாரதமே அதில் இசையுடன் நிகழ்த்தப்படுகிறது. இந்நிகழ்ச்சி கோவில் விழாவில் பிற்பகலில் நடைபெறுகிறது.

பிற கூத்து கதைகள்

இராமர் பட்டாபிஷேகம், மூலபலச் சண்டை, பக்த அனுமன், சீதா கல்யாணம் போன்ற இராமாயணக் கதைகளும். கோவலன் நாடகம், ஒட்ட நாடகம், வீரபாண்டிய கட்டபொம்மன் கதை நாடகம், வன்னியூர் புராணம், ஒளியேற்றம், சேமச் சண்டை, வள்ளி திருமணம், சூர சம்மாரம், நளாயினி கதை ஆகிய கதைகளும் கூத்தில் நிகழ்த்தப்படுகின்றன.

நாவல்ஸ்
Koothu kalanjar.jpg

கூத்துக் கலைஞர்கள் கதைகளுக்கு அப்பால் பல செய்திகளையும் நிகழ்த்துதலின் போது சொல்வர். கூத்து நிகழும் ஊரில் அல்லது அருகில் உள்ள ஊரின் அரசியல் நிகழ்ச்சியை பாடுவது கூத்தின் வழக்கம். பெரும்பாலும் கட்டியங்காரரே இதனைச் செய்வார்.

பல தொண்டு நிறுவனங்களும், அரசு சார்ந்த நிறுவனங்களும் தெருக்கூத்தைப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்துகின்றனர். "கல்லாசூரன் சம்காரம்", "கல்விக்கரசன் பட்டாபிசேகம்", "நோய் அரக்கன் வதை", "மதுவரக்கன் கதை" போன்ற பிரச்சாரக் கதைகள் சமீபகாலமாக இடம்பெறுகின்றன.

"நாவல்ஸ்" என்னும் கூத்துவகை தமிழகத்தின் வடமாவட்டங்களில் வழக்கில் உள்ளது. இது தெருக்கூத்தின் பாதிப்பால் உருவான கலை. தெருக்கூத்து வடிவத்தில், ஆனால் கட்டை கட்டாமல் சமூகப் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு இக்கலை நிகழ்த்தப்படுகிறது.

தற்காலக் கலைவடிவங்களின் உருவாக்கத்தில் தெருக்கூத்து அடிப்படையாக இருந்துள்ளது. சங்கரதாஸ் சுவாமிகள் தமரு நாடகத்தை தெருக்கூத்து முறைகளைப் பின்பற்றியே உருவாக்கினார். அவரது நாடக உத்திமுறைகளும், அவர் உருவாக்கிய நாடகங்களும் ஸ்பெஷல் நாடகமாக உருப்பெற்றன. தமிழ்த் திரைப்படத்தின் தாக்கமும் தெருக்கூத்தினைப் பாதித்துள்ளத் என்பது குறிப்பிடத்தக்கது.

அலங்காரம்

தெருக்கூத்து முக ஒப்பனை (முத்துவெள்ளையுடன் செந்தூரம் கலந்தது)

தெருக்கூத்தில் கட்டை கட்டி ஆடுவர். சில இடங்களில் கட்டை கட்டாமல் மேடை நாடகங்களில் அணியும் "ஜிகினா" ஆடைகளையும் அணிந்துக் கொண்டு ஆடும் வழக்கமும் உள்ளது. கட்டை கட்டிக் கொண்டு ஆடுபவர்கள் அவரது தோள்களில் பெரிய புஜக்கட்டைகள், பெரிய கிரீடம் அல்லது குச்சிமுடி, மரத்தால் செய்யப்பட்ட மார்புப் பட்டை, கன்னக் கதுப்பு ஆகியவற்றை அணிந்திருப்பர். தன் இடுப்பைப் பெரிதாகக் காட்டச் சேலைகளைச் சுற்றிக் கட்டியிருப்பர்.

கலைஞர்கள் ஒப்பனை செய்யும் அறை கூத்து நடக்கும் மேடைக்குப் பின்புறம் இருக்கும். இசைக் கலைஞர்களின் இருக்கைகளுக்குப் பின்புறம் இவ்வறை அமையும். கலைஞர்கள் முதலில் ஒப்பனை செய்யத் தொடங்கும் போது அரிதாரம் பூசுவர். ஒவ்வொரு வேடத்திற்கும் ஏற்றவாறு அரிதாரத்தின் நிறம் வேறுபடும். காளி, சூரன், அரக்கன் ஆகிய வேடங்களுக்கு முத்துவெள்ளையுடன் செந்தூரத்தை எண்ணெயில் குழைத்துப் பூசுவர். பிற வேடங்களின் குணத்திற்கு ஏற்ப செந்தூரத்தின் அளவு குறைக்கப்படும். துரியோதனனுக்குச் சிவப்பும், துச்சாதனனுக்கு மஞ்சள் அல்லது இளஞ்சிவப்பும், பீமனுக்கு மேகவண்ணம் அல்லது கறுப்பும், கிருஷ்ணனுக்குப் பச்சையும், திரௌபதிக்கு இளஞ்சிவப்பும், அர்ச்சுனனுக்கு நீலமும், அர்ச்சுனன் தபசில் நிற்கும் போது வெள்ளை நிறமும் தீட்டுவர். ஒப்பனையில் புருவத்தைச் சுற்றி கறுப்பு வெள்ளைப் புள்ளிகள் வைப்பர்.மீசை பெரிதாக வைத்துக் கட்டப்படும். நெற்றியில் வேடத்திற்குத் தகுந்தாற்போல் நாமம் (ராமம்) அல்லது திருநீற்றுப்பட்டை அல்லது பொட்டு அணிவர். வேடத்திற்கு ஏற்றார் போல் உடையும் அமையும்.

