under review

துவான் மீ தோட்டத் தமிழ்ப்பள்ளி

From Tamil Wiki
பள்ளிச் சின்னம்

தேசிய வகை துவான் மீ தோட்டத் தமிழ்ப்பள்ளி மலேசியாவில் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள கோல சிலாங்கூர் மாவட்டத்தின் மிகப் பழமையான பள்ளிகளில் ஒன்று.

வரலாறு

துவான் மீ தோட்டத் தமிழ்ப்பள்ளி 1919-ம் ஆண்டு நிறுவப்பட்டது. துவான் மீ தோட்ட நிர்வாகத்தினரால் அமைக்கப்பட்ட இப்பள்ளியைத் தோட்ட நிர்வாகத்தினர் நிர்வகித்து வந்தனர். துவான் மீ தோட்டத் தமிழ்ப்பள்ளியை அவ்வப்போது கல்வி அதிகாரிகளும் சஞ்சித்துரை எனும் இந்தியர்களின் பாதுகாப்பு அதிகாரிகளும் கண்காணித்து வந்தனர். இப்பள்ளியில் மெல்ல மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியவுடன் பள்ளியின் கட்டிட அமைப்பிலும் மாற்றம் ஏற்படத் தொடங்கியது.

ஆசிரியர்கள்

ஆசிரியர்களும் மாணவர்களும் (1965)

தொடக்கக்காலத்தில் துவான் மீ தோட்டத் தமிழ்ப்பள்ளியில் ஓரளவு தமிழ்க் கல்வியறிவுள்ள கங்காணிமார்கள் பகுதி நேர ஆசிரியராகப் பணியாற்றினர். பின்னர் 1933 தொடங்கி முழு நேர ஆசிரியர்கள் இப்பள்ளியில் பணி புரிய தோட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்தது. தமிழ்நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட ஆசிரியர் கனகசுந்தரம், 1933 முதல் 1936 வரை துவான் மீ தோட்டத் தமிழ்ப்பள்ளியின் முதலாவது முழு நேர ஆசிரியராகப் பணியாற்றினார். 1937-ல் தமிழ்நாட்டிலிருந்து வந்த ஆசிரியர் பெரியண்ணன், இப்பள்ளியின் முழு நேர முதலாவது தலைமையாசிரியராகப் பணியாற்றினார். 1961-ல் மலாய், ஆங்கில ஆசிரியர்களைத் தவிர்த்து, மாணவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்தது.

கட்டிடம்

பள்ளி நிறுவப்பட்டபோது சுமார் 20 மாணவர்கள் பயிலும் இட வசதி கொண்ட அத்தாப்புக் கொட்டகையில் அமைந்திருந்தது. பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் 1933-ம் ஆண்டு இப்பள்ளி சுமார் 40 மாணவர்கள் பயிலும் இட வசதியுள்ள பள்ளியாக விரிவாக்கம் கண்டது. பின்னர், 1952-ம் ஆண்டு துவான் மீ தோட்டத் தமிழ்ப்பள்ளி 60 மாணவர்கள் பயிலும் இட வசதியுடையப் பள்ளியாக விரிவாக்கப்பட்டது. பள்ளியின் அத்தாப்புக் கூரை(ஓலைக் கூரை) தகரக் கூரையாக மாற்றியமைக்கப்பட்டது.

Photo1703737077.jpg

மாணவர்களின் எண்ணிக்கையில் உயர்வு கண்ட துவான் மீ தமிழ்ப்பள்ளிக்கு 1967--ம் ஆண்டு தோட்ட நிர்வாகமான KL KEPONG BHD பள்ளிக்கு அருகில் இருந்த 2.62 ஏக்கர் மேட்டு நிலத்தைப் பள்ளிக்கு மாற்று இடமாகக் கொடுத்தது. கல்வி அமைச்சு, கல்வி இலாகா ஆகியவற்றின் துணையுடன் 1982-ம் ஆண்டு இரண்டு மாடிக் கொண்ட ஒரு புதிய பள்ளிக் கட்டிடம் கட்டப்பட்டு 1983-ம் திறப்பு விழா கண்டது. சுமார் ஐந்து ஆண்டுகள் துவான் மீ தோட்டத் தமிழ்ப்பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றிய ஆசிரியர் ஐ. மு. மாரியப்பன் பள்ளிக்கு இரண்டு மாடிக் கட்டிடத்தை கட்டும் நடவடிக்கையில் தொடர் முயற்சி செய்து வெற்றி கண்டார்.

புதிய கட்டிடத்தில் பள்ளிக்குத் தேவையான வசதிகள் ஓரளவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாலும் அறிவியல் வசதிகள் அமைந்திருப்பதாலும், பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு கண்டது. பள்ளியில் தொடர்ந்து மாணவர்கள் எண்ணிக்கை உயர்வு கண்ட நிலையில் இருந்ததால், பள்ளியில் போதிய வகுப்பறை இல்லாமல் சிக்கல் உண்டாகியது. இந்தச் சிக்கலைக் களைய 1983-ம் ஆண்டுக்குப் பிறகு தலைமையாசிரியராகப் பணியாற்றிய ஆசிரியர் எஸ்.பழனியப்பன் பள்ளி நிர்வாகத்தோடு இணைந்து பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் துணையோடு பள்ளியில் 1986-ம் ஆண்டு 2 வகுப்பறைகளைக் கொண்ட ஓர் இணைக் கட்டிடம் கட்டப்பட்டது.2008-ம் ஆண்டு பாலர் வகுப்புக்கான கட்டிடம் கட்டப்பட்டது.

மாணவர் எண்ணிக்கை

Photo1703737077 (2).jpg

தொடக்கத்தில் மாணவர்களின் எண்ணிக்கையில் உயர்வு கண்டு வந்த துவான் மீ தோட்டத் தமிழ்ப்பள்ளியில் 2004 முதல் 2006 வரையான காலகட்டத்தில் துவான் மீ தோட்டத்தைவிட்டு ஈஜோக், சுங்கை பூலோ போன்ற பட்டணத்திற்குப் பெற்றோர்கள் குடிபெயர்ந்ததால் பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் பொருட்டு பள்ளி நிர்வாகமும் பெற்றோர் ஆசிரியர் சங்கமும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் தொடர் நடவடிக்கையாகப் பள்ளிக்கு அருகில் உள்ள கலிடோனியன் தோட்டம், புஞ்சாக் ஆலாம், கோத்தா புத்திரி போன்ற இடங்களில் வசிக்கும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் இப்பள்ளியில் கல்விகற்கும் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

இன்றைய நிலை

தொடக்கக்காலத்தைக் காட்டிலும் குறைவான மாணவர்கள் துவான் மீ தோட்டத்தில் பயின்று வந்தாலும், துவான் மீ தோட்டத் தமிழ்ப்பள்ளி இன்றும் இயங்கி வருகின்றது.

உசாத்துணை

  • க. முருகன், சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகள் (2015).
  • மலேசியாவில் 200 ஆண்டுகள் தமிழ்க்கல்வியின் மேம்புகழ் (2016).


✅Finalised Page