under review

துரை. மணிகண்டன்

From Tamil Wiki
துரை. மணிகண்டன்

துரை. மணிகண்டன் (பிறப்பு: 1973) எழுத்தாளர், கணினித்தமிழ் ஆய்வாளர். கணினித்தமிழ் சார்ந்த நூல்கள் எழுதினார்.

வாழ்க்கைக் குறிப்பு

துரை. மணிகண்டன் தஞ்சை மாவட்டம் கச்சமங்கலத்தில் துரைக்கண்ணு முத்துராஜா, சவுந்தரவள்ளி பாண்டுரார் இணையருக்கு 1973-ல் பிறந்தார். பள்ளிப்படிப்பை கச்சமங்கலம் அரசுபள்ளியில் பயின்றார். மேலநிலைக் கல்வியைத் திருக்காட்டுப்பள்ளி சர். சிவசாமி அய்யர் மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். திருச்சிராப்பள்ளித் தூயவளனார் கல்லூரியில் இளங்கலை, முதுகலை, ஆய்வியல் நிறைஞர் பட்டங்கள் பெற்றார். 2007-ல் தேசியக்கல்லூரியில் "இராஜம் கிருஷ்ணன் புதினங்களில் மனித உரிமைச் சிந்தனைகள்" என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றார்.

ஆசிரியப்பணி

துரை. மணிகண்டன் பத்து ஆண்டுகள் கல்லூரியில் தமிழ் உதவிப்பேராசிரியராகப் பணியாற்றினார். ஆகஸ்ட் 2009 முதல் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றினார். பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்ட நெறியாளராக இருந்து இவரின் வழிகாட்டுதலில் பதினைந்து மாணவர்கள் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றனர்.

அமைப்புப் பணி

  • பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறையின் சார்பாக' தமிழ்க்கணினி இணையப் பயன்பாடுகள்' என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடத்தினார்.
  • செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறையும் இணைந்து “மின் ஊடகங்களில் சங்க இலக்கியச் சொல்லடைவுகள்” என்ற தலைப்பில் தேசியக் கருத்தரங்கம் நடத்தினார்.
  • உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம்(உத்தமம்) சிங்கப்பூர் சிம் பல்கலைக்கழகம் நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கில் கலந்து கொண்டு 'தமிழ் வளர்ச்சியில் வலைப்பூக்களின் பங்களிப்பு' என்ற தலைப்பிலும் தமிழ் வலைப்பூக்கள் உருவாக்குதல் என்ற தலைப்பில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கினார்.

தமிழ் கணிணிக்கு செய்த பங்களிப்புகள்

துரை மணிகண்டன் தமிழ் இணையம் என்ற தலைப்பில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உரைகள் நிகழ்த்தினார். கணினித்தமிழ் சார்ந்த நான்கு நூல்கள் எழுதினார். 'இணையமும் தமிழும்' என்ற நூல் திருச்சிராப்பள்ளி ஈ.வெ. ராமசாமி அரசு கலைக் கல்லூரியில் பாடமாக வைக்கப்பட்டது. 2010-ல் கோயம்புத்தூரில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன் இணைந்து நடத்தப்பட்ட தமிழ் இணைய மாநாட்டில் இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் எனும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரை வாசித்தார்.

விருது

  • 2010-ல் இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் என்ற நூலுக்குத் திருச்சிராப்பள்ளி, முத்தமிழ்க் கலைப் பண்பாட்டு மையம் வழங்கும் படைப்பியல் பட்டயம் சான்றிதழ் வழங்கப்பட்டது.

நூல்கள்

  • இணையமும் தமிழும்
  • இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
  • இணையத்தில் தமிழ்த் தரவுத்தளங்கள்
  • கணிப்பொறியும் இணையத்தமிழ வரலாறும்
  • தமிழ்க்கணினி இணையப்பயன்பாடுகள்
  • ஒப்பிலக்கியப் படைப்பும் திறனாய்வும்
  • ஊடகவியல்
  • இலக்கிய இன்பம்
  • மனித உரிமைச் சிந்தனைகள்
  • இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் இணையவழிக் கல்வி

உசாத்துணை

இணைப்புகள்


✅Finalised Page