கட்டை கட்டி ஆடும் வேஷக்காரர்கள் கிரீடம் அல்லது சிகரேக், புஜக்கட்டை, மார்புப் பட்டை, கன்னக் கதுப்பு போன்றவற்றைக் கட்டுவர். தலையில் துண்டு கட்டியபின்னரே கிரீடத்தை அணிவர். முத்துச்சரம், அட்டிகை போன்றவற்றையும் அணிந்து கொள்வர். தெருக்கூத்துக் கலைஞர்களின் ஒப்பனையும் தகவல் தொடர்புக்குப் பயன்படுகின்றது.

இசைக்கருவிகள்

தெருக்கூத்து இசைக்கலைஞர்கள்

தெருக்கூத்தில் டோலக் அல்லது மிருதங்கம், தாளம்/சால்ரா, சுதிப்பெட்டி எனப்படும் ஆர்மோனியம் ஆகிய இசைக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. பல குழுக்களில் முகவீணை அல்லது புல்லாங்குழல் இசைக்கப்படுகிறது. வடக்கத்திக் கூத்து மரபில் மட்டுமே முகவீணை பயன்படுத்துகின்றனர். மேடையில் தோன்றும் கலைஞர் பாடும் பாட்டுக்கு இசைக் கருவிகளை இசைப்பவர்கள் உரத்துப் பின்பாட்டுப் பாடுவர்.

நடைபெறும் விழா

பாரத விழா அல்லது திரௌபதி அம்மன் கோவில் விழாக்களில் தீ மிதி உற்சவத்தின் போது தெருக்கூத்து முக்கியமாக இடம்பெறுகிறது. கிராமங்களில் நடைபெறும் மாரியம்மன், அங்காளம்மன் போன்ற ஊர்த் தெய்வங்களுக்கும், விநாயகர், சிவன், திருமால் ஆகிய தெய்வங்களுக்கும் எடுக்கப்படும் விழாக்களிலும் தெருக்கூத்து இடம்பெறும்.

சாவுச் சடங்குகள், காது குத்துதல் போன்று தனியாக எடுக்கப்படும் விழாக்களிலும், திருப்பதிக்குத் திருயாத்திரை சென்று திரும்பும்போதும் தெருக்கூத்து நிகழ்த்தும் வழக்கம் உள்ளது.

மழை வேண்டித் தெய்வ வழிபாடு நிகழ்த்தும் போதும் கூத்துகள் நடத்தப்படுகின்றன. விசித்திரமாக சில வேளைகளில் ஊரிலுள்ள இரண்டு கட்சிக்கு இடையே சண்டை தீர்ந்து சமாதானம் ஆகும் போது கூத்துகள் நடத்தப்படுகின்றன.

ஒரு புதிய கூத்துக்குழு தொடங்கும் போதும், பண்பாட்டுத் திருவிழாக்கள் நடைபெறும் போதும் சடங்குச் சார்பின்றிச் சம்பரதாய கூத்து நிகழ்த்தும் வழக்கம் உண்டு.

நடைபெறும் இடம்

Koothu oppanai.jpg

தெருக்கூத்து கோவிலை அடுத்துள்ள முச்சந்தியிலோ, கோவிலுக்கு அருகிலுள்ள பரந்த திடலிலோ நிகழும்.

நடைபெறும் ஊர்கள்

  • தெற்கத்திப் பாணி - தென் ஆற்காடு மாவட்டமும், புதுச்சேரி
  • வடக்கத்திப் பாணி - திருவண்ணாமலை, வட ஆற்காடு, செங்கல்பட்டு
  • இரு பாணியும் வந்தவாசி, திண்டிவனம் பகுதிகளில் தேவைக்கேற்ப பின்பற்றப்படுகிறது.

நிகழும் மாதம்

தெருக்கூத்து முருகன் கோவில் விழாக்களில் பங்குனி மாதத்திலும், மாரியம்மன், ஓவலம்மன், அய்யம் படையாரி போன்ற அம்மன் கோவில் விழாக்களில் சித்திரை, வைகாசி மாதங்களிலும், காளி, புடையாறு, ஐயநாறு ஆகிய தெய்வங்களின் கோவில்களில் ஆனி, ஆடி மாதங்களிலும் நிகழ்கிறது.

மழை வேண்டி விராட பருவக் கூத்தையும், இறந்தவர்கள் மோட்சம் பெறுவதற்குக் கர்ணமோட்சம் கதையையும் நடத்துகின்றனர். மாசி மாதத்தில் மன்மதன் எரிப்பு நிகழ்ச்சியில் தெருக்கூத்து ஆடுவதும் உண்டு.

உசாத்துணை

  • தமிழக நாட்டார் நிகழ்த்துக் கலைகள் களஞ்சியம் - அ.கா.பெருமாள்

காணொளி


✅Finalised Page