தூப்புகாரி
தூப்புகாரி (2012) மலர்வதி எழுதிய நாவல். தூய்மைப்பணிக்குச் செல்லநேர்ந்த ஒரு பெண்ணின் மகள், மகள்வயிற்றுப் பேர்த்தி என மூன்று தலைமுறையின் கதையைச் சொல்கிறது. 2012-ம் ஆண்டுக்கான கேந்த்ரிய சாகித்ய அகாதெமி இளம்படைப்பாளிகளுக்கு வழங்கும் யுவபுரஸ்கார் விருதைப் பெற்றது.
எழுத்து, பிரசுரம்
மலர்வதியின் இரண்டாவது நாவல் இது. தன்வரலாற்றுத் தன்மை கொண்டது. கணவனால் கைவிடப்பட்ட அவரது அன்னை ஒரு கிறிஸ்தவப்பள்ளியில் துப்புரவுத்தொழிலாளராக வேலைபார்த்தார். அதனால் அவமதிப்புகளுக்கு ஆளானார். அவ்வனுபவங்களை ஒட்டி மலர்வதி இந்நாவலை எழுதினார். இந்நாவலுக்கு 2012-ம் ஆண்டுக்கான கேந்த்ரிய சாகித்ய அகாதெமியின் யுவபுரஸ்கார் விருது வழங்கப்பட்டது.
கதைச்சுருக்கம்
கனகத்தின் கணவர் நோய்வாய்ப்பட்டு இறக்க நாடார் சமூகத்தைச் சேர்ந்த அவள் தன் மகள் பூவரசியைக் காப்பாற்றுவதற்காக துப்புரவுத் தொழிலுக்குச் செல்கிறார். துப்புரவுத்தொழிலாளர் (தூப்புகாரி) என அனைவராலும் ஒதுக்கப்பட்ட கனகம் நோய்வாய்ப்பட்டு இறந்து விடுகிறார். பூவரசியும் தனியாக விடப்பட அவளும் துப்புரவுத்தொழிலுக்கே செல்லநேர்கிறது. ஜாதிக்காரனான ஒரு பணக்கார பையனுடன் காதல் மலர அவன் அவளை கருவுறச்செய்துவிட்டு வீட்டில் பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான். தனித்து விடப்பட்ட பூவரசியை சக்கிலியனான மாரி தன் மனைவியாக ஏற்றுக்கொள்கிறான். மாரியும் ஒரு விபத்தில் இறக்க தன் பெண் குழந்தையுடன் அதே துப்புரவுத்தொழிலுக்கு பூவரசியின் மகளும் உடன்செல்லவேண்டிய நிலைமை உருவாகிறது.
இலக்கிய இடம்
யுவபுரஸ்கார் விருதை பெற்றதனால் கவனிக்கப்பட்ட இந்நாவல் அடித்தளத்து வாழ்க்கையை மெய்யான வலியுடன் சொன்னமைக்காக விமர்சகர்களால் குறிப்பிடப்படுகிறது.
உசாத்துணை
- மலர்வதியின் "தூப்புக்காரி"
- நூல் அறிமுகம் : தூப்புக்காரி || மலர்வதி || சு.கருப்பையா | வினவு
- நான் சாகித்திய அகடமி விருது பெற்றேன்! | I received the Sahitya Academy Award! - Dinakaran
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:35:24 IST