under review

துறைகாட்டும் வள்ளலார் கோயில்

From Tamil Wiki
துறைகாட்டும் வள்ளலார் கோயில்
துறைகாட்டும் வள்ளலார் கோயில்

துறைகாட்டும் வள்ளலார் கோயில் (உச்சிரவனேஸ்வரர் கோயில்) (வஜ்ரவனேஸ்வரர்) மயிலாடுதுறை திருவிளநகரில் அமைந்த தேவாரப் பாடல் பெற்ற தலம். இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. தருமபுரம் ஆதீனத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள இருபத்தியேழு கோயில்களில் இதுவும் ஒன்று.

இடம்

துறைகாட்டும் வள்ளலார் கோயில் நாகப்பட்டினம் மாவட்டம் திருவிளநகரில் உள்ளது. செம்பனார் கோயில் வழித்தடத்தில் மயிலாடுதுறையிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

பெயர்க்காரணம்

பண்டைய காலங்களில் இந்தப் பகுதி புல் வகையைச் சேர்ந்த விழல் செடிகளால் அடர்த்தியாக மூடப்பட்டிருந்ததால் ’விழர் நகர்’ என்று அழைக்கப்பட்டது. இது பின்னர் விளநகர் என திரிந்தது. இக்கோயிலின் இறைவன் 'ஸ்ரீ விளார்கட்டு நாதர்' என்றும் அழைக்கப்பட்டார்.

துறைகாட்டும் வள்ளலார் கோயில்

தொன்மம்

  • அருள்விதன் என்ற பிராமணச் சிறுவன் இங்கு இறைவனை வழிபட்டு வந்தான். தினமும் தவறாமல் பூக்களைக் கொண்டு வருவா. அவன் கோயிலுக்குச் செல்ல காவிரி ஆற்றைக் கடக்க வேண்டும். ஒரு நாள் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது. ஆனாலும் ஆற்றைக் கடக்க முற்பட்டு வெள்ளத்தில் சிக்கினான். உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிப்பதற்கு பதிலாக இறைவனின் பூஜைக்காக கொண்டு வந்த பூக்களைக் காப்பாற்ற முயன்றான். சிவன் அவனைக் காப்பாற்றினார். எனவே இங்குள்ள இறைவன் 'துறைகாட்டும் வள்ளல்' என்று அழைக்கப்பட்டார்.
  • திருஞான சம்பந்தர் கடைமுடி, மயிலாடுதுறைக்கு யாத்திரை சென்றபோது, காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மேற்கொண்டு செல்ல முடியவில்லை. ஆற்றைக் கடக்க சிவபெருமான் வேட்டைக்காரன் வேடத்தில் வந்து உதவியதாக நம்பிக்கை உள்ளது.
  • கபிதன் என்ற அரக்கன் இக்கோயிலின் இறைவனை வணங்கி, பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்றான் என்ற நம்பிக்கை உள்ளது.
துறைகாட்டும் வள்ளலார் கோயில்

கோயில் பற்றி

  • மூலவர்: துறைகாட்டும் வள்ளலார், உச்சிரவனேஸ்வரர்
  • அம்பாள்: துறை காட்டும் வள்ளி, வேயுறு தோளி அம்மன்
  • தீர்த்தம்: காவிரி ஆறு, மெய்ஞான தீர்த்தம்
  • ஸ்தல விருட்சம்: விழல் செடிகள்
  • பதிகம் பாடியவர்: திருஞான சம்பந்தர்
  • சோழ நாட்டில் காவிரி ஆற்றின் தென்கரையில் உள்ள 276 தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் இதுவும் ஒன்று
  • நாற்பதாவது சிவஸ்தலம்.
  • கடைசியாக கும்பாபிஷேகம் பிப்ரவரி 2, 1959 அன்று நடந்தது.
  • காமிக ஆகமத்தின்படி பூஜை நடக்கிறது
  • கோவில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பிரதான கோபுரம் மற்றும் கருவறையில் உள்ள கோபுரங்கள் சிதிலமடைந்து, ஏராளமான களைகள் மற்றும் செடிகளால் மூடப்பட்டுள்ளன. சுற்றுச்சுவர் மற்றும் கோவில்கள் கூட பாழடைந்த நிலையில் உள்ளது.

கோயில் அமைப்பு

கிழக்கு நோக்கிய இக்கோயிலில் ஐந்து நிலைகள் கொண்ட ராஜகோபுரம், இரண்டு பிரகாரங்கள் உள்ளன. ராஜகோபுரத்தை அடுத்து பலிபீடம், நந்தி, ஆஸ்தான மண்டபம் அமைந்துள்ளது. இக்கோயிலில் உள்ள சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி உள்ளார். மகாமண்டபத்தின் வடப்புறத்தில் தென்புறம் நோக்கி அம்மன் காட்சியளிக்கிறார்.

ஸ்தல விருட்சம்: விழல் செடி

சிற்பங்கள்

வேயுரு தோளி அம்மன் ஒரு கையில் வட்டு, மற்றொரு கையில் சங்கு ஏந்தியவாறு உள்ளார். சிவன், பார்வதி தேவி சன்னதிகளைத் தவிர, விநாயகர், முருகன், நடராஜர், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, அருணாசலேஸ்வரர், சோமாஸ்கந்தர், கஜலட்சுமி, துர்க்கை, சனீஸ்வரர், நவகிரகம், சூரியன், சந்திரன், நால்வர், பைரவர் ஆகியோரின் சன்னதிகளும், சிலைகளும் உள்ளன.

சிறப்புகள்

  • திருஞானசம்பந்தர் இறைவன் ஆற்றைக் கடக்க உதவிய சம்பவத்தைப் பற்றிக் குறிப்பிட்டு ’காவிரி துறை காட்டினார்’ என்று பாடினார்.
  • இங்குள்ள இறைவனை வழிபட்டால் தங்களின் பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்றும் மீண்டும் மீண்டும் வரும் பிறப்பு மற்றும் மறுபிறப்பு சுழற்சியில் இருந்து பக்தர்கள் விடுபடுவார்கள் என்றும் நம்பப்படுகிறது.
  • பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைகள் கேட்கப்படும் என்ற நம்பிக்கையில் இக்கோயிலின் ஸ்தல விருட்சச் செடியின் இலைகளில் முடிச்சுப் போடும் நம்பிக்கை உள்ளது.

கோயில் திறந்திருக்கும் நேரம்

  • காலை 7-12 மணி வரை
  • மாலை 5.30 - 8 மணி வரை

விழாக்கள்

  • ஆவணியில் விநாயகர் சதுர்த்தி
  • புரட்டாசியில் நவராத்திரி
  • ஐப்பசியில் அன்னாபிஷேகம்.
  • தை மகர சங்கராந்தி
  • மாசியில் மகா சிவராத்திரி
  • பிரதோஷம் தொடர்ந்து அனுசரிக்கப்படுகிறது

உசாத்துணை


✅Finalised Page